எண்ணம். வசந்தம். மாற்றம்.

என்னை நானே தேடித் தேடி..

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 33 செக்கன்களும் தேவைப்படும்.)

எம்மைச் சுற்றியுள்ள சூழல் பற்றிய நிலைகள் எந்நேரமும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது அப்படி இருக்கவும் கூடாது. ”அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் உலகில் ஏராளம்” என்று அன்பே சிவம் திரையில் ஒரு வசனம் வரும்.

மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் எதுவுமே இல்லாத நிலையல்ல, மாறாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல்தான் மகிழ்ச்சியாகும் என்று அண்மையில் நூலொன்றில் வாசித்தேன். அடுத்த வினாடி தரும் மாற்றத்தை சந்திக்கின்ற, எதிர்நோக்கின்ற சக்திதான் வாழ்க்கையை ரசிக்கச் செய்கிறது.

இப்போதெல்லாம் காலத்தின் அதிர்வுகளை அதிகமாகவே என்னால் கண்டு கொள்ள முடிகிறது. இதற்கு எதுவும் குறிப்பிட்ட காரணங்கள் உண்டா என்றால், ஆம் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று பதில் சொல்வேன்.

நான் பிழை செய்து விட்டதாகச் சொல்லும் அவளால், அவள் சரியாகச் செய்தவொரு விடயத்தைத் கூட சொல்ல முடியாதுள்ளது. அவளுக்கு சண்டைகளில் அவ்வளவு பிரியம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரியமானவர்களுடன் சண்டை செய்வதில்தான் அன்பு அதிகரிக்கும் என்று வரைபிலக்கணம் வேறு சொல்கிறாள்.

ஆனாலும், இந்தப் பொழுதில் அவள் சொல்வதையோ அல்லது யாரும் சொல்வதையோ என்னால் கேட்க முடியாது. என்னைத் தேடிக் கொண்டு செல்லும் பயணத்தில் நிறைய விடயங்களைச் சந்திந்திருக்கிறேன். அத்தனை விடயங்களையும் சொல்லிவிட இது அவகாசம் ஆகாது.

ஆனாலும், என்னைத் தேடிய பொழுதுகளில் என் மனத்தில் தோன்றிய அதிர்வுகளைப் பகிரலாம் என்றே இந்தப் பதிவு. இதில் சொல்லப்படும் விடயங்கள் யாவும் உங்கள் உணர்வுகளை கொஞ்சமாகவேனும் உசுப்பிவிடலாம். இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் பதிவாகக் கூட பார்க்கப்படலாம்.

“அட்வைஸ் அன்னாச்சாமி” களை இந்தக் காலத்தில் நிறையவே காண முடிகிறது. “வலி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்” என்ற பாடல் வரி, வாழ்க்கையில் வலிகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லி நிற்கும். வலிகளைக் எதிர்கொள்ளும் நிலையில் மட்டுமே புதிதாகச் சிந்திக்க வாய்ப்புண்டாகிறது.

அற்புதமானவரை நீங்கள் தேட வேண்டாம். நீங்கள் தான் அந்த அற்புதமானவர்.

மற்றவர்களை மன்னிக்க பழகியிருக்கும் நாம், பலவேளைகளில் எம்மை நாமே மன்னிக்க முடியாத நிலையிலிருக்கிறோம். வலிகள் என்னைக் குடிகொண்டதற்கு என் பிழைதான் காரணம் என்று தன்னையே சாடிக் கொண்டு காலம் முழுவதும் வாழும் கொடுமை அகோரமானது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் தான் கட்டாயம் தேவைப்படுகிறது.

தன்னை ஆளுவதற்கான ஆர்வம், தன்னை எந்தளவில் தேற்றமுடியுமென்பதிலேயே தங்கியிருக்கிறது.

உலகில் பொதுவாகச் சொல்வார்கள், “உனக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருக்கிறது என்பது நீ அந்த விடயத்தை மற்றவர்களுக்கு எவ்வாறு தெளிவாக புரிய வைக்கின்றாய் என்பதிலேயே தங்கியுள்ளது”. உண்மைதான். தன்னை மன்னிக்கத் தெரிந்தவனால் தான் மற்றவனை மன்னிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனக்கொரு நண்பனிருந்தான். அவன் பரீட்சை மண்டபத்திற்கு வந்து பரீட்சை எழுதுவதை விட, மற்றவர்கள் எத்தனை விடைத்தாள்களில் விடையெழுதிக் கொடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதிலேயே குறியாய் இருப்பான். அவனை விடவும் அதிகமான தாள்களில் யாரும் விடையெழுவதைக் கண்டு விட்டால், தான் பரீட்சையில் தோற்றுவிட்டதாக எண்ணிக் கொள்வான்.

