மகிழ்ச்சியைக் கண்டடைதல்

ஆமா… நீங்க நினைப்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. இவரு யாரு…? “எங்களுக்கு மகிழ்ச்சி பற்றிச் சொல்லித் தருவதற்கு? நாங்க மகிழ்ச்சியாத்தான் இருக்கோம்… மகிழ்ச்சியை தொலைச்சவங்கதான் மகிழ்ச்சியை கண்டடைதல் என்று தலைப்புப் போட்டு மகிழ்ச்சியைத் தேடித் திரிய வேணும் – நாங்க அல்ல..!” என்றெல்லாம் அல்லவா நினைக்கிறீர்கள்..?

உண்மையும் கூடத்தான்.. மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற தலைப்பைப் பற்றி யோசிக்கவே ஆளுமை வேண்டும். உண்மையில் இக்கட்டுரையில் நான் சொல்லப்போகவுள்ள விடயங்கள் யாவும் நான் சந்தித்த அனுபவங்கள், மகிழ்ச்சி தொடர்பிலமைந்த நூல்கள் என்பனவற்றின் அமைந்த விடயங்களின் தொகுப்பாகவே அமையப் போகிறது. பிரபஞ்சத்திலேயே மகிழ்ச்சியைப் போதிக்கும் எந்தக் கலாசாலையும் இதுவரையில் உருவாகவில்லை என்றே நான் சொல்வேன்.

கசப்பான அனுபவங்களைக் கூட நினைவுகளில் விட்டுச் செல்லும் கலாசாலை வாழ்க்கை, பிரிதொரு காலத்தில் மகிழ்ச்சியை அந்த நினைவுகளின் நிகழ்வோடு சம்மந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கின்ற விடயமும் இருக்கிறது. ஆக, நிகழ்காலத்தை விட மனிதன் எதிர்காலத்திற்கே மகிழ்ச்சியை சேமித்து வைக்கின்றானோ? என்ற நியாயமான சந்தேகம் எனக்குள் எழுவதுண்டு.

மகிழ்ச்சியைப் பற்றிக் கதைக்கும் போது, அங்கு எண்ணங்களின் ஒருங்கமைவு இருக்க வேண்டும். சிந்தனைகளின் சித்தரிப்பு இருக்க வேண்டும். வாழ்க்கையின் வலி இருக்க வேண்டும். வலிகள் எமக்களிக்கும் வரலாறுகள் சொல்லப்பட வேண்டும். சந்தோசம் என்ற சொல்லில் உயிர் பிறக்க வேண்டும். மகிழ்ச்சி – அது சாகாவரம் பெற வேண்டும்.

மகிழ்ச்சி பற்றி நான் கதைக்க நினைப்பது உங்களுக்குள்ளும் ஓர் ஆர்வத்தைத் தோற்றுவித்திருக்கும் என்றே நம்புகிறேன். மகிழ்ச்சி – அது பிரபஞ்ச பாஷை. சிரிப்பின் ஆரம்பப் பருவம் அதுவல்லவா? உங்களுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய கட்டங்கள் அல்லது அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.. வாழ்;க்கையில் மகிழ்ச்சி, துக்கம் என்பன மாறி மாறி வருவது இயற்கைதானே.. அவைதானே வாழ்க்கைக்கும் உயிருண்டு என்பதைச் சொல்லும் முரசொலிகள்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டடைதல் தொடர்பில் எத்தனையோ சொற்பொழிவுகள் நாளாந்தம் உலகளவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. “ஆக்கபூர்வமான சிந்தனை அபிவிருத்தி” என்ற குறிப்போடு, வர்த்தகமே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக்கபூர்வமான சிந்தனை என்பது வெறுமனே, அது தொடர்பான நூல்களை வாசிப்பதாலோ அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ எம்மிடம் குடிகொண்டு விடும் என நீங்கள் நம்புகிறீர்களா?? ஆக, ஆக்;கபூர்வமான சிந்தனை மட்டும்தான் மகிழ்ச்சியைத் தந்து விடுகிறதா? – தொடரும் கேள்விகள். அப்படியானால், மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்பது சாத்தியமற்றதா? இது இன்னுமொரு கேள்வி…

