எண்ணம். வசந்தம். மாற்றம்.

உனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை

இந்த இரவில் நிறத்தில் புதிதாக பதிவொன்றை இடவேண்டுமென நான் நினைக்கிறேன். நான் எதுவாக இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட ஆர்வங் கொள்கிறேன். அதுவொரு மிக நீளமான பயணம். மிக மிக நீளமானது தான். அங்கும் இங்குமென பல இடங்களில் இடர்களைச் சந்திந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. முக்கியமாக வயது வந்த வாழ்க்கை.

கடந்துவிட்ட நேரத்தை மீளக்கொண்டு வரும் வரமெனக்கு இருந்திருந்தால் என கற்பனை செய்கிறேன். எனது வாழ்வின் அழகிய நேரங்கள் நிறைவு பெற்றுவிட்டது போன்ற எண்ணம் எனக்குள் குடிகொள்கிறது. இனிவரும் எல்லாமே நானறிந்த அழகிய நேரங்களை விடக் குறைவான அர்த்தங்களையே கொண்டிருக்கும். வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த மங்கலான நிலையை மட்டுமே என்னால் கண்டு கொள்ள முடிகிறது.

அது ஆரம்பத்திலிருந்தே உண்மையாகவே இருந்தது, ஆனாலும், நான் இப்போதே அது மெய்யானதென உணர்ந்து கொண்டேன்.

life_empty

எனது வாழ்க்கையில் நான் பெற்றிருந்த எல்லாவற்றையும் பிரிந்துவிட்டு நிற்கின்றேன். நண்பர்கள், பாடசாலை, வாழ்க்கையைப் பற்றி படிக்க கழித்த நாட்கள், சும்மா எதுவுமே இல்லாமல் கழித்த நாட்கள், எழுதுதல், கனவு காணுதல், செவிமடுத்தல், நானாக இருத்தல் என எல்லாவற்றையும் பிரிந்து விட்டதாய் சொல்லும் ஒரு அலை எனக்குள் பாய்கிறது.

இயல்பாகவிருக்க வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கையின் உத்தரவு இந்நாட்களில் என்னைத் தாக்குகின்றது. நான் எனக்கான எல்லாவற்றையும் செய்து விட்ட போதிலும், சில நேரங்களில் என்னை நேசிக்க முடியாமல் இருக்கிறது. பல நேரங்களில் என்னை உச்சளவில் காதல் செய்ய முடிகிறது. மாறி மாறிக் கொண்டிருக்கும் நிகழ்வில் நானும் அகப்பட்டாலும், அதனை எப்போதும் எனக்காக தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.

குறிப்பிட்ட சில விடயங்களை முன்னொரு போதும் இல்லாத வகையில் பிரிந்து விட்டதாய் உணர்கிறேன். உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. அவை திருப்திப் படுத்தக்கூடிய உணர்வுகளாக தோன்றலாம். அவை ஆத்மாவை தேற்றுவது போல் தெரியலாம். ஒரு வருடத்திற்கு பின்னர், நான் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். வாழ்க்கையே அதன் மனத்தை உடைத்துக் கொண்டுவிட்டது. வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது போல், எல்லாமே அமைந்துவிடுவதில்லை.

நான் எனது ‘பழைய நானிடமிருந்து’ நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேகமாக வளர்ந்தது போலவே, நான் சிறுபிள்ளையாக மீண்டும் ஆகிவிட்டேன். சில நேரங்களில் இதுவே நான் தொடரப்போகும் வாழ்க்கை என்று உணர்கின்றேன். இன்னும் சில நேரங்களில் தப்பியோட வேண்டுமென உணர்கிறேன்.

இன்றிரவு நான் தப்பியோடுவதை தேர்ந்தெடுக்கிறேன். மூடப்பட்ட கதவுகளை திரும்பிப் பார்க்காமல், புதிய கதவுகளை திறந்து கொள்ளப் போகிறேன். எனது ஆர்வங்கள், திறமைகள் என எல்லாவற்றையும் சேர்த்த பெரிய உலகின் கதவுகள் அவை. எனது ஆர்வங்களுக்கு அர்த்தம் கொடுக்கும் ஆதாரங்களை இந்த உலகத்தில் நான் காண வேண்டுமென தவிக்கிறேன். அதிகமாகவே சஞ்சலமடைகிறேன். கஷ்டப்படுகிறேன். நான் வெறுமையாய் உணர்கிறேன்.

எனக்கு அழுதிட வேண்டும் போலிருக்கிறது. எனக்கு நீ வேண்டும். எல்லாமே முன்பிருந்தது போல், மீண்டும் அமைந்துவிடும் என்று தயவுசெய்து சொல்…

– உதய தாரகை

“உனக்கான பாடல், உன்னைப் பற்றிப் பாடவில்லை” அதற்கு 11 மறுமொழிகள்

  1. வலசு வேலணை Avatar
    வலசு வேலணை

    வாழ்க்கைகை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். எதிர்காலம் உங்கள் கையில்.

