எண்ணம். வசந்தம். மாற்றம்.

இப்படிச் சொல்வதற்கு வெலி சொலி..

தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் பிழை என்ற மெய்யான (மெய்யாகவே இது மெய்தான்!!!) உண்மையைச் சொல்லி விடயத்தை ஆரம்பம் செய்கிறேன். காலங்கள் என்பது மிகவும் வேகமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. வரலாறுகள் நாளாந்தம் திரும்பிப் பார்க்கப் படுகிறது. அதுமட்டுமா, வரலாறுகள் நாளாந்தம் உருவாக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.

வரலாறுகள் என்றவுடனே நான் ஏதும் புராதன தொல் பொருள்களைப் பற்றிக் கதைக்கப் போகிறேன் என நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. உண்மையில் இவ்வளவு பில்ட் அப் எதற்காக என்று நீங்கள் கேட்கிறீர்களா? நான் இப்போது உங்களோடு கதைக்கப் போவது ஒரு உயிர்ப்பான விடயம் பற்றியதாகும்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியானது, கருவிக் கையாட்சியினாலும் மொழிப் பயன்பாட்டினாலும் எய்தப் பெற்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். கருவிகளின் கையாட்சி என்பது இன்னொரு அதிகமாக இன்னொரு பெளதீக பொருளின் இணைப்பால் பெறப்பட்டதாகவே இருக்கும். ஆனால், மொழிப்பயன்பாடு என்பது உயிர்ப்பானது, உணர்வுகளை பகிர்வதற்கு துணையாக நிற்பது.

சைகைகளின் மூலங்களிலிருந்தே மொழிகள் தோன்றியிருக்கின்றன. மொழிகள் எப்போதும் அறிவிப்பாளனின் எண்ணங்களை கேட்பவர்களின் பக்கம் மிக விரைவாக வழங்கும் தன்மை வாய்ந்தன. மனிதனால் எழுதப்படும், பேசப்படும் அல்லது சைகை செய்யப்படும் மொழிகள் யாவும் “இயற்கை மொழி” என்ற விசேட பதம் கொண்டு இனங்காணப்படுகின்றன.

மொழிகள் பற்றியும், அதன் தோற்றம் பற்றியும் பந்தி பந்தியாக வரலாற்று விடயதானங்களை இங்கே குவித்துக் கொண்டு செல்லலாம். அவ்வாறு செய்ய எனக்கு ஆர்வமில்லை. மொழிகளை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து பார்க்கலாமென நினைக்கிறேன்.

“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடிகளின் மொழி” – தமிழ் என்று தமிழின் தொன்மை பற்றி அறிந்திருப்பீர்கள். தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இதில் 12 எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் ஆகும். (இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?? நீங்க ஒரு பதிவிட்டு இதனைச் சொல்லணுமா?? 😆 )

மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம் என்ற நிலை இருக்கிறதோ இல்லையோ, தனது தாய் மொழியைக் கதைப்பதில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சி இருக்கிறதே சொல்லி மாளாது. என்னதான் பிறமொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தாய் மொழியினால் கதைக்கின்ற போது, அங்கு தெளிவும் இருக்கும். நம்பிக்கையும் பிறக்கும். திருப்தி கிடைக்கும்.

நாம் பிறமொழிகளில் கொண்டுள்ள ஆர்வம் கொஞ்சம் நஞ்சமல்ல.. தனது பிள்ளை தமிழை “தமில்” என்று உச்சரிப்பதைக் கண்டு திருத்தாதவர்கள், ஆங்கிலத்தில் இலக்கணப்பிழை இன்றி கதைப்பதற்கு சி்ன்னப் பிஞ்சுக் குழந்தையை வற்புறுத்தும் நிலையைக் காணும் போது எனக்குள்ளேயே நான் சிரித்துக் கொள்வதுண்டு. கவலையும் வராமலில்லை. இவ்வாறான பலரை நான் நிஜமாகவே கண்டிருக்கிறேன். வற்புறுத்தி கற்பிப்பதால் மொழி என்ன… எந்தவித அறிவும் எம்மோடு குடிகொள்ளாது. மொழி மீதான ஆர்வம், ஆசை என்பனவே மொழியை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை எமக்குள் பெருகச் செய்யும். ஆர்வமும் ஆசையும் மட்டுமே காணப்பட்டாலும் போதாது, அதற்கான சூழலும் காணப்பட வேண்டியது அவசியமாகும்.

தனது உறவினரின் பிள்ளை ஆங்கிலத்தில் கதைப்பதாகச் சொல்லி பெருமையடையும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் ஆங்கிலத்தை மொழியாகக் காணவி்ல்லை. ஏதோவொரு உளியாகக் காண்கிறார்களோ? என நான் நினைப்பதுண்டு.

