அப்போது எனக்கு நான்கு வயதாக இருக்க வேண்டும். பாடசாலைக்கு எனது அக்காவுடன் சென்று அக்காவின் வகுப்பில், ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது தான் பழக்கம். ஐந்து வயதில் தான் பாலர் வகுப்பில் சேர்ப்பார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் தானே?
அக்காவின் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் “யாரிந்தப் பையன்?” என்று கேட்டு விட்டுத் தான் பாடங்களைத் தொடங்கினார்கள். அந்த வகுப்பில் அவர்கள் என்ன படிப்பித்தார்கள் என்றெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது.
அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களே கொஞ்சம் தான். ஆங்கில எழுத்துக்கள் சிலவும் என் மனதில் மனனமாகியிருந்தது போனஸ். (இங்கிலீசும் எங்களுக்கு தெரியுமில்ல என்டு சொல்றானே!! அத விட்டுட்டு, மனனம், போனஸ் என்றெல்லாம் கதையளக்கிறது உங்களுக்கே ஓவரா படலயா, உதய தாரகை?)
வகுப்பறையில் ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா என்ற எழுத்துக்களை மட்டும் தான் என்னால் அந்நியம் அல்லாத நிலைகளாய் பார்க்க முடிந்தது.
அந்த வகுப்பில் நான் கண்ட விடயங்களை வீட்டுக்கு வந்து அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லி விளக்கம் கேட்பதிலேயே பல நிமிடங்களுக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறேன். அன்றும் அப்படித் தான், எனது அப்பாவிடம் கண்ட விடயங்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.
அன்று வகுப்பறையில், ஒரு ஆசிரியை பாட்டியொருத்தி பொல்லொன்றுடன் இருக்கும் படத்தைக் காட்டி, பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். பச்சை நிற சாரி உடுத்திருந்த பாட்டியின் படத்தைத்தான் பாடநூலிலும் நான் பார்த்தேன்!!
யார் அந்தப் பாட்டி என்பதை அறிந்து கொள்ள எனக்கிருந்த ஆர்வத்தை, அக்காவிடம் கேட்டேன். அவளோ, வெறும் “ஒளவையார்” என்று பதில் சொன்னாள்.
வீட்டுக்குச் சென்றவுடனேயே, தந்தையிடம், “ஒளவையார்” என்ற பாட்டியை உங்களுக்குத் தெரியுமா? என்று தான் நான் கேட்டிருக்கிறேன், அந்த நான்கு வயதில்.
அதற்கு ஒளவைப் பாட்டியின் திறமையைப் பற்றிச் சொல்லுமாய்ப் போல், ஒரு சம்பவத்தை தந்தை எனக்கு அச்சமயம் சொன்னார், அது இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்துள்ளான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன, புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.
கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.
எனது தந்தை அந்தப் பாடலை என்னிடம் சொல்லிக் காட்டினார். மீண்டும் சொல்லுமாறு கேட்டேன். அதனை திரும்பவும் அதே அழகுடன் எனக்குச் சொல்லித் தந்தார். பின்னர் அப்பாடலின் எளிமையான கருத்தையும் எனக்குச் சொல்லித் தந்தார்.
அன்று என் தந்தை சொல்லித் தந்த பாடல்களில் முதல் பாடல் வரி எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று, மிதியாமை கோடி பெறும்.
ஏனைய மூன்று வரிகளும் எனக்கு ஞாபகமில்லை ஆனால், அதன் கருத்துக்கள் மட்டும் தான் ஞாபகமிருக்கிறது. இருந்த போதும், ஒளவையாரின் இந்தப் பாடல்கள் எங்காவது கட்டாயம் இருக்குமென எண்ணி தேடலானேன், ஏனைய மூன்று வரிகளையும் கண்டு நின்றேன்.
முகத்தில் மூன்று கோடி மலர்கள் பூத்த அனுபவம், என் தந்தையின் குரலில் பா ஒலித்த பரவசம் உணர்ந்தேன்.
உண்ணீர் உண்ணீர் என்றுபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்:
கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மொடு கூடுதல் கோடி பெறும்:
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
இந்தப்பாடலை நான் தந்தையை பல தடைவை சொல்லித் தரக் கேட்டிருக்கிறேன். அவரும் அதே அன்புடன் எனக்குச் சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியாது.
அப்பாவின் பாசம், அரவணைப்பு எல்லாமே எனக்கு ஆறுதல் தந்திருக்கிறது. இப்போதெல்லாம் அவர் இல்லாத பொழுதுகளை நினைக்கையில், கண்களில் ஈரம் ஆறாகிறது.
அண்மையில், எனது நண்பனொருவன் தனது “பேஸ்புக்” கணக்கில் ஒரு வீடியோவினைப் பகிர்ந்து கொண்டான். அந்த வீடியோவைப் பார்த்த கணமே, தந்தையின் அளப்பறிய அன்பின் அழகைக் கண்டு வியந்து போனேன்.
எனக்கும் அன்பார்ந்த தந்தையொருவர் இருந்த நினைவில் மலர்ந்து போனேன்.
மகன், அப்பா மற்றும் குருவி என்ற பாத்திரங்களை மட்டும் கொண்டு விரியும் திரையில், கோபம், மகிழ்ச்சி, ஆர்வம், நினைவு, வேதனை, பாசம், வருத்தம் மற்றும் அன்பு என அத்தனை உணர்வுகளையும் வெறும் ஐந்து நிமிடத் திரைக்குள் கொண்டு வர இயக்குனரால் முடிந்து போயிருக்கிறது.
இந்தக் குறும்படத்தின் பெயர், What is that? என்பது தான். தமிழ்ப்படுத்தினேன், அதுவே இப்பதிவின் தலைப்பாயும் அமைந்தது.
கொஞ்சம் உணர்வுகளுக்கு இப்போது, அர்த்தம் கொடுக்க ஆயத்தமாகுங்கள். ஐந்து நிமிடங்கள் தானும்.
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று சும்மா சொல்லிருக்க மாட்டாங்க தானே!!??
– உதய தாரகை
ஆம்! தந்தை சொல் மிக்க மந்திரமில்லைதான். தங்களுடைய பதிவில் ஒளவையார் பற்றி சொல்லியிருந்த கருத்து, என்னுடைய சிறுவயதை மீட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பமாய் அமைந்தது. உங்களைப் போலவே ஒளவையார் கதைதான். என் தந்தையிடம் ஒளவையார் என்பதை ஒ ள வையார் என்று வாசித்து, அவர் அதை அன்புடன் திருத்தி ஒளவையார் என்று மீண்டும் வாசிக்கக் கற்றுக் கொடுத்ததை இன்றுவரையில் மறக்க முடியாது. அந்நிகழ்வு மீண்டும் என் கண்முன் நிழலாட உங்கள் பதிவு காரணமாய் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்களுடன் நன்றி!
வாங்க நிறப்பிரியை.
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க மறுமொழியை நிறத்தில் காணக்கிடைத்திருக்கு.. ரொம்ப நன்றி.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை