எண்ணம். வசந்தம். மாற்றம்.

என்னது!!? பகற்கனவு காண்பதா?

கடந்த பல நாட்களாக நிறம் வலைப்பதிவில் புதிதாக எதனையும் சேர்க்க முடியாமல் போனதை எண்ணி எனக்கும் வருத்தம் தான். மின்னஞ்சல் வாயிலாக “ஏன் நிறத்தில் புதிய ஆக்கங்கள் இல்லை?” என விசாரித்த நிறத்தின் நேசமான வாசகர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த நாட்களில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இருந்ததால் நிறத்தில் ஏதும் புதியவைகளைச் சேர்க்க முடியவில்லை. இனி ஆண்டவனின் உதவியால் நிறத்தில் தொடர் பதிவுகளை வழங்கலாம் என நம்புகிறேன். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். இனி விடயத்திற்கு செல்வோமா??? (அப்போ இன்னும் மேட்டர் ஆரம்பிக்கலயா? என்ன கொடுமையிது???)

உங்கள் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளை ஒரு கணம் அசை போட்டுப் பாருங்கள். அந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் இடம் பெற முன் உங்கள் சிந்தனை எவ்வாறு அமைந்திருந்தது என ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் வாயிலாக, குறித்த எண்ணங்களுக்கும் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கும் ஏதும் தொடர்புள்ளதா என ஆய்ந்தறிய முயலுங்கள். ஒரு நிகழ்வு நடந்ததன் பின்னர் “இப்படி நடக்குமென நான் ஏற்கனவே எண்ணியிருந்தேன்!” என எத்தனை தடவை நீங்கள் சொல்லியிருப்பீர்கள்? ஆம். நீங்கள் என்னைப் பார்த்து புன்னகை உதிர்ப்பது எனக்குப் புரிகிறது.

எமது பிரதான எண்ணங்கள் யாவும் எமது நடத்தை, மனப்பாங்கு என்பனவற்றில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் காரணமாக, ஈற்றில் எண்ணங்களின் வெளிப்பாடாக எமது செயல்கள், வாழ்க்கை என்பன அமைந்துவிடுகின்றன. எம்மைச் சூழவுள்ளவர்களிலும் எமது எண்ணங்கள் தாக்கத்தை செலுத்தும் வலிமை கொண்டவையே. இதனாலேயே எண்ணமே வாழ்வு என நல்ல தமிழில் சொல்லுவார்கள்.

“எண்ணமே வாழ்வு” எனும் போது எனக்கொரு ஞாபகம் வருகிறது. நூலாசிரியர் அப்துற் றஹீம் அவர்களால் எழுதிய “எண்ணமே வாழ்வு” என்ற நூலில் பல முன்மாதிரிக் கதைகள் உள்ளன. வாசிக்கச் சிறந்த நூலது என்ற உண்மையைச் சொல்லி விடயத்திற்கு வருகிறேன்.

மேற்சொன்ன விடயங்களிலிருந்து நீங்கள் அறிய வேண்டிய விடயம் என்ன தெரியுமா? எமக்குள் நாம் கொண்டுள்ள எண்ணங்களை மிகவும் அவதானமாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும். விசேடமாக நாம் அடிக்கடி எண்ணிக் கொள்ளும் விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.

எமது எண்ணங்கள் என்பது VCD ஐப் போன்றது, அதனை மனம் எனும் VCD Player இனுள் இடுகையில், எண்ணங்கள் யாவுமே வெளிப்படும். (என்ன உதய தாரகை! உதாரணமெல்லாம் ரொம்ப ஓவராகக் கெடக்குது? என்ன நடந்தது. நெறய நாளா நிறத்தில ஒன்னையும் காணல. அதுக்கு லேட்டா வந்தும் இப்படியா லேட்டஸ்ட் உதாரணம் தர்ரறது.)

“அடைப்புக்குறி கொமன்ட்ஸ்” அடிக்கத் தொடங்கிட்டான்யா? என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியாமலில்லை. என்ன செய்வது? பழகிப் போச்சுப்பா!!!

நமது எண்ணங்களே எமது வாழ்க்கையை புடம் போட்டு புது வடிவம் தரும் அற்புத காரியத்தை கச்சிதமாகச் செய்கின்றன. எமது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமாயின் எமது சிந்தனைக் கோலங்களில் மாறுதல்களை கொண்டு வருதல் அவசியமே. இது பழைய VCD ஐ VCD Player இலிருந்து கழற்றி எடுத்துவிட்டு புதிய VCD ஐ போடும் செயலை முற்றிலும் நிகர்த்தது தானே!

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவற்றை கவரும் வகையில் எமது எண்ணங்களை பொருத்தமான வகையில் மாற்றிக் கொள்ளுதல் உயிர்ப்பான நடவடிக்கையே. இவை எண்ணங்களினால் ஆளப்படும் பண்புகள் என்றால் மிகையில்லை.

