எண்ணம். வசந்தம். மாற்றம்.

நங்கூரமா நீ?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு நாளும் இன்னொரு நாளின் பிரதியென கழிந்து கொண்டு, அது களிப்பைத் தந்தாலும், சிலவேளைகளில் சலிப்பையும் உனக்கு தந்துவிடுகிறது.

புதிய மாற்றங்களை உன்னால் ஜீரணித்துக் கொள்வதற்குள், என்னதான் நடக்கிறது என்ற கேள்வியோடு, உனக்குள் பயமும் தொற்றிக் கொள்கிறது. உனக்கு, மாற்றங்களோடு சேர்ந்து இன்னும் புதிய அற்புதங்களைச் செய்யக் கூட ஆர்வம் தோன்றாமலிருக்கிறது.

நிலையில்லாத் தன்மை உன்னை பலமிழக்கச் செய்துவிட்டதை உன்னால் உணர முடியாவிட்டாலும், அனுபவசாலி, புத்திசாலி என்று உன்னை எண்ணிக் கொண்டு வாழ்விலிருக்கிறாய் — வாழாமல்.

ஆவர்த்தனமாக தொடரும் ஒவ்வொரு நாளினதும் நொடிகள் பலவேளைகளில் உனக்குச் சோர்வைத் தரலாம். சோம்பேறித்தனத்தைப் பரிசாய் தரலாம். இருந்தாலும் நீ போகும் இடம் பற்றிய புரிதலோடுதான் பயணிக்கிறாய் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

play-hard

ஆடாமல், அசையாமல் ஓரிடத்தில் இருந்து கொண்டிருத்தல் உன்னதத்தின் அடையாளம் என்று கூட நீ சொல்கிறாய். அது அதீத அறிவின் அடையாளம் என்றுவேறு உனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென நினைத்து, தங்கள் முயற்சிகளைச் செய்வோரைப் பார்த்துவுடனேயே நீ கேலியாகச் சிரிக்கிறாய். அவர்கள் அடிக்கடி தோற்றுப்போவது உனக்கு நகைப்பான விடயமாயிருக்கிறது.

ஆட்டத்திலிருப்பவனால் மட்டுந்தான் வெல்லவோ அல்லது தோற்கவோ முடியும் என்று யாரும் உனக்குச் சொல்லித்தரவில்லையா?

இங்கு நீ ஆட்டத்திலும் இல்லாமல், ஆடாமல் அசையாமல் சௌகரிய வலயத்தில் நின்று கொண்டு வென்றுவிட்டதாக எண்ணுவதை என்னவென்று சொல்லலாம்?

முயற்சி செய்து தோற்றுப் போனவன், அவன் தோற்றுப்போனதில் பாடம் கற்று, அடுத்த முயற்சியில் வெற்றிக் கொடி கட்டுகிறான். கடின உழைப்பிற்கு வெகுமதி கிடைக்கிறது. வெகுமதி அவனுக்கு மகிழ்ச்சி என்ற நிகரில்லா உணர்வை வழங்குகிறது.

நீ இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொண்டு, மாற்றங்கள் பற்றிய பயத்தோடு நாழிகைகளைக் கடத்த வேண்டுமென வாழ்க்கை எதிர்பார்க்கவில்லை. உன் முயற்சிகளின் வீச்சோடு, மாற்றங்கள் சார்பான உழைப்போடு உனக்கு வழி தரவே வாழ்க்கை இங்கே காத்துக்கிடக்கிறது.

வாழ்க்கை காத்திருந்து களைத்துப் போனால், உனக்கு இளமை, முதுமை என பருவங்கள் வருவதைக் காட்டத் தொடங்கும். அப்போதாவது நீ உன் சௌகரிய வலயம் தாண்டி புதியவை படைக்க வேண்டும் என்ற ஆதங்கம் வாழ்க்கைக்கு வரும்.

உன்னிடம் இல்லாத விடயங்கள் பற்றிய கவலை மட்டுந்தான் நீ முயன்று செய்யும் காரியமாகவிருக்கிறது. உனக்கு கவலை கொள்வதுதான் முயற்சி ஆகிவிடுகிறது. வாழ்க்கையும் அதிருப்தி கொண்டாகிவிடுகிறது.

நாளை கிடைக்கப்போகும் உன் நாளின் பெறுமதியைக் காட்டிலும், இப்போது இருக்கும் இந்தக் கணம் அர்த்தமுள்ளது — பலமிக்கது என்பதை நீ புரிய வேண்டும்.

நீ கண்டுகொள்ளாமலேயே ஒவ்வொரு நாளும் அற்புதமாக விடிந்து ஒவ்வொரு கணத்திலும் ஆனந்தம் தருகிறது. நீ இன்னும் கண்டுகொள்வதாயில்லை.

மாற்றங்களை ஏற்று, இன்னும் பல அற்புதங்களை இந்தப் பாரில் சேர்த்திட வேண்டுமென எண்ணுகின்ற ஆர்வம் தான் நீ வாழ்வதன் அடையாளமாக இருக்கும்.

ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். தோற்க வேண்டும். வெல்ல வேண்டும். முக்கியமாக நீ ஆட்டத்தில் இருக்க வேண்டும்.

உன் எண்ணங்களை உன்னை வலிமையாக்கும், பலவீனமாக்கும், உடையச் செய்யும், உயரச் செய்யும். ஆனால், உன் உணர்வுகள் உன் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும்.

இனி இன்னும் என்ன தாமதம், நீ ஓடு. தோற்றுப் போ. வென்று வா.

“உணர்வுகள் தோய்க்கப்பட்ட எண்ணங்களுக்கு உயிர்கொடு, நீ உலகை வெல்வாய்!” — கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் எட்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்