எண்ணம். வசந்தம். மாற்றம்.

செருப்புதான் வறுமைக்கு காரணமாம்!

சூரியனால் கூட, வெப்பநிலைக்கு வரைவிலக்கணம் சொல்ல முடியாத, குளிர்நிலை கொண்ட காலைப் பொழுதொன்றில் நான் வீட்டைவிட்டு ஒரு விடயமாக வெளியேறுகிறேன். பனி என்மீது தொடுத்த யுத்தத்திற்கு நான் கொண்டிருந்த கேடயமெல்லாமே என் உடைகள் தான். உடைகளைப் பற்றி நான் இப்படி விபரிப்பதை நீங்கள் கேலி செய்யக்கூடாது.

வீட்டைவிட்டு வெளியேற நான் தொடங்க, என் வழியின் குறுக்காக ஒரு கருப்பு நிறப் பூனையொன்று வந்து என்னையே பார்த்து நிற்கிறது. நான் மூடநம்பிக்கைகளை நம்புவனல்லன், ஆனாலும், அவளின் பார்வை என்னை நோக்கியே நீடித்தது. நானும் தயக்கமில்லாமல் என் பயணத்தை தொடர எண்ணினேன். அதனால், அவள் என்னைக் கண்டு பயப்பட்டிருக்க வேண்டும்.

நான் அவளையும் அவள் என்னையும் பார்வைக்கெட்டாத வகையில் விழக்கி நடக்க முயற்சித்தோம். பாதை நெடுகிலும் பனித்திரள் இருப்பதனால், எனக்கு வழியில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடலாம் என்பதை சொல்லுவதாய் கருப்பு பூனையின் குறுக்கீடு எனக்குத் தோன்றியது.

அபசகுனமான நிலைகள் நாம் எண்ணுவதால் தான் தோற்றம் பெறுகின்றன என்பதை நான் பாதையின் பனித்திரளில் வழுக்கித் தடுக்கி விழுந்த போது புரிந்து கொள்கிறேன். மூடநம்பிக்கைகள் நமக்கு நம்பிக்கைகளாக ஊட்டப்பட்டுவிட்டதால் பொய்களைக் கூட உண்மையாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டாக்கப்பட்டுவிட்டது.

கருப்பு பூனை குறுக்கால் வந்தால், சகுனம் சரியில்லை என்பது எல்லோரும் அறிந்த கூற்றொன்று. இதனை நம்புவதால், இந்நிலையின் தொடர்ச்சியில் அபசகுனமான சம்பவத்தை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்புதான். அதனால் தான் அவன் மனிதனாகிறான்.

ஒரு விடயம் சார்பாக அதீதமாக கரிசணை காட்டும் போது, எம்மை நாமே ஒரு கட்டத்தில் நெகிழ்வுத் தன்மையின் உச்சநிலைக்கு தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் கவலை, அதிருப்தி, தோல்வி என்பன எம்மோடு ஒட்டிக் கொள்கிறது. இது காதலுக்கும் பொருந்தும். அத்தனை நம்பிக்கைகளுக்கும் கூடப் பொருந்தும்.

எது நடந்த போதிலும் நாம் மூடநம்பிக்கைகளுக்கு வலிமை சேர்ப்பதைத் தவிர, புதிதாக எதையும் செய்ய முடிவதில்லை. அதிருப்திகள் கூட, ஈற்றில் மூடநம்பிக்கைகளின் பெயரால் நியாயப்படுத்தப் படுவது வழக்கமாகிவிட்டது.

ஆனாலும், இத்தனை அதிருப்திகளும் நாம் எண்ணுவதாலேயே வருகின்றதென்பது வெள்ளிடை மலை.

“அடே.. அப்படி செருப்பை புரட்டி போட்டுவிட்டு வீட்டிற்குள் செல்லாதே!” அவன் என்னிடம் அன்புக் கட்டளை பிறப்பிக்கிறான்.