இந்த கொடூரமான வழக்கத்தை அவனால் இன்னும் அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை. தன் கவலையை பரீட்சை முடிந்ததன் பின்னர் மற்றவர்களுடன் பகிர்வதிலேயே பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கிக் கொண்டிருப்பான். மற்றவர்களோடு எம்மை ஒப்பிட்டுக் கொள்கின்ற வழக்கமென்பது எல்லோரிடமும் தான் இருக்கின்றது என்றால் இல்லையென்றே சொல்வேன். முன்னேறியவர்கள் யாரும் தன்னை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

உன் பாதை என்பது தனிப்பாதை. இன்னொருவனின் பாதச்சுவட்டில் நடக்கும் போது, உனது பாதச்சுவடுகளுக்கு முகவரியில்லாமலே போகலாம். நான் நானாக இருக்க வேண்டும் என்பதில் தான் உன் இருப்பிற்கே அடையாளம் கிடைக்கிறது.

வாசகனிற்காக கதையெழுதுவது வர்த்தகனின் வேலை, உன் உணர்வுகளை உயிர்ப்பாக்குவது தனிமனிதனின் அழகு.

உணர்வுகளிற்கு உயிர்ப்பு கொடுக்கும் நிலையென்பது, ஒருவன் தன்னை நம்புகின்ற நிலையில் தான் சாத்தியமாகிறது. செய்யும் கருமங்கள் யாவற்றிலும் நம்பிக் கை வைக்கும் போது, அர்த்தமுள்ள வாழ்க்கை இயல்பாகவே எய்தப்படலாம்.

தன்மேல் தானே நம்பிக்கை கொள்வதென்பது அவ்வளவு லேசுபட்ட விடயமல்ல என்பதை நானறிவேன். எம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விடயங்களும் எதிர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது இதற்கிடையில் எப்படி எம்மில் நாமே நம்பிக்கை வைப்பது என்ற கேள்வி பலமாகவே பல நேரங்களில் எழலாம்.

உன்னை நீ நம்புவதற்காக யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. நீ உன் மீது கொண்ட நம்பிக்கையின் உச்சத்தின் பெறுபேற்றை ஒரு பொழுதில் காண்பாய் அப்போது பழம் நழுவி பாலில் விழுந்ததாய் ஆனந்தம் புரவிக் கொள்ளும்.

நம்பிக்கை என்ற விடயம் அன்பென்கின்ற நிலையில் அதிகமாகவே ஆதிக்கம் செலுத்துகிறது. நான் நினைப்பது போன்று இந்த உலகில் மாற்றங்கள் தேவையாயின் என்னில் நான் அன்பு செலுத்த வேண்டும். ஆம். வேண்டும். தன்னைத் தானே அன்பு கொள்கின்ற நிலையில், தனது நிலை சார்ந்த எண்ணங்களை மற்றும் நடவடிக்கைகளை சுற்றியுள்ள சமூகம் ஆச்சரியத்துடன் பார்க்கும்.

மற்றவர்களும் அதன் பால் நடக்கலாம் என்ற ஆமோதிப்பு அந்த ஆச்சரியத்தில் இழையோடும். காந்தியும், ஒரு தடைவை, “நீ எந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென எண்ணுகிறாயோ, அதுவாகவே நீயும் மாறு” என்றிருப்பார்.

“நான் என்னைக் காதலிக்கிறேன்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

ஆனால், மிக முக்கியமான கேள்வி, நீங்கள் உங்களைக் காதலிக்கிறீர்களா?

“என்னை நானே தேடித் தேடி..” அதற்கு 3 மறுமொழிகள்

  1. குந்தவை Avatar
    குந்தவை

    //மற்றவர்களை மன்னிக்க பழகியிருக்கும் நாம், பலவேளைகளில் எம்மை நாமே மன்னிக்க முடியாத நிலையிலிருக்கிறோம். வலிகள் என்னைக் குடிகொண்டதற்கு என் பிழைதான் காரணம் என்று தன்னையே சாடிக் கொண்டு காலம் முழுவதும் வாழும் கொடுமை அகோரமானது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் தான் கட்டாயம் தேவைப்படுகிறது.

    ரெம்ப நல்ல கருத்து. சில நேரங்களில் செய்ததவறை திருத்தமுடியாத போது ….. மறக்க முடியாமல் போகிறது.

  2. vasntvel Avatar
    vasntvel

    நல்ல கருத்து i like it

  3. கவலை பற்றியதான கவலைகள் « நிறம் Avatar
    கவலை பற்றியதான கவலைகள் « நிறம்

    […] எல்லோரும் தான் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். அந்தத் தடங்கல்கள் பல வேளைகளில் எமது தீர்மானங்களின் வருவிளைவுகளாக இருக்கின்றன. கவலைகளின் ஆதாரங்களாயும் தொடர்கின்றன. அந்தத் தீர்மானங்களை எடுத்தத்திற்காக உங்களை நீங்களே மன்னிக்க பழக வேண்டியுள்ளது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் … […]

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்