எண்ணம். வசந்தம். மாற்றம்.

இதுவொரு கமராவின் கதை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 59 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அவனொரு பிரபலமான நிழற்படப்பிடிப்பாளன். உலகப் புகழ் வாய்ந்த பல நிழற்படங்களின் சொந்தக்காரன் என்று கூட சொல்லிவிடலாம். அவனின் அற்புதமான நிழற்படங்களை நேசிப்பவர்கள், அவனோடு கொஞ்சம் பேசிவிட வேண்டுமென ஆர்வம் கொள்வர்.

அவன் வாழ்ந்த பகுதியில் வசித்த, செல்வந்தன் ஒருவன், அவனை இராப்போசனத்திற்காக அழைத்தான். அழைப்பை ஏற்று, அவனும் செல்வந்தனின் வீடு சென்றான்.

செல்வந்தனைப் போலவே, செல்வந்தனின் மனைவிக்குக் கூட, இவனின் பிரபலமான நிழற்படங்களை ரொம்பப் பிடித்திருந்தது.

அவன் அங்கு சென்றதைக் கண்டதும், உடனே சந்திக்க முந்திக் கொண்டு, “உங்களை இங்கு காண்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களின் அற்புதமான நிழற்படங்கள் பலதையும் பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனையும் என்னைக் கவர்ந்தவை” என்றாள் – அவன் அவளுக்கு புன்னகையால் பதில் சொன்னான்.

பேச்சைத் தொடர்ந்த அவள், “இவ்வளவு அழகான, அற்புதமான நிழற்படங்களை எடுக்கிறீர்கள் என்றால், உங்களிடம் கட்டாயம் விலையுயர்ந்த தரம் மிக்க கமரா இருக்கவேண்டும். உங்களின் அந்தக் கமராவின் விபரங்களைக் கொஞ்சம் சொல்வீர்களா?” என்று கேட்டு நின்றாள்.

அவனோ, பதிலுக்கு புன்னகைத்து மௌனத்திற்கு அவகாசம் கொடுத்தான்.

இராப்போசனம் முடிந்தது. அவன் வீடு செல்ல வெளியேறத் தொடங்குகையில், செல்வந்தனின் மனைவி எதிர்ப்பட்டு, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“நல்லது. உங்கள் வீட்டின் சாப்பாடு மிக மிக அற்புதமாக இருந்தது. உங்களிடம் மிக அற்புதமான நல்லதொரு அடுப்பு இருக்குமென உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லிக் கொண்டு புன்னகையோடு, அகன்று சென்றான்.

மனிதனின் அன்னியோன்யம் இல்லாத கலைகள் தோன்றிய வரலாறுகளும் இல்லை. இருக்கவும் முடியாது. நுட்பங்களைப் பாவிக்கும் மனிதனை விட, நுட்பங்களின் மீதான அதீத நம்பிக்கை பலருக்கும் இங்குள்ளது. இது இயல்பிருப்பு நிலையாகிவிட்டிருப்பதும் கவலை.

மனிதனின் பாவனையில்தான் நுட்பங்களுக்கே முகவரி கிடைக்கிறது. இங்கு மக்களால் பாவிக்கப்பட்டு நேசிக்கப்பட்டு, மனித இயல்பு நிலை அம்சங்கள் நுட்பங்களோடு கலக்கும் போதே, உயரிய கலைகள், விடயங்கள் என பலதும் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

“கலைகளை, படைப்பாக்கங்களை வெறும் கருவிகளின் வருவிளைவுகளாக மட்டும் கருதிக் கொண்டு, அதனை உருவாக்குபவனை மறந்துவிடுகின்ற சமகாலத்தின் நிலையை என்னவென்று சொல்வது?” என கோபாலு கேட்கிறான்.

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

“இதுவொரு கமராவின் கதை” அதற்கு 3 மறுமொழிகள்

  1. Nimal S (நிமல்) Avatar
    Nimal S (நிமல்)

    இந்த நிலையை தாண்டி வர எனக்கு மிக நீண்ட காலம் ஆனது. இப்போது சில சந்தர்ப்பங்களில் தேவையில்லாமல் கருவிகளை, நுட்பங்களை வாங்கும் பழக்கம் தொடர்கிறது.

  2. ramani Avatar
    ramani

    மனிதனின் பாவனையில்தான் நுட்பங்களுக்கே முகவரி கிடைக்கிறது. இங்கு மக்களால் பாவிக்கப்பட்டு நேசிக்கப்பட்டு, மனித இயல்பு நிலை அம்சங்கள் நுட்பங்களோடு கலக்கும் போதே, உயரிய கலைகள், விடயங்கள் என பலதும் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

    மிக மிக அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
    கதையும் கருவும் மிக நேர்த்தியாய் பொருந்திப் போகிறது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    1. Iqbal Selvan Avatar
      Iqbal Selvan

      அருமையான ஒரு பதிவு !!! ஆனால் படைப்புகள் காலவெள்ளத்தில் நிற்கும் அளவுக்கு படைத்தவன் பெயர் மறந்துவிடும் என்பதே மனித வரலாறு !!! கடவுள் உட்பட …

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்