வியந்த நான், “ஏன்டா..?” என்றேன்.

“இப்படி செருப்பை கழற்றி புரட்டிப் போட்டால் வறுமை குடிகொண்டுவிடும்”. அவன் எந்தச் சலனமும் இல்லாது அவனின் கட்டளைக்கான காரணத்தைச் சொல்லி முடித்தான். அவசரமாக செருப்பைக் கழற்றும் போது, ஒரு செருப்பு மறுபக்கம் புரண்டு கிடந்ததற்கு இவ்வளவு பின்னணியா என்று யோசிக்கலானேன்.

முதலில் வியந்த எனக்கு, அவனின் காரணத்தைக் கேட்டபோது, என்ன செய்வதென்றே தெரியவில்லை. “யார் இப்படி உனக்குச் சொன்னது?” என சுதாகரித்துக் கொண்டே அவனிடம் கேட்டுவிட்டேன்.

அவனது பாட்டி இதுபற்றி அவனின் சிறுவயதிலேயே அவனிடம் கூறினாராம் என்று சொன்னான். என்னால், இதனை நம்ப முடியவில்லை என்பதை விட இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலக வரலாற்றில் நம்பிக்கைகள் மூலம் மனிதனால் சாதிக்கப்பட்ட பல விடயங்கள் சொல்லப்படுகின்றன. நம்பிக்கை என்பது, நியாயப்படுத்த முடியாத பல விடயங்களை எந்த அத்தாட்சிகளும் இல்லாமலே நியாயப்படுத்துவதற்கான ஒரு கருவியாகவே இப்போது பாவிக்கப்படுகின்றன.

மூடநம்பிக்கை என்ற விடயம் பலருக்கும் அதிகப்படியான நம்பிக்கைகளை வழங்கும் ஊக்கியாக இருப்பது வியக்க வேண்டிய விடயமல்ல. ஆனால், நம்பிக்கைகள் என்பவை எப்போதுமே எண்ணங்களை சுற்றிக் கொண்டு ஊசலாடுவதால், தனிமனிதனின் நிலையில், மூடநம்பிக்கைகள் கொண்டு சேர்க்கக்கூடிய பிரதிகூலங்களை என்னால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

“அது பழையவங்க சொன்ன விஷயம் தானே! அதுல ஒன்னும் கெடையாது” என்று என் நண்பனிடம் கூறிவிட்டு கழற்றிய செருப்பை அப்படியே வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைய முனைகிறேன்.

“அது பரவாயில்லை. ஆனால், அப்படி செருப்பை போடாதே!! ப்ளீஸ்” என்று வறுமைக்கு பயந்தவனாய் தயவான கட்டளையிடுகிறான் அவன்.

வெறும் செருப்பின் நிலை, வீட்டிற்கே வறுமை கொண்டு தரும் என நம்பும் அவனின் மடைமையைப் பற்றி சொல்ல மொழியில்லாமல் நான் மறுபக்கம் புரட்டிக் கிடந்த செருப்பை சரிசெய்து விட்டு வீட்டுக்குள் நுழைகின்றேன்.

கால்களுக்கு போட செருப்புக்கூட இல்லாமல், இருக்கும் எத்தனையோ வறுமைக் கோட்டில் வாழ்வோர் உலகத்தில் ஜீவிக்க, செருப்பை கழற்றிப் புரட்டிப் போடுவதால் வறுமை வரும் என நம்பும் நிலை பற்றி சொல்ல எண்ணுகையில் மொழிகள் கூட ஊமையாகின்றன.

இந்த விடயத்தை என் நண்பியொருத்தியிடம் சொன்ன போது, “அதுதான் பல ஊர்களில் பணக்காரர்கள் எனப் பெயர் எடுத்தோர் பலரும் செருப்புப் போடாமலேயே நடக்கிறார்களோ!!” என அவள் என்னிடம் சொல்லிச் சிரிக்கத் தொடங்கினாள்.

