எண்ணம். வசந்தம். மாற்றம்.

எனது புகழும் அவளின் விபத்தும்

இணைக்கப்பட்ட உலகம், உலக உருண்டை, உலகம் ஒரு குக்கிராமம் என்றெல்லாம் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள சாத்தியங்களை புகழ்ந்து கொள்ளாதவராக நீங்கள் இருக்க முடியாது. ஏனெனில் உலகத்தின் பாலுள்ள அனைத்து ஊடகங்களும் இதுபற்றித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தொடர்பில் தான் சுற்றிக் கொண்டுமிருக்கிறது.

ஓரிரவில் புகழடைய முடியாது என்ற தொன்மையான கருத்தைக் கூட, தொழில்நுட்பம் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறது. தந்தையோடு பல்வைத்தியரிடம் சென்று பல்லை கழற்றிவிட்டு வரும் ஏழு வயதான டேவிட் என்ற பையன் தனது தந்தையிடம், ”இதுதான் வாழ்க்கை என்பதா?” (Is this real life?) என்று தனது வலி பற்றி தந்தையிடம் வினவுகிறான்.

அப்படிக் கேட்பதை தந்தை தனது Flip வீடியோ கமராவினால் பதிவுசெய்து YouTube இல் உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறான். காட்டுத்தீயாய் டேவிட்டின் ”இது தான் வாழ்க்கை என்பதா?” என்ற கேள்வி அடங்கிய வீடியோ இணையப் பரப்பில் பிரபல்யமாகிறது.

David After Dentist, Is this real life? போன்ற சொற்கள் வர்த்தகக்குறிகளாக மாறிவிடுகிறது. இரவோடு இரவாக வெறும் வீடியோ ஒன்றின் மூலமாக வருமானம் ஈட்டித்தரும் வர்த்தகத்திற்கான வாய்ப்பு உண்டாகிறது. காரணங்கள் எதுவுமே இல்லாமல் காரணங்கள் தோன்றத் தொடங்கி்ன்றன.

கண்களால் பாடம் சொன்னாள்

புகழ் என்ற சொல்லுக்கும் விபத்து என்ற சொல்லுக்குமிடையில் எந்த ஒற்றுமையையும் காண முடியாதுதான். ஆனால், புகழையும் விபத்தையும் என்னால் நெருக்கமாகவே பார்க்க முடிகிறது. விபத்துகளை யாரும் திட்டமிட்டு ஏற்படுத்துவதில்லை. திட்டமிடப்படும் விபத்துக்களுக்கு தமிழில் வேறு பெயருண்டு என்று எனக்கு தமிழாசான் சொல்லியுள்ளார்.

விபத்துகள் திட்டமிடப்படாவிட்டாலும், திட்டமிடப்பட்டு செய்யப்படும் விடயங்களில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எதுவுமே செய்யமாலிருப்பது தான் இலகுவானது என்று யாரும் சொன்னால், அதை என்னால் ஏற்க முடியாது. ஆனால், இன்றளவில் அது இலகுவானது தான் என்பதற்கு பிரசாரங்களே நடந்துவருகிறது.

“விமர்சனங்களை கேட்க விருப்பமில்லையா? எதுவுமே செய்யாமலிருங்கள்” என்று என் நண்பன் ஒருவன் அண்மையில் டிவிட்டரில் டிவிட்டியிருந்தான். ”எதுவுமே செய்யாமலிருப்பதும் உனக்கு விமர்சனங்களைக் கொண்டு தரும்” என்று அவனுக்கு செய்தி சொன்னேன்.

ஜோன் மைக்கல் மொன்கோமரியின் Life’s a Dance என்ற பாடலைக் கேட்கும் ஒவ்வொரு நேரமும் வாழ்க்கையில் விபத்துக்களின் தேவையை என்னால் அதிகமாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.