சிறுபிள்ளை தமிழில் ஒரு சொல்லை உச்சரித்தால் அது பெருமிதம் அடைய வேண்டிய ஒரு நிகழ்வு. ஆங்கிலமும் தமிழ் போன்றதொரு இன்னொரு மொழிதான். ஆங்கிலத்திற்கு ஆங்கிலேயர் கொடுக்கும் பிரச்சாரத்தை விட நாம் தான் பிரச்சாரத்தில் பிரதம நிலையில் இருக்கின்றோமோ???

மொழிகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வங் காட்ட பிள்ளைகளைப் பழக்க வேண்டியது கட்டாயமானதே, ஆனால், தாய் மொழியென்றால் என்னவென்றே தெரியாது, Hai… How are you? What’s your name? என விரியும் கேள்விக் கணைகளுக்குள் பிள்ளைகளை மாட்டி விட்டு தவிக்கக் தவிக்க பார்த்துக் கொண்டிருப்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

என்ன உதய தாரகை! English இற்கு எதிராக இப்படி கதைக்கிறீங்க..? என்றா கேட்கிறீர்கள். நான் எந்த மொழிக்கும் எதிராகக் கதைக்கவில்லை. மொழிகளை நாம் பார்க்கும் கோணம் பிழையென்றே சொல்கிறேன்.

“முற்றத்து மல்லிகை மணக்காது” என்ற கூற்றை ஞாபகப்படுத்துமாய்ப் போலவே, ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பால் தமிழின் மீது அரிதாகியுள்ள பார்வையை இனங்கண்டு கொள்ள முடிகிறது.

இப்படி இரு மொழிகள் இருக்க பல மொழிகள் பூமியிலிருந்தே தொலைந்த போகும் அபாயம் தோன்றியுள்ளது கவலைக்கிடமான செய்தியே!

ஒவ்வொரு 14 நாட்களுக்கும் (இதை இரண்டு கிழமை என்று சொன்னா எங்களுக்கு விளங்க மாட்டதா என்ன??? நீங்க ரொம்ப ஓவரு…??) தலா ஒரு மொழி உலகிலிருந்து மறைந்து போகி்ன்றது. உலகளவில் பாவனையிலிருக்கும் 7000 இற்குமதிகமான மொழிகளில் அரைவாசியளவான மொழிகள் 2100 ஆம் ஆண்டளவில் புவியிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ளது. (விலங்குகள் பல தனது இனத்தோடு எதுவித எச்சமுமில்லாமல் அழிந்து போவதை கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன? மொழிகளும் அழிகிறதா? ரொம்பக் கொடுமையாய் இருக்கே!! 🙂 )

மொழிகள் அழி்ந்து போனால் நமக்கென்ன என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள்? என்று எனக்குத் தெரியும். மொழி ஒரு கலாசாரத்தின் பிரதிநிதி – வரையறுத்துச் சொல்லக்கூடிய கலாசாரக் கூறு. இவ்வாறு அழிவை எதிர்நோக்கும் மொழிகள் சிறப்புமிக்க கலாசார நிலைகளைக் கொண்டுள்ளன. கதைகள், கவிதைகள், பாடல்கள் மற்றும் வரலாறுகளை தன்னகம் கொண்ட நிலையிலுள்ள இம்மொழிகள் அழிந்து போகும் போது, முழு கலாசாரமுமே அழிவை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாது.

வெவ்வேறு வகையான மொழிகளை கற்றறியும் போது, எவ்வாறு மனிதன் அறிவை சேமித்த வைத்து தொடர்பாடலுக்குப் பயன்படுத்தினான் என்ற தெளிவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு மொழி உலகிலிருந்து அழிகையில், நாமும் எமது மூளையின் செயற்பாட்டுப் பகுதியொன்றை வெற்றிடமாக்கி இழக்கின்றோம் என்றே உணர வேண்டியுள்ளது.

மொழிகள் மடிவதற்கு அம்மொழிகளைக் கையாளும் மனிதர்களின் அளவும் ஆதிக்கம் செலுத்தும். மனித நாகரீக வரலாற்றில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்பட்ட மொழிகள் பிழைத்து நிற்க, ஒரு சிறிய குழுவால் தொடரப்பட்ட மொழி மாய்ந்து மறைந்த கதைகள் ஏராளம் உள்ளன.