அவளோடு சேர்ந்து சிரிக்க முடிந்ததே தவிர, என்னால் எதுவுமே கூற முடியவில்லை. அவன் கொண்ட நம்பிக்கை பற்றி நம்பிக்கை இல்லாமல் இப்பதிவின் மூலம் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறேன்.

அண்மையில் ஒரு நண்பனைச் சந்திந்த போது, தோமஸ் கிரே சொன்ன மேற்கோள் ஒன்றை பகிர்ந்து கொண்டான். “Ignorance is bliss” என்பதுதான் அது!!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

– உதய தாரகை

“செருப்புதான் வறுமைக்கு காரணமாம்!” அதற்கு 4 மறுமொழிகள்

  1. திக‌ழ் Avatar
    திக‌ழ்

    புத்தாண்டு வாழ்த்துகள்

    1. உதய தாரகை Avatar
      உதய தாரகை

      வாங்க திகழ்.. நன்றி தங்கள் வாழ்த்துக்கு.. தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      இனிய புன்னகையுடன்,
      உதய தாரகை

  2. Mushafi Avatar
    Mushafi

    மூட நம்பிக்கைகளிலிருந்து இன்னும் அறிவியல் மனிதனும் மீட்சி பெற வில்லை என்பதாகவே எனக்குத் தோனுகிறது. இன்று நாம் ஒரு நிமிடத்தை 60 செக்கன்கள் என்றும் ஒரு மணித்தியாலத்தை 60 நிமிடங்கள் என்றும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.இது பாபிலோனியர்களின் மூட நம்பிக்கை.அவர்கள் 60 என்பது அதிஷ்டத்தை தரும் என நம்பினார்கள்.அதே போல சூரியனோடு சேர்த்து 7 கோள்கள் பூமியை சுற்றுவதாக நம்பினார்கள். Sun க்கு Sunday என்றும் Moon க்கு Monday என்றும் 7 நாட்களை உருவாக்கினார்கள்.இன்றளவிலும் அறிவியல் விஞ்ஞானம் அனைத்தும் இவற்றை வாய் மூடி ஏற்றுக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.பயமும் கடவுள் நம்பிக்கையும் மிகுந்த மனிதனை மூட நம்பிக்கைகள் சுலபமாக ஆட்கொண்டுவிடும்.

    1. உதய தாரகை Avatar
      உதய தாரகை

      நன்றி முஸாபி.. தங்கள் கருத்துகளுக்கு.. நீங்கள் சொல்லியுள்ள விஞ்ஞான ரீதியான மூடநம்பிக்கைகள் வெறும் இலக்கங்கள் பெயர்களோடு மட்டும் நின்று விடுவது பல வகையில் அதிர்ஷ்டம் தான். ஏனெனில், இன்றளவில் பல விடயங்களில் மனிதன் இது நடந்தால், இந்தந் தீய விடயம் நடந்தேறும் என ஆயிரக்கணக்கில் விடயங்களை குறித்து வைத்து, அதனை நம்பிக்கைகளாக சந்ததி சந்ததியாகக் கடத்த முயற்சிக்கிறான்.

      மூடநம்பிக்கைகள் பலவற்றினதும், ஈற்று விளைவு தனிமனிதனுக்கு கெடுதலை ஏற்படுத்திவிடும் என்ற ஒரு விடயமே அதிகளவில் அந்த விடயங்களை நம்ப வைத்துவிடுகிறது. வலிகள் எதுவுமே இல்லாத வாழ்க்கை வேண்டுமென்ற நப்பாசை கூட இதனை தோற்றுவித்திருக்கலாம்.

      வலிகள் இல்லாமல், உலகில் உருப்படியாக எழுந்த உயரிய பொருள்கள் எதுவுமில்லை. “வலி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்” என்று சொல்லியுமுள்ளார்களே!!

      இனிய புன்னகையுடன்,
      உதய தாரகை

திக‌ழ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி