எண்ணம். வசந்தம். மாற்றம்.

உன்னைப் பற்றிய எனது கவலைகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.)

மனம் பற்றிய விந்தைகளைப் பற்றி நாளாந்தம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மனத்தின் ஆளுமை, உத்வேகம் பற்றிய ஆர்வநிலைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த விடயம் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், நமது மனது பற்றிய ஆழமான விசாரிப்புகளில் மட்டுந்தான் நாம் எம்மைப் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

உங்களைச் சூழ்ந்த உலகம் பற்றிய அவதானிப்புகள் தான் இந்தக் கணத்தின் வலிமையையோ, வெறுப்பையோ தருவதற்கு காரணியாகி விடுகிறது.

நீங்கள் நம்பிக்கை கொண்டவராய் விடயமொன்றை சொல்லும் போது, உங்களை அவர்கள் திமிர் பிடித்தவர் என சொல்வார்கள்.

நிதானமாக சிந்தித்து ஒரு விடயம் சார்பாக நீங்கள் வேலை செய்யத் தொடங்கினால், உங்களுக்கு உங்களைப் பற்றிய நம்பிக்கை அதிகமாக இருக்கிறது (Over Confidence) என்று சொல்வார்கள்.

ஒரு விடயத்தின் நோக்கத்தை அடையும் வகையில் நீங்கள் கருமம் ஆற்றத் தொடங்கும் நிலையில், உங்களை அவர்கள் சுயநலக்காரன் என்று சொல்வார்கள்.

நீங்கள் யாரென்று நீங்களே உங்களை அறிந்து கொண்ட நிலையில், உங்களிடம், “உண்மையாகவே, நீ யாருப்பா?” என்று ஏளனமாக கேட்கத் தொடங்குவார்கள்.

பச்சாதாபம், கருணை என்பவற்றை நீங்கள் நம்பிக்கை கொண்டு செயல்பட, உங்களை அவர்கள், ரொம்ப வெகுளித்தனமாக நீங்கள் இருப்பதாகச் சொல்வார்கள்.

நீங்கள் கனவு காண்பவராக இருக்கும் நிலையில், உங்களை நிஜ உலகுக்கு வருமாறு ஒரு வகையான கேளியாக அழைக்கத் தொடங்குவார்கள்.

நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களை எதிர்க்கத் தொடங்கும் நிலையில், அவர்கள் உங்களை கட்டுப்படுத்த தருணம் தேடித் திரிவார்கள்.

நீங்கள் யாரிந்த “அவர்கள்” என்று கேட்கலாம் அல்லது உணர்ந்து கொண்டு விட்டிருக்கலாம்.

அந்த “அவர்கள்” – இந்தப் பாத்திரத்தை நாம், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்றுக் கொள்கிறோம்.

இது ஏன் இப்படி நடக்கிறது என்பது பற்றிய அவதானிப்புகள் இருந்தாலும், அது சொல்லித்தரும் பாடத்தை பலரும் புரிந்தாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும், நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது இவைதான்.

அவர்களுக்கு உங்களிடம் இருக்கும் தனித்துவமான விடயங்களைப் பெற்றுக் கொள்ள ஆசை, அதனால் அவர்களிடம் பொறாமை குடிகொண்டு விடுகிறது.

அவர்கள் மாற்றங்கள் உருவாக்கப்பட்ட போதும், மாற்றங்கள் பற்றிய பயம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.

அவர்களின் கவலைகளை, உங்களிடம் கோபமாக பிரதிபலிக்கச் செய்ய பகிரத பிரயர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், இவை எல்லாமுமே தவறான விடயங்களாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது. சிலபேர் தங்களின் மனது பற்றிய அழகிய புரிதலின் பின்னர், தம்மையே தேற்றிக் கொண்டு உங்களோடு கைகோர்த்து ஒருமித்து செயல்பட முன்வருவர்.

நீங்கள் நல்லவராய் இருந்த போது, அந்த நல்லவர் என்ற நிலையை தாங்களும் அடைய வேண்டுமென்ற ஆசைதான் அவர்களுக்கு பொறாமைக் கொடுத்தது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர்களை அகமகிழ்ந்து உங்களோடு சேர்ந்து கருமம் செய்ய அழைப்பீர்கள்.

“உங்கள் துணையில்லாமல் நான் தவித்திருந்தேன்” என்று நீங்கள் சொல்வீர்கள். “நல்ல நேரம், காலம் எம்மை சேர்த்து விட்டது” என்று அவர்கள் மகிழ்வை ஆழ்மனத்தால், உங்களுக்கு தெரிவிப்பார்கள்.

எது எப்படியோ, நீங்கள் காந்தியடிகள் சொன்ன விடயத்தை கட்டாயம் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். அது தான்:

“முதலில் உங்களை அவர்கள் புறக்கணிப்பார்கள், பிறகு உங்களைப் பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள், பின்னர் உங்களோடு போராடுவார்கள், ஈற்றில் நீங்களே வெல்வீர்கள்.”

– உதய தாரகை

பதிவில் நான் வடிவமைத்துச் சேர்த்துள்ள ஆழகிய நிழற்படம் இங்கிருந்து பெறப்பட்டதாகும்.

“உன்னைப் பற்றிய எனது கவலைகள்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. நிமல் Avatar
    நிமல்

    உண்மைதான், நாம் பல சமயங்களில் நான் பற்றி கவலைப்படுவதைவிட நீ பற்றியே அதிகம் கவலைப்படுகிறோம். இது நியாயமான கவலை என்பதைவிட நீங்கள் சொல்வது போல் ஆற்றாமையாகவோ, பொறாமையாகவோ இருந்துவிடுகிறது.

  2. Tharique Azeez | உதய தாரகை Avatar
    Tharique Azeez | உதய தாரகை

    வாங்க நிமல்…

    தன்சார்பான தேடல்கள் வரிதாக்கப்பட்ட நிலையில் தான் பல பிரச்சினைகள் வேர்விடத் தொடங்கிவிடுகின்றன என்பது எல்லோரும் அறிந்தும் சொல்லாமல் அகப்பட்டுப் போன உண்மை எனலாம்.

    மற்றவர்கள் (நீ) பற்றிய கவலைகள், எம் (நான்) பற்றிய கவலைகளில் எந்த ஆதிக்கத்தையும் செலுத்ததாது என்பது தெளிவு.

    பச்சாதாபம் (empathy) என்பதற்கான அர்த்தம் சிறப்பாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது காலத்தின் தேவை.

    நன்றி நிமல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்