எண்ணம். வசந்தம். மாற்றம்.

யாருக்குக் கோளாறு?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

தனது மனைவிக்கு தான் கதைப்பதெல்லாம் கேட்கின்றதில்லை என்று இனங் கண்டு கொண்ட கணவன், தன் மனைவிக்கு கேட்டலில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதனை நிவர்த்திக்க சிகிச்சை செய்ய வேண்டுமென எண்ணம் கொண்டான்.

இந்த விடயத்தை மனைவிக்கு பக்குவமாக எடுத்தும் சொல்லவும் வேண்டும். அதேவேளை, மனைவியின் கேட்டல் நிலைக் கோளாறை நிவர்த்தியும் செய்ய வேண்டும் என்கின்ற தேவை கணவனுக்கு இருந்தது.

within

தனது குடும்ப வைத்தியரிடம் சென்று, இது பற்றி கலந்தாலோசித்தான். வைத்தியர் முதல் நிலை பரிசோதனையை செய்ய கணவனின் துணையை நாடி நின்றார்.

“நீங்கள் மனைவிக்கு 40 அடி தொலைவிலிருந்து அழையுங்கள். மனைவியிடமிருந்து பதில் வருகிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால், இன்னும் பத்து அடி நெருங்கிச் சென்று அழையுங்கள். பதில் வருகிறதா எனப் பாருங்கள். இவ்வாறு பதில் கிடைக்கின்ற தூரத்தை என்னிடம் சொல்லுங்கள்” என வைத்தியர் கேட்டுக் கொண்டார்.

அன்று மனைவி, அடுக்களையில் இராப்போசனம் தயாரித்துக் கொண்டிருந்தாள். வைத்தியரின் பணிப்பின் படியே, கணவனும் 40 அடி தூரத்திலிருந்து “இன்றைக்கு ராச்சாப்பாடு என்ன, மணி?” என்று கேட்டான். பதில் எதுவும் அவனிடம் எட்டவில்லை.

30 அடித் தூரத்தில் இருந்து “மணியே, இன்றைக்கு என்ன ராச்சாப்பாடு என்ன?” என்று மனைவியை நோக்கிக் கேட்டான். அவனுக்கு பதில் வரவில்லை.

20 அடித் தூரத்தில் இருந்து கொண்டு, “இன்டைக்கு என்ன ராச்சாப்பாடு தயாராகிறது?” என்று கேட்டான். அவனுக்கு பதில் வரவேயில்லை.

10 அடித் தூரத்தில் இருந்து கொண்டு, முன்பு போலவே, “இன்றைக்கு இரவைக்கு என்ன சாப்பாடு தயாராகிறது?” என்று கேட்டான். அவனுக்கு மனைவியிடமிருந்து பதில் வரவேயில்லை.

அடுக்களைக்குள்ளே சென்று மனைவியின் அருகே நின்று, “மணியே, இன்றைக்கு என்ன சமையல்?” என்று கேட்டான்.

“இஞ்ஞாருங்கோ, இதோட அஞ்சு தடவ சொல்லிட்டன், கோழிக் கறி என்று” — மனைவி பதிலளித்தாள்.

அக்கரைதான் பிரச்சினைக்குக் காரணமென பலரும் தங்களின் பாலான சுய விசாரணையை மறந்து விடுகின்றனர்.

“உன் உள்ளே காணப்படும் கசடுகள் களையப்படுகையில், உலகமே உன்னதமாய் தோன்றும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதின்மூன்றாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்