எண்ணம். வசந்தம். மாற்றம்.

மரங்கொத்தியானோம்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மரங்கொத்தி பற்றிய நினைவுகள் எனக்கு அதிகமிருக்கிறது. தென்னை மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, எல்லோரும் “என்ன சத்தம் கேட்கிறது?” என்றளவிற்கு அதனை பார்க்கும் அளவிற்கு வசீகரமான வலிமை கொண்டது.

ஒவ்வொரு நாளும், மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, அதனைக் கொத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அது வழக்கமாக்கிக் கொள்ளும். சிலசமயங்களில், மொத்த மரமுமே அதிர்ந்து போகுமளவில், அதன் வேலை அங்கு அபாரமாகவிருக்கும்.

மரங்கொத்தி, கொத்தியதனால் இந்த மரம் விழப்போகிறது, என்ற சம்பாஷணைகளையும் நான் கேட்டிருக்கிறேன். சூழலில் எந்த சத்தமுமே இல்லாத நேரத்தில், மரங்கொத்தி, கொத்துகின்ற சத்தத்தின் வடிவு அழகிய கவிதை.

“டொக்.. டொக்.. டக்.. டக்..” என்றவாறு தொடர்ந்து செல்கின்ற மரங்கொத்தியின் ஒலி வித்தியாசமானது தான். கிராமச்சூழலின் அழகுக்கு எழில் சேர்ப்பதற்கு மரங்கொத்தியின் ஒலிக்கு அதிக பலமுண்டு.

wood-ii

இங்கு மரங்கொத்திகள் போலவே, நாமும் இப்படியான சத்தங்களை எல்லாச் சூழலிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறோம். கையடக்கத் தொலைபேசி தொட்டு கணினி மட்டும் விசைப்பலகைகளின் ஆதிக்கம் அதிகமென்றே சொல்ல வேண்டும். குறித்த சாதனங்களுக்கான அறிவுறுத்தல்களை உட்செலுத்த அவை ஆதாரங்களாகிவிடுகின்றன.

ஒலி கேட்காத விசைப்பலகைகளிலும் கூட, குறித்த கருவியின் அமைவுகளின் அடிப்படையில், இந்தச் சத்தங்கள் தோற்றம் செய்யப்படுகின்றன. இந்தச் சத்தங்கள் சொல்வதெல்லாம், எல்லோரும் எதையோ ஒன்றை எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான். இங்கு எழுதுதல் என்பது கணக்கெடுக்கப்படாத ஒரு காரியமாகச் சென்றுவிட்டது போன்ற எண்ணம் காணப்படுகிறது.

ஆனாலும், எல்லோரும்தான் எழுதிக் கொண்டிருக்கின்றனர். எப்படியோ யாருக்கோ எழுதிக் கொண்டேயிருக்கின்றனர்.

இந்த எழுத்துக்கள் எல்லாமே, குறித்த கணப்பொழுதின் உணர்ச்சிகளை தன்னகம் பொதித்து வைத்ததாகக் காணப்படுவது என்னமோ உண்மைதான். இப்படி தங்கள் எண்ணங்களை அந்தச் சந்தர்ப்பத்தின் அழகிய நிலைக்குள் எழுத்துக்களால் பரிவர்த்தனை செய்துவிட எல்லோராலும் தான் முடிகிறது.

இந்தத்திறன் அவர்களை அறியாமலேயே அவர்களிடம் குடிகொண்டிருப்பதை யாருமே கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளப்பட்டு, காரியம் செய்ய வேண்டிய தேவையை இந்தக் காலம் உணர்த்துகின்றது.

ஆனாலும், இங்கு எழுத்துக்களால் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவ்வளவு சிரத்தை யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அத்தனை பேரும் மரங்கொத்தி போலே, சத்தம் எழுப்பிக் கொண்டு, தங்கள் உலகத்தில் மட்டுமே சஞ்சரிக்கிறார்கள். இது பிழையானது என்று சொல்வதற்குமில்லை.

இப்போதெல்லாம், என்னால் என்னைச்சுற்றி எப்போதுமே மரங்கொத்திகளைக் காணமுடிகிறது. நான் கிராமத்திற்கு சென்று மரங்கொத்தி பார்க்க வேண்டுமென்ற ஆசைகளை மறக்கச் செய்துவிடுமளவிற்கு இந்த மரங்கொத்திகள் வலிமை பெற்றிருக்கின்றன.

“மரங்கொத்திகளை நான் ரசிக்கிறேன்,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்