எண்ணம். வசந்தம். மாற்றம்.

ஆதலால், படைப்பீர்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“நீ நினைத்த எதுவும், நினைத்தபடியே நடக்காதிருக்கும். நீ விளையாட மைதானத்திற்குச் சென்றால் மழை பெய்யும். நேரத்திற்கு நீ புகையிரத நிலையத்திற்கு சென்றாலும், புகையிரதம் சமிஞ்சைக் கோளாறால் தாமதமாகும்.

நீ நினைத்த எதுவும், அப்படியே நடந்துவிடாது. ஆனாலும், நீ நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும்.”

நீல் கெய்மேன் ஒரு சிறந்த எழுத்தாளர். கடந்த வருடம் கலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

create

அவரின் சொற்பொழிவின் சாரம் இதுதான். “என்னதான் நடந்தாலும், நீ நல்ல படைப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்”

இந்தச் சொற்பொழிவை அடக்கியதாக, அவர் ஒரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

வாழ்க்கையின் உச்சபட்ச கக்கிஷங்கள் எல்லாமே நம்மை அனுகினாலும், செய்ய வேண்டியது ஒன்றுதான். நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டியதுதான்.

இவரின் இந்த சொற்பொழிவின் சாரத்தை நான் ஒரு உபதேசமாகப் பார்க்கவில்லை. மாறாக இது வாழ்வின் வெளிப்படையான உண்மை என்றே காண வேண்டியுள்ளது என்பதை நல்ல படைப்புகளைத் தந்த பல ஆளுமைகளின் வரலாறுகள் சொல்லி நிற்கின்றன.

அவரின் சொற்பொழிவின் ஒரு பகுதியை பதிவின் தேவை கருதி தமிழாக்கம் செய்கின்றேன்.

“நீ படைப்பதை இணையத்திலுள்ள ஒருவர் முட்டாள்தனமென எண்ணலாம். இதைவிட அற்புதமாக இது ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது எனக்கூடச் சொல்லலாம். ஆனாலும், நீ தொடர்ச்சியான உன் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படி எண்ணுபவர்கள் அல்லது சொல்பவர்கள், அவர்கள் சொன்னதையே கொஞ்ச நாளில் மறந்து போய்விடலாம். அது நமக்குத் தேவையில்லை. நீ நல்ல கலையை உருவாக்க வேண்டும். உன்னால் உன்னதமாகச் செய்யக்கூடிய அந்த விடயம்: நல்ல கலையை உருவாக்குவதுதான். நல்ல நாளோ, கெட்ட நாளோ, நீ நல்ல கலையை, படைப்பை உருவாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.”

இங்கு நல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள சிரமம் எடுக்கவோ, அதற்குப் புதிய நியமங்கள் வகுக்கவோ தேவையில்லை. நல்லது என்பது நல்லதுதான். வெறுமையான வெள்ளைத் தாளொன்றை எடுத்து, நல்ல படைப்புப் படைக்க வேண்டுமென எண்ணிக்கொண்டே, எதுவுமே எழுதாமலிருப்பது நல்லதல்ல. நீங்கள் அந்தத் தாளில் எழுதத் தொடங்கினால், அப்போதே நல்ல படைப்பு உருவாகத் தொடங்குகிறது.

கோபாலுக்குப் பிடித்த கணினி வல்லுநர், ஜொனதான் ஜில்லட் சொன்னவொரு விடயத்தை இங்கு பதிவு செய்யுமாறு கோபாலு கேட்டுக் கொண்டான்.

“நீங்கள் பொருள்களை படைக்காமல் இருக்கும் நிலையில், நீங்கள் உங்களை, உங்களின் ஆற்றல்களாலில்லாமல் உங்கள் ரசணைகளால் வரையறுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் ரசணைகள் குறுகியவை அத்தோடு அவை மக்களைச் சேர்க்காதவை. ஆதலால், படைப்பீர்”

– உதய தாரகை

  • நீல் கெய்மேனின் சொற்பொழிவை நீங்கள் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று காணலாம்.
  • Zen Pencil இல் இந்தச் சொற்பொழிவு பற்றி வந்த அற்புதமான வரைபியல் பதாகை நிலைஇங்குள்ளது.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்