எண்ணம். வசந்தம். மாற்றம்.

சங்கீரணமாகும் சாமான்யங்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இங்கு எல்லாமும் இருக்கிறது. ஆனால், எதுவுமில்லை என்றாகிவிடுகிறது.

நம்மிடம் மாடமாளிகைகள் போல் வீடுகள் உள்ளன. ஆனால், அதில் வசிக்க மனிதர்கள் இல்லை. நிறைய சௌகரியங்களை எம்மிடம் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது, ஆனால், அவற்றை அனுபவித்துப் பெற்றுக் கொள்ள நேரமில்லை.

பலருக்கும் பல பட்டங்கள் பெயரின் பின்னால் இருக்கின்றன. ஆனால், அவர்களிடம் சாமான்யமான பொதுவான அறிவே இல்லை. நிறைய நிபுணர்கள் இருக்கின்றனர். ஆனால், இன்னும் இங்கே நிறைய பிரச்சனைகள் ஓங்கியே நிற்கின்றன. என்றும் இல்லாதது போன்று, மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால், நோய்களின் வகைகள் பெருகிக் கொண்டே செல்கின்றன.

இங்கு இருப்பதற்கு கற்று கொண்டிருக்கிறோம். ஆனால், யாரும் வாழக் கற்றுக் கொண்டதாய்த் தெரியவில்லை.

complex

சந்திரனுக்கும் சென்று வந்தாகிவிட்டது. ஆனால், பாதையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு பொருத்தமான வகையில் செல்வது இன்னும் புரியாதுள்ளது.

விண்வெளி சென்று வினைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாயிருக்கிறது. ஆனால், எம் அகத்தில் இருக்கும் கசடுகளைக் களைவதற்கு ஆர்வமில்லை.

விரைந்தெழுந்து ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணம் குடிகொண்டு விட்டதாகிவிட்டது. ஆனால், பொறுத்திருத்தலின் மகிமை தொலைக்கப்பட்டுவிட்டது.

நிறைய விடயங்களைத் திட்டமிட முடிகிறது. ஆனால், அவற்றுள் கொஞ்சத்தையே செய்ய முடியுமாயிருக்கிறது.

இங்கு எல்லாமே முரண்கள். நவீனத்தின் முரணா அல்லது காலத்தின் கட்டாயமா என்ற கேள்விகள் எழுந்தாலும், முரண்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

இங்கு ஏதோ தொலைக்கப்பட்டு விடப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது.

இத்தனை முரண்களையும் தக்கவைத்துக் கொண்டு எங்கே செல்கிறாய்?

இத்தனை முரண்கள் உன் பிரபஞ்சத்தில் தொடர்ந்தாலும், முரண் களைந்து, சங்கீரணம் தொலைத்து, எளிமை நிலை கொண்டு நிற்கின்ற திறனும் தெரிவும் உன் கைகளில் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி தான்.

நீ முரண்களுக்கு நீரூற்றக்கூடாது. எளிமையான வாழ்வின் மகிழ்ச்சிக்கு தீனி போட வேண்டியிருக்கிறது. முரண்களை யாசித்து நீ பெறும் வெற்றிகள், எப்போதும் மகிழ்ச்சி தரும் என்றில்லை. ஆனால், மகிழ்ச்சி, உனக்கு எப்போதும் வெற்றியைக் கொண்டு தரும். மகிழ்ச்சி தான் ஒரே வழி.

பாரசீகக் கவிஞர் ரூமி சொன்ன விடயமொன்றை கோபாலு ஞாபகப்படுத்தச் சொன்னான்.

“உன் குரலை விட, சொற்களை உயர்த்திக் கொள். மழைதான் தாவரங்களை போசிக்கிறது — இடிமுழக்கம் அன்று”.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினோராவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்