எண்ணம். வசந்தம். மாற்றம்.

புதன் பந்தல் – 31.08.2011 [#1]

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 20 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

புதன் பந்தல் என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளியிடலாமென ஆர்வங் கொண்டுள்ளேன். குறித்த வாரத்தில் என் கவனத்தை ஈர்த்த மற்றும் நீங்கள் அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டிய விடயங்களை வித்தியாசமான முறையில் தொகுத்துத் தருவதே இந்தப் பதிவுகளின் நோக்கமாகும்.

வித்தியாசமான முறை என குறிப்பிட்டதற்கான காரணமென்னவெனில், நிழற்படங்கள் ஒன்று சேர நேர்த்தியாக அமைக்கப்பட்டு, தகவல்களும் விடயங்களும் பரிமாறிக் கொள்வதாய் திடசங்கல்பம் பூண்டுள்ளேன்.

இந்த வாரத்திலிருந்தே, புதன் பந்தல் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த வாரப் புதன் பந்தலில் நாம் மூன்று விடயங்களைப் பற்றி பார்ப்போம்.

1. கடலின் அழகே உருவாய் உயர்ந்தெழும் அலைகளின் அலைவுகளை உபயோகத்திற்கு எடுத்து, நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடும் ஆர்வலர்களை பார்ப்பதில் ஆனந்தம் குடிகொள்ளும். இயற்கையின் அழகின் வியப்பையும் அப்படியே கண்டு கொள்ள முடியும். அண்மையில் இந்த நீர்ச் சறுக்கல் விளையாட்டில் நீரோடு சேர்த்து தீயையும் கொண்டு, அலைகளுக்கிடையே ஒரு வீரர் பயணம் செய்தது இணையப் பரப்பில் வியப்பாகப் பேசப்பட்டது. புதன் பந்தலில் முதலாவதாக அந்தக் காணொளி உங்கள் பார்வைக்கு.

2. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்று ஒரு பழமொழி உண்டு. இந்த அசைவும் தகவுள்ள நிழற்படத்தை (GIF animation) பார்க்கையில், குறித்த பழமொழி என் ஞாபகத்திற்கு வந்து போனது தவிர்க்க முடியாமல் போனது. சிந்திக்காமல் செய்கின்ற விடயங்களால், குறித்த நபருக்கு கொடுமைகள் உண்டான போதும், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையைத்தான் தந்துவிடுகிறது. இரண்டாவது அசையும் நிழற்படத்திற்கான இணைப்பு இது.

3. இற்றைக்கு ஒரு சில தசாப்த காலங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்திய பொருள்கள் பற்றிய ஞாபகம், குறித்த பொருள்களை பாவித்தவர்களிடமே, அரிதாகிப் போவதை அண்மையில் அவதானிக்க முடிந்தது. மூன்றாவது நிழற்படத்தில் காணப்படும் இரண்டு பொருள்களுக்கும் இடையான தொடர்பு என்ன? என்ற கேள்விக்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த சிறார்களால் மிகச்சரியான பதிலைத் தரமுடியுமென எதிர்ப்பார்க்க முடியாது. நிறையப்பேருக்கு, படத்தில் இருக்கும் பென்சிலை அடையாளப்படுத்த முடிந்தாலும், கெசட்டை (Cassette) அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பென்சில் கொண்டு, கெசட்டின் மேலே எழுதலாம் என்பதே இதற்கிடையான தொடர்பு என்றும் ஒருவர் கூறக்கேட்டேன். இந்த விடயம் விஞ்ஞானத்தின் அடிப்படையாக இல்லாவிட்டாலும், நாம் பொருள்களை விவேகமாகப் பயன்படுத்தினோம் என்பதற்கான ஆதாரமான ஒரு விடயமாகும். இன்று பொருள்களைக் கொண்டு, மாற்றுக் கருமங்கள் ஆற்றுவதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்படும் நிலை வரிதாகியுள்ளது கவலையான விடயமே. ஆக, நான் இந்த இரண்டு பொருள்களுக்குமான தொடர்பை சொல்லப்போவதில்லை. உங்களுக்கு தெரியும், அதனை மறுமொழியில் சொல்லுங்கள்.

அடுத்த புதன் பந்தலில் சந்திப்போம்.

– உதய தாரகை

“புதன் பந்தல் – 31.08.2011 [#1]” மீது ஒரு மறுமொழி

  1. Nimal a.k.a. TalkOut (நிமல்) Avatar
    Nimal a.k.a. TalkOut (நிமல்)

    ஒரு கசட் (cassette) பதிவு கருவியும் சில கசட்டுகளும் தான் நான் இப்போது செய்யும் ஒலி/ஒளி வடிவிலான பரிட்சார்த்த முயற்சிகளின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. இற்றைக்கு 15-20 வருடங்களுக்கு முன்னால்…

    அந்த நாட்களில் பென்சில் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், கசட் ஒன்றை ரீவைன்டை (rewind) செய்யவும் பயன்பட்டிருக்கிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்