மாற்றத்தை உண்டுபண்ணுவதற்கு ஒரு எண்ணம் மட்டும் இருத்தல் போதுமற்றது. ஆனால், அந்த ஒரு எண்ணமும் தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது, அவ்வெண்ணம் வலிமை பொருந்தியதாக மாறிவிடும் என்பது மறுக்க முடியாதததே. இவ்வாறு மீண்டும் மீண்டும் நாம் கொண்டுள்ள எண்ணங்கள் எமது மனத்திலும், எம்மைச் சுற்றியுள்ள சூழலிலும் மாற்றங்களைக் கொண்டுவர வழிகோலும். இந்த நிலையை எம்மில் உருவாக்கிக் கொள்ள நாம் “பகிரத” பிரயர்த்தனம் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

dream.jpg

எமக்கு நன்மையாக அமையக்கூடிய எண்ணமொன்றை தெரிவு செய்து அதனை தொடர்ச்சியாக மீள எண்ணிக் கொண்டிருந்தாலே போதும். எடுத்துக்காட்டாக, அதிகமானவர்கள் இருக்கும் இடத்தில் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கம் என்றால், அதனை மாற்ற எண்ண செய்யலாம்? கட்டாயப்படுத்தி உங்களால் இந்த நிலையை மாற்றியமைக்க ஒரு போதும் முடியாது. அப்படிச் செய்தாலும், அது உங்களுக்கும் ஏனையோருக்கும் அசௌகரியங்களையே கொடுக்கும்.

நாம் புதிதாக சந்திக்கும் நபர்களுடன் நம்பிக்கையுடன் கதைப்பது போன்று பகற்கனவு காண்பது எமக்கு அவ்வளவு கஷ்டமான விடயமன்று. பகற்கனவு காண்பது என்பது மனதோடு சம்பந்தப்பட்ட விடயம், அதனால் எமக்கு கனவு காண்பதற்காக பிரத்தியேக நடவடிக்கைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியமிருக்காது.

எண்ணங்களின் பலத்தை ஆக்கபூர்வமாகவும், ஈடுபாட்டோடும் ஒருங்கமைய எமது வாழ்வில் கொண்டு வருகையில், சாத்தியமான பகற்கனவுகளை எம்மால் காண முடியும். இதுவும் வெறுமனே பகற்கனவு காண்பது போன்றாகத் தோன்றினாலும், அது அவ்வாறில்லை. ஏனெனில், எமது எண்ணங்கள் கனவுகளில் வெளிப்படுவதால், உணர்வுகள் உயிர்ப்பெறும். கனவுகள் மெய்ப்படும். கைவசமாதலும் விரைவில் வரும். (எங்கேயோ கேட்ட டயலொக் மாதிரி இருக்கே!)

நீங்கள் உங்கள் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிப்படுத்துகையில் அதனை ஆனந்தமாக அனுபவித்தால், அவ்வார்த்தைகளை கேட்போரும் நீங்கள் அனுபவித்த ஆனந்தத்தையே அனுபவிப்பார்கள் என்பது வெளிப்படையானதே!

நீங்கள் அடைய விரும்பும் விடயங்களை உங்கள் மனத்தின் திறனால், கற்பனை செய்து அனுபவித்துக் கொள்ள முடியும். மனம் தான் மனம் தான் எல்லாமே மனம் தான். மனம் என்பது உருப்பல்ல.. அங்கமல்ல.. அது எண்ணங்களின் தொகுதி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் பகற்கனவு காண்பது, காணும் கனவுகளை மெய்ப்பிக்கும் இன்னொரு முறையாகும் என்றால் மிகையில்லை. எண்ணங்களின் வலிமை மிக்கப் பலமானது. நீங்கள் எண்ணங்களின் வலிமை பற்றி அறியாமலேயே எண்ணங்களினால் பெற்றுக் கொண்ட விடயங்கள் நிறைய இருக்கும்.

வாழ்தல் என்பது பிரதிபண்ணல் அல்ல. மாறாக புதுமை பண்ணல் ஆகும்.

– உதய தாரகை

“என்னது!!? பகற்கனவு காண்பதா?” அதற்கு 4 மறுமொழிகள்

  1. jaw Avatar
    jaw

    thanks.
    I am also normally enjoying in my day dream but thats should be true also.

  2. நிர்ஷன் Avatar
    நிர்ஷன்

    தரமான வளமிக்க கட்டுரை. அறிவை நிறைத்துக்கொள்வதற்கும் தன்னிலை அறிந்துகொள்வதற்கும் நிறைய தகவல்கள்.

    // வாழ்தல் என்பது பிரதிபண்ணல் அல்ல. மாறாக புதுமை பண்ணல் ஆகும்.
    //

    நிச்சயமான உண்மை.
    தொடருங்கள்.

  3. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    நிர்ஷன்,

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    நன்றி.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  4. அர்த்தம் சேர்க்கும் நினைவுகள் « நிறம் - COLOUR ::: உதய தாரகை Avatar
    அர்த்தம் சேர்க்கும் நினைவுகள் « நிறம் – COLOUR ::: உதய தாரகை

    […] என்னது பகற்கனவு காண்பதா? என்ற எனது பதிவிலிருந்து […]

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்