எண்ணம். வசந்தம். மாற்றம்.

ஆன்மாக்களின் வானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  42 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

கோடை காலத்தின் வெயிலைக் கண்ட போதுதான், மறைந்திருக்கும் கோடை காலத்தின் குளிரையும் கண்டு கொள்கிறேன்.

கோடை காலத்தின் குணாதிசயங்கள் எமக்குள் இருப்பது போல், தோற்கடிக்க முடியாத குளிர் காலத்தின் குணாதிசயங்களும் எம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

நமக்குள்ளே பருவங்கள் மாறுகின்ற நிலைக்கு இதுகூட காரணமாகலாம். “வெறும் கோடை காலத்தை மட்டும் நீ கொண்டிருக்கவில்லை.உனக்குள் ஒரு பிரபஞ்சத்தையே கொண்டிருக்கிறாய்” என்று கோபாலு எப்போதும் திடமாகச் சொல்வான்.

soul

பிரபஞ்ச வேட்கையின் வெளிப்பாடு தான் நீ — இங்கே இருக்கிறாய். ஒரு விநாடிக்குள் ஒடுக்கற்பிரிவடைந்து, நகலெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான கலங்களும் நீயும் பிரியாதவைகள் தாம். நீயும் பிரபஞ்சமும் போல.

நீயிங்கு இருப்பதற்கு காரணமுண்டு. நீ பேயுமல்ல, பிசாசுமல்ல. ஒருபோதும் அப்படி ஆகவும் மாட்டாய்.

உன்னாலேயே காற்றும் தன் திசைக்கு திட்டமில்லா கோணம் போடுகிறது. நீ செல்கின்ற நிலையோடு அது தன்னை மாற்றிக் கொள்கிறது. நீரும் அப்படித்தான். உன்னிடம் நிறையப் பொறுப்புக்கள் உள்ளன.

ஒருநாளில் ஆகாயத்தைக் காணுகையில், அங்கிருக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆன்மா என்றவாறு உணர உனக்குள் ஞானம் வெளிக்கும்.

அத்தனை ஆன்மாக்களும் மொத்தமாய் வானில் இருந்து கொண்டிருக்க, உன்னால் எப்படி தனிமையாக எப்போதுமே இருக்க முடியும்?

நீ பிரபஞ்சத்தின் ஒரு பகுதி — பிரபஞ்சமும் உனது இன்னொரு பகுதி. இன்று நீ தனிமையாய் இருக்கலாம், என்றும் நீ தனித்திருக்கமாட்டாய்.

“இது உண்மையென நீ உணர்வாய்,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினாறாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்