எண்ணம். வசந்தம். மாற்றம்.

நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

விரிகின்ற ஒவ்வொரு பொழுதும் நீ நினைத்ததைக் கொண்டு தராத போதும், காத்திருப்புகளுக்கு, உன்னால் நேரவிரயம் என்ற புனைப்பெயர் மட்டுந்தான் சூட்டிக் கொள்ள முடிந்த போதும், கசப்பானவை மட்டுந்தான் இனிமைகளை இம்சிக்க துடித்துக் கொண்டிருக்கின்ற போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

சுபமான விடயம் எனத் தொடங்கிய காரியம், சுகமே தராததாய் தொடர்ந்த போதும், இதயத்துடிப்பின் அழகிய ஆவர்த்தன இசை, சற்றே குழம்பிப் போய் ஒலிக்கின்ற போதும், உன் மனதின் கிடக்கையை மற்றவர்கள் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்த போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

never-giveup

உடம்பில் கொண்ட காயங்களின் வலிகள் உன்னை துவம்சம் செய்த போதும், உன்னோடு நடந்துவந்த நிழலும், உன்கூட வர மறுத்துக் கொண்டு மறைந்து போன போதும், நீ காண்கின்ற அழகிய உலகத்தை நீ காணும் உலகத்தில் காண முடியாவிட்டாலும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

நீ சொல்கின்ற அற்புதமான விடயங்களை உலகம் புரிந்து கொள்ள முடியாத போதும், போதும்! போதும்! என்று நீ சொல்கின்ற விடயங்களை உலகம் கேட்டு நடக்காமலிருந்த போதும், மனதிற்குள் பூகம்பங்களை உலகக் காட்சிப்புலங்கள் தந்துவிட்ட போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

நேசித்துப் பொக்கிசமாய்ப் பாவித்த உனக்குப் பரிசாகக் கிடைத்த கைக்கடிகாரம் தொலைந்து போன போதும், அலையின் வலிமையால் அழிந்து போகும் மணல் வீடாய் உன் மகிழ்ச்சிகள் விடிகின்ற போது காணமற் போன போதும், மூடத்தனங்களை உலகம் நம்பிக்கைகள் என்று பெயர் வைத்து பரவசப்பட்ட போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

உன் மெழுகுவர்த்தியை அணைத்துவிடுவதால், அவர்களின் மெழுகுவர்த்தி பிரகாசமாய் ஜொலிக்கும் என்ற பொறாமையை அவர்கள் கொண்ட போதும், நேற்றைய பிழைகள் பற்றிய பேச்சுக்களே அவர்களின் மூச்சாய் இருக்கின்ற போதும், நேரக்குவளைகளுக்குள் தூக்கத்திற்கான துளிகள் குறைந்துவந்த போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

நாட்களோடு, உன் இலக்கின் உச்சபுள்ளியும் நகர்ந்து கொண்டு இருந்த போதும், நீ விளிம்பிலும் வீழாதிருக்க வேண்டும்.

“வாழ்க்கை என்பதொரு கயிறு போன்றது. அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் சொன்னது போல், உன் கயிற்றின் நுனியை நீ அடைந்துவிட்டால், அதிலொரு முடிச்சு போட்டு அங்கேயே வலிமையோடு தங்கியிரு. வசந்தம் பிறக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்ப்பத்தின் முதற்பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்