  2. Ramzy Avatar
    Ramzy

    உங்கள் அண்மைய பதிவுகளில் பெறும்பாலானவை உணர்வு, அனுபவம், அழகு, வாழ்வு என்பவற்றை தொட்டே எழுதப்படுகின்றன. மேலும் இவ்வாறான பதிவுகளையே நானும் நாடுகிறேன். ஏனெனில் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளின் தாக்கத்தோடு இழுபட்டுச் சென்றுகொண்டிருக்காமல், மனத்தை அவற்றினின்றும் வேறாக்கி, என்வாழ்க்கையை வேறொரு கோணத்தில் நின்று படம்பிடித்து பார்க்க எனக்கு உதவுவது இவ்வாறான பதிவுகள்தான்.

    என்றோ நான் பார்த்த படமொன்று இப்பொழுது என் ஞாபகத்திற்கு வருகிறது. பெயர் “American Beauty”. நான் பார்த்த சிறந்த படங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ தெரியாது. வேறுபட்ட வயதுடைய மனிதர்களின் வேறுபட்ட மனநிலைகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. படம் முழுக்க உணர்வுகள் பற்றியும் வாழ்வு பற்றியும் மனிதர்கள் பற்றியும் சொல்லித்தருகிறது. அதில் வருகின்ற ஒரு காட்சி வருமாறு…

    இரவு நேரத்தில் திடீரென அறைக்குள் புகுந்த தந்தை பின்னேரம் நடந்த சம்பவம் ஒன்றுக்காய் தன் மகனை கண்ணம் வெடிக்க வெளுத்து வாங்குகிறார். பின்னர் உணர்வுகளின் கொந்தளிப்புடன் அவர்களிடையே பின்வரும் உரையாடல் தொடர்கிறது. (வசனங்களை மட்டுமே என்னால் இங்கு எழுதிக்காட்ட முடியும். வசனங்களுக்கிடையான நேர இடைவெளி, அவர்கள் பேசிய போது உணர்வின் வெளிப்பாடுகளாய் இருந்த குரலின் ஏற்ற-இறக்கங்கள், கமராவின் பேச்சு என்பவற்றை குறிப்பிட நான் எங்கு செல்வது? வீடியோ காட்சியில் மட்டுமே அவற்றை உணர முடியும். அன்றாடம் நாம் கேட்கின்ற அநேகமான ஓசைகளைக் கூட எந்த மொழியிலும் எழுதிக்காட்ட முடிவதில்லை.)

    தந்தை: This is for your good, boy.
    You have no _____ for _____ _____ things and authority…

    மகன்: Yes, sir I’m sorry.

    தந்தை: can’t just go around doing whatever you feel like.
    You can’t. There are rules in life.

    மகன்: Yes, sir.

    தந்தை: You need structure, yeah.
    You need…

    இருவரும்: -Discipiline. (இருவரும் ஒருமித்துக் கூறுவது இங்கு கவனிக்க வேண்டியது.)

    மகன்: Yes, sir. Thank you for trying to teach me.
    Don’t give up on me, Dad.

    தந்தை: Oh, Ricky.
    You stay out of there.

    இவ்வாறே நண்பர்களுக்கிடையில், கணவன்-மனைவிக்கிடையில், காதலர்களுக்கிடையில், தாய்/தந்தை-மகளுக்கிடையில், இன்னும் பல உறவுகளுக்கிடையிலான உண்மைத்தன்மையான காட்சிகள். படத்தில் வருகின்ற ஆளுமைகள் சில வேளைகளில் உங்களுக்கு அசாதாரணமாகத் தென்படலாம். இருப்பினும் இன்றைய Money oriented உலகில்அவ்வாறான ஆளுமைகளே இக்காலத்தில் அதிகம். படத்தின் பெயர் அமெரிக்கர்களின் வாழ்க்கைக் கோலங்களைச் சுட்டுவதாக இருக்கலாம். அந்தக் கோலங்களின் பின்னால் இருக்கின்ற காரணங்களைத் தேடுகின்ற போது வாழ்க்கை புலப்படுகிறது.

    இவ்வளவு தணிக்கைகளுடனும், சஸ்பென்ஸ்களுடனும் இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன்? நீங்கள் அந்தப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அதுபற்றி உங்கள் அடுத்த பதிவில் எழுத வேண்டும் என்று வேண்டிக்கொள்ளத்தான்.
    ஆவலாயுள்ளேன்.