மொழிகள் மறைதல் என்பது நிராசையாகத் தோன்றாது. அதனைப் பயன்படுத்துபவர்களின் ஆர்வம், தேவை என்பன மொழி சார்பாகக் குறையும் போதே புவியில் நின்றும் மறைந்து போவதற்கு வாய்ப்புள்ளது.

மொழி என்னும் போது, பல நகைச்சுவைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு தடவை வகுப்பொன்றில் பாடமெடுத்துக் கொண்டிருக்கும், விஞ்ஞான ஆசிரியர் ஒரு மாணவனைப் பார்த்து “நீரின் இரசாயனக் குறியீடு என்ன?” என்று கேட்பார்.

இதனைக் கேட்ட மாணவனோ, “H I J K L M N O” எனச் சொல்லுவான்.

என்னது… ம்… என்டு இருக்கிறீங்க.. கொஞ்சம் சிரியுங்களேன்… 😆 (ஜோக் சொன்னால் தானே சிரிப்பதற்கு என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன்…)

அண்மையில் தாய்லாந்திற்கு போய் வந்த எனது உறவினர் ஒருவரை நான் சந்தித்த போது, அவர் தனது பிரயாண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அனைத்தும் சுவாரஸியமாக இருந்தன. தாய்லாந்தில் கதைக்கும் மொழி தாய் மொழியாகும் (Thai Language என்பதையே தாய் மொழி என்கிறேன். மொழி இங்கே வில்லங்கத்தை காட்டுகிறதோ?? 😆 ). இந்த மொழியில் ஆம் என்று சொல்ல “மாய்” என்பார்களாம். அதுமட்டுமா இல்லை என்று சொல்ல “ஷாய்” என்று சொல்வார்களாம்.

தாய்லாந்தில் அநேகமானவர்களுக்கு தாய் மொழியைத் தவிர ஏனைய மொழிகள் எதுவுமே தெரியாதாம். Thai மொழியில் “கொப் குன் கா” என்றால் நன்றி என்று பொருளாம்.

தாய்லாந்தில் ஆங்கிலம் கதைக்கத் தெரிந்தவர்கள் யாவரும் ஆறைத் தொலைத்தவர்களாம். ஆறைத் தொலைத்தவர்களா? அது என்னது என்றல்லவா கேட்கிறீர்கள்? ஆங்கில எழுத்தான R என்பதை உச்சரிக்க மறந்தவர்களாம் அவர்கள்.

அவர்கள் ஆங்கிலத்தில் சொற்களை உச்சரிக்கும் நிலையில் R என்ற எழுத்தை L என்ற எழுத்தால் பிரதியிட்டே பேசுவார்களாம்.

Very Sorry என்பதை அவர்கள் “வெலி சொலி” என்பார்களாம். அப்போது.. tomorrow என்பதை எவ்வாறு உச்சரிப்பார்கள் என உச்சரித்துப் பாருங்கள்…

மொழிகள் பலவற்றையும் கற்றறிந்து அவற்றோடு இணைந்த கலாசார பின்னணியையும் அறிந்து கொள்ளுதல் விவேகமான முன்னெடுப்பு. ஆனால், தாய் மொழி (இங்கென்றால் இது தாய் மொழிதான். Thai மொழியல்ல.. 😳 ) மறந்த நிலையில் ஏனைய மொழிகளில் அதிக நாட்டம் காட்டுவது பொருத்தமற்றது.

மொழிகளைக் கற்றுக் கொள்வது நாம் பெற்றுள்ள கொடை, எமக்கு எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனை மொழிகளையும் ஈடுபாடு, ஆர்வமிருந்தால் கற்றுக் கொள்ள முடியும் என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் மொழிகளைக் கற்றுக் கொள்வது தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்? என மறுமொழியாகச் சொல்லுங்கள்.

– உதய தாரகை

“இப்படிச் சொல்வதற்கு வெலி சொலி..” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Nytryk Avatar
    Nytryk

    That’s Right 🙂

  2. றம்ஸி Avatar
    றம்ஸி

    உண்மைதான் உதய தாரகை. தமிழும் அதன் ஆயுளின் அரைவாசியை இழந்துவிட்டது. பண்டைய தமிழ் இலக்கியங்களில் கையாண்டிருக்கும் சொற்களுக்கு, எம்மில் எத்தனை பேருக்கு பொருள் விளக்கம் தெரியும்?

    தமிழனின் மேற்குலக கலாச்சார நாட்டம் இப்படியே தொடருமானால், ஒரு செம்மொழியை சாகடித்த பெருமை ஆங்கிலத்தைச் சாரும். அதன் கொலைக் குற்றம் தமிழனின் ஏழு ஜென்ம எல்லைவரை நீளும்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்