ஒரு தனிமனிதனை எடுத்துக் கொள்வோம். உலகில் இருக்க வேண்டிய அத்தனை செல்வங்கள் அவனிடம் இருக்கிறதென வைத்துக் கொள்வோம். (எல்லாம் ஒரு கற்பனை தான்.. சரியா?) அந்நிலையில், குறித்த நபர் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டதாய் சம்மந்தம் இல்லாத இடங்களிலெல்லாம் மகிழ்;ச்சியைத் தேடிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சியை ஒரு சடப்பொருளாய் அவர் கண்டார் போலும். மகிழ்ச்சி, மனத்தின் எழுச்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். செல்வங்களைத் தன்னகம் கொண்டவர்கள், அவர்களிடம் உள்ள பொருள்ச் செல்வத்தின் குழுவில் இருக்கும் இன்னொரு பொருளாகவே மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இதனால், அவர்கள் மகிழ்ச்சியை முற்றிலும் மறந்தவர்களாகின்றனர்.

மகிழ்ச்சியை அளந்து சொல்வதற்கு கருவிகள் ஏதும் கண்டுபிடித்த தகவல் இன்னுமில்லை. நீங்கள் அப்படித் தகவலேதும் அறிந்திருந்தால் சொல்லியனுப்புங்கள். ஆக, மகிழ்ச்சி அளவிட முடியாதது தான். அதனால்தானோ, “மகிழ்ச்சிக் கடல்” என்றெல்லாம் மகிழ்ச்சியின் அளவை ஒப்பிட்டுச் சொல்வார்களோ? இருக்கட்டும். இருக்கட்டும்.

மகிழ்ச்சியைப் பற்றியும் மகிழ்ச்சியையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மகிழ்ச்சி என்பது மனத்தின் ஒரு நிலையா? அல்லது ஆற்றலா? அல்லது மனிதனின் ஒரு வகையான இருப்பு நிலையா? மகிழ்ச்சியை கற்றுக் கொள்ளத்தான் முடியுமா? – இதோ கேள்விகள் தொடர்கிறது.. மகிழ்ச்சி மனதோடு சம்மந்தப்பட்ட விடயமாகவே இருக்க வேண்டும். இருக்க முடியும் என நான் பலமாக நம்புகிறேன்.

மனச்சோர்வு என்ற ஒரு வகையான அசாதாரண நிலை எமக்கெல்லாம் ஏற்படுவது என்பது நாம் மகிழ்ச்சியான நிலையில் இல்லை என்பதைத் தான் சொல்லி வைக்கின்றது. ஆனாலும், 50 வருடங்களுக்கு முன்னர் மனச்சோர்வு ஏற்பட்டால் அதனைப் போக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மனச்சோர்வை வேகமாக எம்மிலிருந்து போக்கி விடலாமென ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. ஆக, முந்திய காலத்தைப் போலல்லாது, நாம் மனச்சோர்வு தொடர்பில் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என்றே அந்த ஆய்வறிக்கை சொல்லாமல் சொல்லியதோ?! இருக்கட்டும்.. இருக்கட்டும்..

happy.jpg

கிராமிய வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் ஊற்று என்று பலரும் தமது இலக்கியப் படைப்புகள், கருத்துகள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியானால், கிராமத்தில் அப்படி என்ன மகிழ்ச்சியை நிலை நிறுத்துவதற்கான கலையை மக்களிடம் போதிக்கிறார்கள்.??

நான் எனது வாழ்க்கையில் கிராம மக்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஒவ்வொருவரினதும் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி எனும் உன்னதமான உயிர்ப்பைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு மகிழ்ச்சியைப் பற்றி நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எதையும் கற்றுத் தரவில்லை. (என்னது! முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைத் தெரிவிக்கிறது?) அவர்களின் வாழ்வே கற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்றே நான் சொல்வேன்.

