கடிதத்திற்கான காத்திருப்பு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இது எப்போதும் இருந்ததில்லை. அடிக்கடியும் நடப்பதில்லை. எப்போதாவது நடக்கும். நடக்கும் போது, என்னை பிழிந்தெடுக்கும். இதிலென்ன வினோதம்?

காதலியிடமிருந்து கடிதமா? என்றால் இல்லை என்றுதான் பதில். அப்படியானால் யாரிடமிருந்து கடிதம்?

சிலவேளைகளில் அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான எனது தேட்டம் ஒவ்வொரு நாளிகைகளிலும் என்னோடு பயணிக்கும். கடிதங்களோடான எனது உறவு என்பது ஒரு தொடர் கதை. பெரிய கதையும் கூட.

பாடசாலையில், வருத்தம் என்று சொல்லி வீடு செல்ல அனுமதி கேட்டு அதிபருக்கு எழுதிய கடிதம், கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு எழுதிய கடிதம், ஆசிரியரிடம் சுகம் விசாரித்து எழுதிய கடிதம், ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டி பத்திரிகைக்கு எழுதிய கடிதம் என கடிதங்களின் பாத்திரங்கள் ஏராளம்.

கல்லூரி விடுதியிலிருந்து பழைய பாடசாலை நண்பனுக்கு, பாடசாலை முகவரிக்கே கடிதம் எழுதிய நினைவுகளும் எனக்கிருக்கிறது. கடிதத்தை, பரிசு ஒன்று வந்ததாய் அவன் பார்ப்பதாய் சொல்வான். அழகான நினைவுகள் அவை.

கடிதம் — இப்போதெல்லாம் இதற்கு வேறு பெயர்கள், வேறு ஊடகங்கள். பேனாவைக் கொண்டு கடிதம் எழுதுபவர்கள் — ஏன் குறிப்பெழுதுபவர்கள் கூட குறைவுதான். இது பிழையல்ல.

பென்சிலிருந்து பேனாவிற்கு வந்த காலத்தில், பென்சிலை விட்டுவிட்டு பேனாவிற்கு மக்கள் கொடுத்த வரவேற்பையும் இப்படித்தான் உலகம் கண்டிருக்கும்.

நாம் வாழ்கின்ற காலத்திற்கு முன்பு வாழ்ந்தோர், தம் வாழ்நாளில் கண்டு வியந்தவைகள் பற்றிய விடயங்களை பகிர்கையில், எமக்கு அதன் பாலான வியப்பு புரிவதில்லை. அது எமக்கு பழையது. ஆனால், அவர்களுக்கோ அன்று அது ஆச்சரியம் தரும் புதிய விடயம்.

அதுபோலத்தான், ஒரு காலத்தின் வியப்புக்குரிய நிகழ்வு – இன்னொரு காலத்தின் இயல்புக்குரிய நிகழ்வு. இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதை யதார்த்தமாக கண்டு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நீங்கள் பிறக்கும் போதிருந்த உலகத்தின் நிலை இன்றில்லை. என்றும் அது போலவும் இனி வராது.

இன்றளவில் கடிதங்களின் பிறப்புக்கான மூலங்களாக, இலத்திரனியல் கருவிகளின் விசைப்பலகைகள் மாறியிருக்கிறது. வேகமாக எல்லோராலும் எழுத முயற்சிக்க முடிகிறது. மொழிகள் கடந்தும் பலர் எழுதத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனாலும், பேனாவினால் கடதாசியில் எழுதும் கடிதங்கள் மீதான காதல் அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதவியலாது. அப்படிக் கடிதங்களை காண்கின்ற வேளையில் ஒருவர் அடைகின்ற மகிழ்ச்சியின் அளவை அவர்களின் கண்களில் பலதடவை கண்டிருக்கிறேன்.

கடிதம் பெற்றுக்கொள்கின்ற நிலையில் தோன்றும் மகிழ்ச்சி மிகவும் அழகானதொன்று. கையால் எழுதாத கடிதங்களுக்குள்ளும் மகிழ்ச்சி பொதிந்த நிலைகள் உண்டென்பதை பல கடிதங்கள் சொல்லியிருக்கின்றன.

கடதாசியில் எழுதும் கடிதங்களாய், அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் சிலவும் அழகிய தமிழில் ஆனந்தம் சொறிந்தது. கடிதங்களை பொக்கிஷமாகக் காண்கின்ற உலகப் போக்கு எப்போதுமே இருந்தது. இருக்கும்.

உறவுமுறைக் கடிதங்கள் தொடங்கி உத்தியோகபூர்வ கடிதங்கள் வரை கடிதங்கள் சொல்கின்ற செய்திகளின் பரப்பு விசாலமானது. உலகப்புகழ் பெற்ற உத்வேகம் தரக்கூடிய கடிதங்களையும் நாம் கண்டுள்ளோம். ஆபிரிகாம் லிங்கன் தனது மகனின் வாத்தியாருக்கு எழுதிய கடிதம் உத்வேகத்தின் ஊற்று.

நான் பல நாட்கள் காத்திருப்பதும் ஒரு கடிதத்திற்குத் தான். அது இன்று வந்து ஆனந்தம் தந்தது.

கடிதங்கள் தரும் ஆனந்தத்தின் அளவு கூட, அதற்கான காத்திருப்பின் அளவிற்கு நேர்விகித சமனாகவே இருக்கிறது என்று நியூட்டன் எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஆனால், அதுதான் உண்மையென உணர்ந்து கொள்கிறேன்.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:

iTunes இல் நிறம் Podcast Niram Podcast

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s