அப்போது எனக்கு பதினான்கு வயதிருக்கும்
என் வகுப்பின் நீலநிறக் கண்ணாளிடம்
என்னைத் தொலைக்கிறேன் – அவளிடம்
என் காதலைச் சொல்லிவிட எப்போதும் நான்
நீர்த்தாரையிலிருந்து எண்ணெயை எடுப்பது
போல் என்னோடு நானே சண்டைபோடுவேன்.
அவள் பதிலாக என்ன சொல்வாளோ? – எதை
என்னால் சொல்ல முடியாது? என்ற கேள்விகளுக்குள்
அவள் என்னைத் தாண்டிச் சென்றிருப்பாள்
”மூழ்கவோ நீந்தவோ கடலில் இறங்கவே வேண்டும்”
என்பதை நீலநிறக் கண்ணாள் எனக்கு கற்றுத் தந்தாள்.

அந்த ஆங்கிலப் பாடலின் வரிகளை தமிழாக்கினேன். இங்கு மொழிகள் வேறுபட்டாலும் சொல்லும் பாடம் ஒன்றுதான். விபத்து பற்றியதான பயம் நீந்தவிருந்த ஆளுமைக்கே தடைவிதிக்கிறது. இங்கு உணர்வினால் மொழிகளே ஊமையாகின.

புகழ் பற்றிய பயமும் ஆபத்தான புகழும்

”எனது வெற்றியே ஒரு விபத்துதான்”, ”இந்தத் துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்” என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் பல பின்னணிகளிலிருந்து எம்மோடு தமது வெற்றி பற்றிய விடயங்கள் பற்றி சம்பாஷிக்கிறார்கள். அவர்கள் சொல்லித் தரும் பாடமெல்லாம் விபத்து பற்றியதான அவர்களின் பயமின்மை தான்.

புகழுக்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தம் விபத்து. நான் Seth Godin இன் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பவன் தான். அவர் சொல்லும் கருத்துகளிலும் அதனை அவர் சொல்லுகின்ற விதத்திலும் எனக்கு அத்துணை காதல்.

விபத்து வந்துவிடும் அதனால் தோற்றுவிடுவோம் என்ற பயம், யாருக்குத்தான் வராமலிருக்கும். ஆனால், தோல்வி பற்றியதான பயத்தினை விரட்ட தோல்வி என்றால் என்னவென்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கோடின். ”கொடூரமான மிருகமொன்று தனது கொடுமையான பல்லினால் உங்களை சாப்பிடுவது போன்றதல்ல தோல்வியின் வலி (விலை)” என்று சொல்லும் கோடின், இன்னும் இரண்டு வசனங்களை அழகாகச் சொல்கிறார்.

”தோல்வியின் வலி (விலை) என்பது எதுவுமே இல்லை. நீங்கள் தோற்பதுதான் நீங்கள் எதிர்நோக்கும் பாரதூரமான விடயம் ஆனால் யாருமே அதைக் கவனிக்கப் போவதில்லை.”

இன்று எதுவுமே செய்யாமலேயே, இது செய்தால் இது நடந்துவிடும்… ஐயகோ! அது செய்தால் அதுவும் நடக்கலாம்.. ஊ… இதைச் செய்தால் அதுவும் இதுவும் நடக்கலாம் என்று சொல்லும் அவன்களையும் அவள்களையும் என்னால் அதிகமாகவே பார்க்க முடிகிறது.

தான் செய்யப்போகும் விடயத்தை திட்டமிட்டுச் செய்து கொண்டு, அது பற்றி ஆயத்தமான நிலையில் அதனைப் பற்றிச் தன்னைச் சார்ந்தோர்களிடம் சொல்லும் போது, முட்டாள் கூட புத்திசாலியாகிவிடுகின்ற கொடுமை நிகழ்ந்து விடுகிறது.

எத்தனையோ அர்த்தமுள்ள முன்னெடுப்புகள், ”அவங்களுக்கிட்ட இதெல்லாம் எடுபடாது” என்ற வெறும் கொடூரமான காரணமொன்றினால் செயலிற்கு வராமலேயே முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றன.

