எண்ணம். வசந்தம். மாற்றம்.

எழுத்தும் ஏழாம் வருடமும்

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:

iTunes இல் நிறம் Podcast Niram Podcast
(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 50 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மண்ணிற்கு வியர்வை உண்டாகின்ற காலம் தொடங்கியிருக்கிறது. காலை நேரத்து யன்னல் கண்ணாடிகளுக்கு முகவரி கிடைக்கும் காலம் வந்திருக்கிறது.

நிறம் இன்றோடு தனது ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கிறது.

பருவங்கள் மாறி மாறி வருகின்ற அழகு எப்போதுமே எனக்குள் புளகாங்கிதத்தையும் புதிர்களையும் கொண்டு தரும். பருவங்களுக்கு புதிர்கள் தருவதுதான் வழக்கம் — யாரோ சொன்ன ஞாபகம் இருக்கிறது.

காலைநேர சூரியனின் குளிர்மையும் மாலை நேர நிலவின் சூட்டையும் கடதாசியில் தக்கவைத்துக் கொள்வதுதான் எழுத்தின் அற்புதம். எழுத்தின் அழகும் அதன் பிறப்பின் போதுதான் முகவரி பெறுகிறது.

எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.

வலிக்கின்ற கணத்திலேயே விழித்துக் கொள்கின்றதாய் விடயம் சொல்லும் விந்தையும் எழுத்துத்தான். விண்மீன்களின் கண்சிமிட்டல்களின் ஒலியை எழுத்தினால்தான் கேட்க முடிகிறது.

அதனால் சூரியத்தரையில் நிலவும் மௌனத்திற்கும் மொழி தர முடிகிறது.

சால, உரு, தவ, நனி என எதுவும் வேண்டாம். எதுவோ அதுவாகவே வந்து கொண்டு இருக்கும் அழகியல் தரும் ஒரே ஒப்பனைதான் — எழுத்து.

இதமான சுட்டெரிக்கும் வெயிலையும் கொழுந்து விட்டெரியும் குளிர்ச்சியையும் உணரச் செய்ய எழுத்துக்கு முடியும். உங்களால் முடியுமா? தலைமுறையாகக் கடத்தப்படும் “மாற்றி யோசிக்கும்” எண்ணக்கருவின் தொடக்கம் எழுத்தில்தான் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

தடுக்கிவிழும் கணினித் தட்டச்சின் பிறப்பாயும் நள்ளிரவின் மௌனத்தைக் கலைக்கும் மரங்கொத்தி ஒலியாயும் தோன்றுவதுதான் இந்த எழுத்து.

இப்படியென விரியும் எழுத்தோடு நிறமும் உங்களோடு இணைந்து கொண்டது. நிறம் பூசிக் கொண்ட எழுத்துக்களின், பிரியர்களுக்கு நன்றிகள் கோடி.

நிறத்தின் எழுத்துக்களுக்கு நிறங்கள் இருப்பது போல், நிஜங்களும் இருக்கின்றன. ஆன்மாவின் சுவாசத்தின் வெப்பமும் அதனோடு சேர்ந்திருக்கிறது.

எல்லாச் சொற்களும் இருக்கின்றன. ஆனால், எழுத முடியாதுள்ளது என்கின்ற அந்த அழகிய ஆனந்தம் நிறத்தின் வெளிச்சங்கள். நிறங்கள் எங்கும் தான் உண்டு.

நிறம் தெரியாத கண்களுக்கும் நிறம் பற்றிய புரிதல் இருப்பது உயிரின் வியப்பு. நிறம் நேசிக்கப்படுகிறது — இயல்பிலேயே.

இந்த எழுத்தினால் மட்டுந்தான் ஓராயிரம் நினைவுகளைச் சேமிக்க முடிகிறது. நீயும் கூடத்தான் எழுத்துக்குள் ஒரு எழுத்தாகி எழுதப்பட்டிருக்கிறாய்.

விருப்பமில்லாத போதும், வெறுக்காமல் இருக்க உன்னால் முடிகிறதா? தனிமை என்பது கொடுமைதான் என்கின்ற கவலை இருக்கிறதா?

சொற்கள் உன்னோடு எப்போதும் வாழ்கின்ற போது, தனிமைக்கு எப்படி உன்னால் முகவரி தர முடிகிறது? எழுத்துக்கு அல்லவா நீ முகவரி தந்திருக்க வேண்டும்?

தொடரும் நிறத்தின் பயணத்தோடு நீங்கள் உங்களை இணைத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வார்த்தைகளின் வலிமையால் சிகரம் தொடலாம். ஏழாம் வருடத்தின் தொடக்கத்தின் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். அத்தோடு, டின்டின்க்கு, கேப்டன் கெட்டோக் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

“உன்னை தோல்வி என்று அழைக்கும் தேட்டத்தோடு இங்கு பலர் இருப்பார்கள், அவர்கள் உன்னை தோற்றவன் எனச் சொல்லலாம். முட்டாள் என்று முந்திக் கொண்டு சொல்லலாம். நம்பிக்கையற்ற ஆன்மா என்று கூட சொல்ல முனையலாம். அதை நீ ஒருபோதும் உன்னை நோக்கி சொல்லிவிடாதே. அப்படிச் சொல்வாயாயின் நீ பிழையான சமிஞ்சையை மற்றவருக்கு வழங்குகிறாய். அதைத்தான் அவர்கள் பற்றிக் கொண்டு உன்னை அப்படி அழைக்க ஆர்வம் கொள்கின்றனர். புரிகிறதா உனக்கு?

எதைப் பற்றியாவது நீ தேவை கொண்டிருந்தால், அதற்காக உழை. சுவரில் போய் மோதுண்டால், அதைத் தள்ளிக் கொண்டு நகர முற்படு. டின்டின், தோல்வியைப் பற்றி நீ ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும்: உன்னைத் தோற்கடித்துவிட தோல்விக்கு நீ இடம் தரக்கூடாது.”

“வானத்திலுள்ள ஒவ்வொரு தாரகைகளும் நீ வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதைச் சொல்வதற்கான காரணமாகும். ஆக, மில்லியன் என மிஞ்சி நிற்கும் ஆகாயத் தாரகைகள் போலவே, நீ வாழ்க்கையை ரசித்து வாழ மில்லியன் காரணங்கள் உள்ளன. இதுதான் உண்மை,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். நான் இங்கே –>>

ஒலிவடிவத்தின் பின்னணியில் ஒலிக்கும் அற்புதமான இசையின் தோற்றுவாய்: The Pond by Chuck Berglund

“எழுத்தும் ஏழாம் வருடமும்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. சாக்பீஸ் Avatar
    சாக்பீஸ்

    நிறத்திற்கு ஏழாம் வருட வாழ்த்துக்கள். ஒலி வடிவில் பதிவை அருமையாக பதிவேற்றியிருக்கிறீ்ர்கள். வித்தியாசமான முயற்சி. தங்களது கவிதைகளில் தொடருங்கள்.

  2. shaifamaleek Avatar
    shaifamaleek

    ‘எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.’ அருமை..

    நிறத்தின் பக்கங்கள் விரியட்டும்…….. வாழ்த்துக்கள்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்