எண்ணம். வசந்தம். மாற்றம்.

அக்கரை பற்றிய அக்கறை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

காட்சி ஒன்று:

விடிகின்ற ஒவ்வொரு காலைப் பொழுதின் தொடக்கத்தின் முனையில், அவனால் தன்னைத் தவிர தன் சூழலில் வாழும் அனைவரும் ஏதோவொரு வகையில் அற்புதமாக இருக்கின்றனர் என அனுமானித்துக் கொள்கிறான்.

காலைத்தேநீரின் சுகந்தம் கூட அவன் உணர்வுகளைத் தொட துடித்துக் கொண்டு பறக்கும். ஆனால், பக்கத்து வீட்டிலுள்ளவர்களின் வாழ்க்கையின் அற்புதம், பக்கத்து ஊரிலுள்ள சொந்தக்காரரின் புதிய வாகனம் என அவனின் உணர்வுகளுக்குப் பொறாமையாய் நிறம் பூசிக் கொண்டிருக்கும்.

“என்ன வாழ்க்கைடா இது?” என்று வெறுத்துக் கொள்வான். அவனல்லாத அனைத்துமே அற்புதமான வாழ்வைக் கொண்டிருக்கிறதென நம்பிக் கொண்டு தன்னையே தொடர்ச்சியாக நொந்து கொள்வான்.

காலையில் நேநீரை மறந்தவன், தெருவால்க்கூட செல்லாத மனிதர்களைப் பற்றிய பொறாமையின் வழியில் திளைத்திருப்பான்.

காட்சி முற்றும். காட்சியின் பாத்திரத்திற்குள் உங்களையும் ஏதாவது ஒரு கணத்தில் பார்க்க முடிந்திருக்கலாம்.

otherside

யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. பிரச்சினை இல்லாதவர்களுக்கும் சிலவேளைகளில் பிரச்சினைகள் இல்லாமலிருக்கிறதே என்ற பிரச்சினை இருக்கலாம். காலம் மாறிப்போச்சு!

அக்கரையில் தோன்றும் புல் பச்சையாகவே எப்போதும் எல்லோருக்கும் தோன்றுகிறது. தங்களின் பிரச்சினைகள் பற்றிய முறைப்பாடுகளோடு நின்றுவிட்டு, அக்கரையின் பச்சை நிறம் பற்றி புகழ்பாடுகின்ற படலம் தொடர்கிறது.

இங்கு உன் கரையில் உள்ள புற்கள் பச்சையாகி செழிப்பாகவிருக்க, நீ நீரூற்ற வேண்டும். அதைவிடுத்து, முறைப்பட்டுக் கொள்வதால் யாரும் உனக்காக நீருற்றப் போவதில்லை.

உன் வாழ்வின் பசுமையாக்கப்பட வேண்டிய அத்தியாயங்களை எடுத்துக் கொண்டு, அது பற்றி எண்ணித் துணிந்து கருமமாற்றலாம். நீரூற்றலாம்.

உன்னைச் சுற்றியிருக்கும் வசந்தம் பற்றிய அற்புதங்களை ஆராதிக்கலாம். ஆயிரம் அர்த்தங்கள் வாழ்விற்குச் சேர்க்கலாம். நீரூற்றி அக்கரையில் தோன்றும் பச்சைப் புற்களைப் போல், உன் பக்கத்திலிருக்கும் புற்களையும் பசுமையாக்கலாம். தெரிவு உன் கையில்தான் உண்டு.

இந்த நேரத்தில் நான் எப்போவோ வாசித்த ஜென் கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. அதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இளைஞன் ஒருவன் பயணம் ஒன்றில் பல இடங்களையும் பார்வையிட்டுக் கொண்டுவந்து கொண்டிருந்தான். ஆழமான நீளமுடைய ஆறொன்று அவன் பாதையில் குறுக்கறுத்தது.

அதனைக் கடக்க முற்பட்டான். எதுவும் பலனளிக்கவில்லை. வந்த வழியால் திரும்பிச் செல்ல முடிவெடுத்தான். திரும்பிச் செல்ல எத்தணிக்கையில், அடுத்த கரையில் ஒரு துறவி இருப்பதைக் கண்டு கொண்டான்.

துறவியை நோக்கி, “ஆசானே, அந்தக்கரைக்கு நான் வந்து சேர, இந்த ஆற்றை எவ்வாறு கடப்பது என்று சொல்லுங்கள்?” என கேட்டான்.

இதைக் கேட்ட துறவி, ஓடுகின்ற ஆற்றின் சலமான நீரை ஒரு தடவை பார்த்துவிட்டு, அந்த இளைஞனை நோக்கி, “நண்பரே, நீங்கள் அந்தக்கரையில் தான் இருக்கிறீர்கள்” என்றார்.

“நீ, உன் அற்புதமான கரையில் தான் நிற்கிறாய்! அதனை மென்மேலும் அற்புதப்படுத்துகின்ற தெரிவு உன் எண்ணத்தில் தான் இருக்கிறது. இன்றே நீரூற்று!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் ஐந்தாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்