புகழ் பெறுவதென்பது இலகுவான விடயமென்று சொல்பவனுக்கு, விபத்துகள் பற்றிய பயமில்லை என்றே நான் சொல்வேன். அது அப்படி இருக்கவும் வேண்டும்.

எனக்குத் தேவையானதை நான்தான் கேட்டு வாங்க வேண்டும் என எனக்குப் புரிகிறது. அதை, ”உனக்கு தேவையானதை நீதான் கேட்டு வாங்க வேண்டும்” என்று அவளிடம் சொன்னால், எனக்கு உதவி செய்யும் மனப்பாங்கு இல்லை என்ற பொல்லாப்பு எழுகிறது. கடலில் இறங்குபவனால் தான் மூழ்க முடியும் அல்லது நீந்த முடியும்.

தபாலில் நீந்தக் கற்றுக் கொள்வது போன்றது தான், இன்னொருவரின் தயவில் நமது வேலைகளை செய்யக் காத்திருப்பது. காத்திருப்புகள் எல்லாம் நேர விரயத்திற்கு நாம் தரும் இன்னொரு பெயர் என்று மட்டுந்தான் என்னால் சொல்ல முடியும். “இன்று மட்டும் வாழ்வதாய் வாழு. என்றுமே வாழ்வதாய் கல்” என்று காந்தி சொன்னார்.

விபத்துக்களை பலவேளைகளில் ரசிக்கத் தெரிந்த எனக்கு, அவளை விபத்துக்களை ரசிக்கும் படியான அற்புத ஜீவனாக மாற்ற முடியவில்லை. அவள், புகழுக்கு விபத்து வரக்கூடாது என்பதிலேயே குறியாய் இருக்கிறாள். ”விபத்துக்கள் தான் புகழ் கொண்டு தருகின்றன” என்ற விடயத்தை அறியாத அவள் மடைமையைப் பற்றி நான் என்னவென்று சொல்வது?

“இறந்த போது ஒருவன் பெற்றுக் கொள்ளும் புகழை, அவனால் வாழும் போது பெற்றுக் கொள்ள முடிவதில்லை.” என்று யாரோ சொல்லியுள்ளதாக, கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

“எனது புகழும் அவளின் விபத்தும்” அதற்கு 7 மறுமொழிகள்

  1. ksphiudt Avatar
    ksphiudt

    வாழ்வை ஆக்கபூர்வமானதாக பார்ப்பதற்கு உணர்வுபூர்வமான பதிவு.

    1. உதய தாரகை Avatar
      உதய தாரகை

      நன்றி அப்பன் தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

      இனிய புன்னகையுடன்,
      உதய தாரகை

  2. நிமல் - NiMaL Avatar
    நிமல் – NiMaL

    ”விபத்துக்கள் தான் புகழ் கொண்டு தருகின்றன” – உண்மைதான்….

    நல்ல பதிவு… தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்…


    நிமல்

  3. SIDDEEQUE Avatar
    SIDDEEQUE

    It is very interesting. Keep it up.
    Now I am a big fan of ”Niram”
    Niram always different from other site..Lot of knowledge and research has done before release of any article. I really appreciate your work. Worth spending time!!!

    Well Done.

  4. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    வாங்க நிமல்.. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  5. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    வாங்க சித்தீக் சார்.. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல.. நிறத்தின் பதிவுகள் பற்றிய தங்களின் கருத்தை கேட்கும் போதே அகமகிழ்ச்சி கொள்கிறேன். நிறத்துடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  6. Muszhaaraff Avatar
    Muszhaaraff

    ஒரு படைப்பானது எமது உணர்வுகளின் நேரடி மொழி பெயர்ப்பாக எம்மால் உணரப்படும் போதுதான் வாசகனைப் பாதிக்கும்.சிறந்த படைப்பாக பேசப்படும்.இந்த பதிவும் அப்படித்தான்…அட நான் அனுபவித்த விஷயம் இது…நான் எழுத நினைச்ச விஷயம் இது…என பல இடங்களில் என் உணர்வுகளின் விம்பங்களை இந்தப்பதிவில் பார்த்தேன்…வாழ்த்துகள்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்