இங்கிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி அகராதி புரட்டாதீர்கள். ஒரு கிராமத்தின் ஒரு மனிதரைச் சந்தியுங்கள். அச்சந்திப்பே உங்களுக்கு இங்கிதம் என்பதை மட்டுமல்ல வாழ்வு என்ற அகராதியின் பல பக்கங்களை மனனம் செய்ய ஆதாரமாக அமையும். வாழ்க்கையை இரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை இரசியுங்கள் என்று சொல்லும் அவர்களின் செயல்கள். வாழத் தெரிந்தவர்கள். மகிழ்ச்சியின் புத்திரர்கள்.

அவர்களிடம் புன்சிரிப்பு என்றும் இருக்கும். அன்பே உருவாய் இருப்பார்கள். மகிழ்ச்சிதான் அவர்களின் மொழி. மகிழ்ச்சி அவர்களின் வாழ்க்கையின் ஒளி. அவர்களால் எப்படி இவ்வாறு மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது? யார்தான் இவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள்…? – இதுவும் கேள்விகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதுதான். நான் இவர்களின் வாழ்வின் மீதான அணுகுகையை எண்ணி பல வேளைகளில் வியந்திருக்கிறேன்.

இப்போது, நீங்களும் என்கூடவே உங்கள் கிராமிய வாழ்வையும் அங்கு நீங்கள் சந்தித்த அனுபவங்கள், பாத்திரங்கள் என்பவற்றையெல்லாம் உங்கள் மனதில் அசை போட ஆரம்பித்திருப்பீர்கள். அற்புதமான அனுபவம் தானே அது…. பாதையால் செல்லும் போது, எங்கு போகிறோம் என விசாரித்து வீட்டிலுள்ளவர்களையும் விசாரித்து கவனமாக பாதையோரமாக போகும் படி அன்புக்கட்டளையிடும், அன்பின் மொழி கிராமத்தின் சொந்தமல்லவா? இவை உங்கள் கிராம வாழ்க்கையிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வரமல்லவா?

இப்போது உங்கள் மனம் கிராமத்தின் அனுபவங்களில் திளைக்கத் தொடங்கியிருக்கும். அதுதான் வாழ்க்கை. மகிழ்ச்சியின் ஊற்று. அன்று நாமடைந்த மகிழ்ச்சியின் சூட்டை இன்றும் அந்நினைவுகளில் உணர முடிகிறதல்லவா? எங்கே தொலைத்தோம் மகிழ்ச்சியை நாம்? அல்லது, மகிழ்ச்சிதான் எம்மோடு சண்டை போட்டுக் கொண்டு வேறிடத்திற்கு சென்றுவிட்டதா? இல்லை. நிச்சயமாக நாம் தான் மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டோம்.

எமக்கு விருப்பமான விடயமொன்றில் நாம் ஈடுபடும் போது மகிழ்ச்சி எம்மகம் தொற்றிக் கொள்கிறது. இதனால், நாம் மகிழ்கிறோம். நாம் பெற்றுக் கொண்டுள்ள ஆற்றல்களால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதும் எமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதேவேளை, எம் உதவியால் பயனடைபவரும் மகிழ்ச்சியை உணர்கிறார். இங்கே, நாம் மகிழ்ச்சியைப் பகிர்கிறோம். இதுதான் மகிழ்ச்சிப் பிரவாகத்தின் வழி. பகிர்வதில் தான் சுகமிருக்கிறது. சுமைகளும் அப்போதுதான் கனமிழக்கிறது.

“சிரிக்காமல் யாரும் இருக்கக் கண்டால், அவர்களுக்கு உங்கள் சிரிப்பில் கொஞ்சத்தை கொடுத்து விடுங்கள்” – என நான் சொல்லவில்லை. யாரோ சொன்னதாக எங்கோ படித்த ஞாபகம். யதார்த்தமான வரிகள் அல்லவா இவை. சிரிப்பைப் பகிர்வதைத் தூண்டும் வணிகக் குறியீடு இதுவன்றோ!
இப்படியெல்லாம் சொல்கிறீர்களே உதய தாரகை! அப்படின்னா.. மகிழ்ச்சி என்றால் என்ன? என்று நீங்கள் என்னிடம் கேட்கத் துடிப்பது போல் எனக்குப் புரிகிறது.

மகிழ்ச்சி என்ற நிலை ஒருவருக்கொருவர் வேறுபாடு கொண்டதுவா? மகிழ்ச்சியை வரைபிலக்கணப்படுத்தத் தான் முடியுமா? மகிழ்ச்சி உளவியல் சார்ந்த ஒரு நிலையா? உணர்வின் ஒரு நிலையா? அது ஆன்மீகத்தின் அறிவா? இவையெல்லாவற்றினதும் கூட்டா…? ஒரு மாயமா? இது எதுவுமே ஆகாதா? மகிழ்ச்சி கற்பிக்கப்பட முடியுமா? அல்லது நமது பரம்பரை அலகுகளுடன் சேர்ந்துதான் வருகின்றதா? ஆனாலும், இந்தக் கேள்விகள் எப்படி நீண்டு கொண்டு போனாலும், அவை யாவற்றிற்கும் விடையைக் கண்டு பிடிக்க முடியாமல் போனாலும், நாம் இன்றும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோமல்லவா?

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை எவ்வாறு உங்களால் அறிய முடிகிறது? ஏதாவது அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களிடம் தோன்றுகின்றவா?

மகிழ்ச்சியைப் பெறுவதற்கான அனைத்தையும் எம்வசம் வைத்துக் கொண்டு, எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் இருக்கிறதே!! இது எப்படி சாத்தியமாகும்? அப்படியென்றால், எமது கட்டமைப்பில் அல்லது நடைமுறையில் ஏதாவது, பிழையிருக்கின்றதோ? அல்லது, ஒருவேளை மகிழ்ச்சியைத் தரும் விடயங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமாக இருக்குமோ? மகிழ்ச்சியைத் தரும் விடயங்கள் என எதுவும் இல்லையோ? மகிழ்ச்சி என்பதற்கான விதியை நாம் தொடர்ச்சியாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோமோ? எத்தனை கேள்விகள் விரிகின்றது.. மகிழ்ச்சியைப் பற்றி நினைக்கவே கூடாதென்ற வகையிலல்லவா கேள்விகள் நீளுகின்றது… (உதய தாரகை இது ரொம்ப ஓவர்.. புரிஞ்சுதா…?)

அப்படியெல்லாம் சொல்லப்படாது, நிச்சயமாக எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சி பற்றி உளவியலாளர்கள் பலரும் எமக்கு நிறையவே கற்றுத்தந்திருக்கிறார்கள்.

உங்களின் வருகை ஓரிடத்தில் அவசியம் தேவை என்று நிலை உண்டானால், நீங்கள் அதுபற்றி மகிழ்ச்சி கொள்வீர்கள் தானே..!? எம்மை பாராட்டும் போது, தட்டிக் கொடுக்கும் போது, எம்மிடம் அன்பு செலுத்தும் போது, எம்மையறியாமலேயே நாம் மகிழ்ச்சியடைகிறோம் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள். உண்மைதானே… நீங்கள் பாராட்டப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை நினைவிற்கு கொண்டு வாருங்கள்.. மனமே மகிழ்ச்சி பிரவாகத்தில் நனைகிறதல்லவா? அதுபோலவே, நீங்கள் மற்றவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்ட அனுபவத்தைக் கொஞ்சம் மனதில் அசை போடுங்கள். மனம் குளிர்கிறதல்லவா? இதுதான் மகிழ்ச்சி.

மகிழ்ச்சி என்பது, ஆழமான திருப்தி, அமைதி, நிம்மதி என அனைத்து உணர்வுகளின் அரவணைப்பில் எம்மீது குடிகொண்டு விடக்கூடியது. ஆக, மகிழ்ச்சி என்பது எமது மனத்தின் நிலையோடு அதிகமாகவே சம்மந்தப்பட்டிருக்கிறது என்பது உண்மையே…

மகிழ்ச்சி என்பது, சில விடயங்கள் எம்மிடமில்லாத போது வரக்கூடியதாகவிருக்குமோ? பயம், அதிருப்தி, வெறுப்பு, நோய், நோவு, வலி, பாதுகாப்பின்மை என்ற உணர்வுகள் எம்மிடமிருந்தால், நாம் மகிழ்ச்சி என்ற சொல்லைக்கூட மறந்தவர்களாகிவிடுவோம். மகிழ்ச்சி மேற்சொன்ன உணர்வுகளின் வரவின்மையில் தான் உயிர் பெறுகின்றதோ?

ஒவ்வொருவரையும் வௌ;வேறான விடயங்கள் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது என்பதை நாமறிவோம். ஆக, மகிழ்ச்சியை தனிநபரின் விருப்பிலும் தங்கியுள்ள உணர்வாகவும் எடுத்துக் கொள்ள முடிகிறது.
எமக்கு ஒரு வேளை மகிழ்ச்சியைத் தரக்கூடிய விடயம், பிரிதொரு வேளையில் மகிழ்ச்சியைத் தர முடியாமல் போகும் நிலையும் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? ஆம். நாம் மாறியிருக்கிறோம் என்பது தான் காரணம். ஏனெனில், எதுவுமே மாறாத நிலையில், ஏற்கனவே மகிழ்ச்சியைக் கொடுத்த விடயம் இப்போது, மகிழ்ச்சியைத் தர மறுக்கிறது என்றால், நிச்சயமாக நாம்தான் மாறியிருக்கிறோம்.

எம்மிடம் இருப்பவற்றைக் கொண்டு திருப்தியடையாமல், புதிய தேவைகளை அனாவசியமாக உருவாக்கிக் கொண்டு, எம்மை மாற்றியிருக்கிறோம். மகிழ்ச்சியை தொலைத்துக் கொள்கிறோம். நீங்களும் இதுபோன்ற அனுபவங்களை உங்கள் வாழ்க்கையிலும் சந்தித்திருப்பீர்கள். அல்லது, இவ்வாறு அனுபவங்களைப் பெற்றவர்களைக் கண்டிருப்பீர்கள்.

இருக்கும் விடயங்களைப் பற்றி மறந்து விட்டு, இல்லாத விடயங்களுக்காய் ஏங்குவது பொருத்தமானது தானா? எமது மனப்பாங்கின் ஒரு மாற்றம், எமது மகிழ்ச்சியின் தோற்றத்தையே நிறுத்தி வைக்க இடம் கொடுக்கலாமா? இது பொருந்தாத மனப்பாங்கு அல்லவா? நாம் “கனியிருக்க காய் கவருகிறோமோ?” என்று சிலவேளை நான் நினைப்பதுண்டு.

நாம் ஒரு பொருளின் புதிய நிலைதான் முன்னேற்றகரமானது, அதுதான் எமக்கு மகிழ்வைத் தருமென நினைக்கின்றோம். இது எப்போதும் பொருந்தாது. இல்லை. ஒருபோதும் பொருந்தாது.

எது எப்படியிருந்தபோதும், நாம் தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், எம்மை மகிழ்ச்சிப்படுத்துவதில் கொஞ்ச நேரத்தை செலவழித்து, அதிக நேரத்தையும் சக்தியையும் ஏனையோரை மகிழ்ச்சிப்படுத்துவதில் செலவழித்தால், எம்மிடம் மகிழ்ச்சி இயல்பாகவே குடிகொண்டுவிடும். அது என்றைக்கும் நிலைத்திருக்கும். அதுதான் உண்மையான மகிழ்ச்சியும் கூட என்றே நான் வலிமையாக நம்புகிறேன்.

நீங்கள் மகிழ்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சொல்லியனுப்புங்கள்..

– உதய தாரகை

2 thoughts on “மகிழ்ச்சியைக் கண்டடைதல்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s