    தோழமையுடன்…
    Ramzy

  3. Ramzy Avatar
    Ramzy

    எம் பயணப் பாதையில் சில இடங்களில் மனம் சலிப்புருகின்ற போது தன் மனவுறுதியை தக்க வைப்பதற்கான ஒரு முயற்சியின் வெளிப்பாடாய் உங்களின் இந்தக் கட்டுரையை நோக்கவேண்டியிருக்கிறது.
    முக்கியமாக வயது வந்த வாழ்க்கை. என்று நீங்கள் கூறியிருப்பதிலிருந்து நிறைய விடயங்களை அநுமானம் செய்ய முடிகிறது.
    Laird Koenig இன் The Little Girl Who Lives Down the Lane என்ற நாவலை ஒருமுறை படியுங்கள். புத்தகம் கிடைக்காகவிட்டால் அந்த நாவலைத் தழுவி அதே பெயரில் 1976 இல் ஒரு திரைப்படம் வெளியானது பார்க்கலாம்.

  4. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @வலசு வேலணை,

    ஆம். வாழ்க்கையை உள்ளவாறே ஏற்றுக் கொண்டேன் என்பதைச் சொல்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

    அத்தோடு, உங்களின் கருத்து இந்தப் பதிவின் அர்த்தத்திற்கு அர்த்தம் சேர்க்கிறது. நன்றி தோழரே!

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  5. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @Ramzy,

    மிகவும் நீளமான இருந்தும் ஆழமான மறுமொழி கண்டு, நீங்கள் குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென ஆர்வங் கொண்டுள்ளேன்.

    ஆனாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தின் போதும் நிகழ்கின்ற அழகிய எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் என எல்லாவற்றையும் அப்படியே யாரும் மொழியாக்க நினைக்க முடியாது. நினைத்தாலும் முடியாது.

    “அனுபவம்” என்ற அந்தவொன்று தான் பல நேரங்களில் உணர்ச்சிகளின் கனத்தை புரிந்து கொள்ள ஆதாரமாய் இருப்பதுண்டு.

    நேரமெடுத்து உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரும் போது, பெற்ற உணர்வுகளின் அனுபவங்கள் புடம் போடப்பட்டு எம் எண்ணங்களோடு சேர்ந்து விடுகின்றன. எழுத்து வாசிக்கப்படுகிறதோ இல்லையோ, பல நேரங்களில் சுவாசிப்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது என்னவோ உண்மைதான்.

    இன்னும் நிறத்தில் சொல்வேன்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  6. Riyas Mohideen Avatar
    Riyas Mohideen

    நீங்கள் இருவருமே உச்சத்தில் இருக்கிறீர்கள்
    நிறைய மகிழ்ச்சி,

    சாக்கலேட் சாப்பிட்டது போல் உணர்வு…….

    Lot of thanks..

  7. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @Riyas Mohideen,

    வாங்க றியாஸ். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

    //நீங்கள் இருவருமே உச்சத்தில் இருக்கிறீர்கள்//

    உச்சமென்பதெல்லாம் எங்குமே கிடையாது. அது அப்படியாக இருக்கவும் கூடாது. என்னை வச்சி காமடி கீமடி பண்ணலையே!!?? ஹி. ஹி..

    சில நேரங்களில் நாம் உணர்வதை உணர்ந்தவாறே சொல்லும் போது, பலர் மனதையும் அது தொட்டுவிடுகிறது. அவர்கள் சொல்ல விளைந்தவற்றை சொல்லுவதாய் அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். அது அப்படியாகவே இருக்கிறது.

    ஒரு முறை, X Files பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் கதாநாயகன், மோல்டர், “எப்படிக் கேட்க வேண்டுமென கற்றுக்கொள்ளாத கேள்விக்கான பதில்தான் கனவு” என்பான். கனவுகள் கூட, பல நேரங்களில் உணர்வுகளுக்கு அனுபவம் சேர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. அதுபோலத்தான் எண்ணங்களை எழுதும் போது, யாருமே கேட்க தயங்குகின்ற கேள்விகளுக்கான பதில்களாக சிலவேளை அமைந்துவிடுகிறது.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  8. irshad Avatar
    irshad

    வாழ்வின் எல்லா சந்தர்பங்களுமே ஒரேமாதிரி இருப்பதில்லை என்பது மட்டும் மாற்றமுடியாத உண்மை
    நன்றி உதயதாரகை

  9. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @irshad,

    வாங்க இர்ஷாத். ஆமாங்க. அது தான் என் நண்பியொருத்தி, “எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்துவிட்டால், உலகில் எந்த கலைகளுமே தோன்றியிருக்காது” என்று எப்போதுமே சொல்வாள். அசாதாரணங்கள் தான் வாழ்க்கைக்கே பல வேளைகளில் அர்த்தம் சேர்க்கிறது.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  10. Ramzy Avatar
    Ramzy

    //நீங்கள் இருவருமே உச்சத்தில் இருக்கிறீர்கள்//

    இது வேற ஓடிக்கொண்டிருக்கா? சொல்லவே இல்ல….

    //எப்படிக் கேட்க வேண்டுமென கற்றுக்கொள்ளாத கேள்விக்கான பதில்தான் கனவு//

    என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க.

  11. luthfi Avatar
    luthfi

    உணர்வுகளுக்கான மொழி உருவம்….
    அருமை

    வாழ்த்துக்களுடன் ……

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்