எண்ணம். வசந்தம். மாற்றம்.

பிறக்காத நாள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

பிறந்த நாளில் முக்கியமான விடயம் ஒன்றைச் செய்ய வேண்டும், புது விடயம் ஒன்றைத் தொடங்க வேண்டும், அந்த நாள் மட்டுந்தான் விஷேடமான நாள் என்றெல்லாம் இங்கு எழுதப்படாத விதிகள் பலவுள்ளன.

ஆனால், இந்த நிலையை நீ மெல்ல நின்று நிதானித்து அவதானித்தால், நீ விரும்பித் தொடங்க நினைக்கின்ற காரியத்தை ஆரம்பம் செய்து கொள்ள ஒரு ஆண்டில், ஒரு நாள் மட்டுந்தானா இருக்கிறது? என்ற கேள்வி தோன்றலாம்.

52 வாரங்களாய் விரிந்துகிடக்கும் வருடமொன்றில் ஒரு நாள் மட்டுந்தான் விஷேடம் என்றால் நீ, நாட்களைக் கூடவல்லவா வறுமையாக்கி இருக்கிறாய்!

நாட்களில் சிலதை மட்டும் புனிதமான நாள் என்றும் நீ பிரித்து வைத்திருக்கின்ற நிலையைக் காணும் போது, புனிதமான நாள் எனச் சுட்டப்படாதவை யாவும் புனிதமில்லா நாளாகிவிடுமா? என்ற கேள்வி எழுவதும் நியாயம் தான்.

விடிகின்ற காலையில் கதிரவன் வருவதும், மாலையில் அவன் மறைவதும் எல்லா நாட்களிலும் தான் நடைபெறுகிறது.

எலஸ் அட்வண்ஸர்ஸ் இன் வொன்டலேன்ட் (Alice’s Adventures in Wonderland) என்கின்ற புனைவை 1865ஆம் ஆண்டில் லுவிஸ் கரோல் என்கின்ற அற்புதமான எழுத்தாளர் எழுதி வெளியிட்டார். பின்னாளில் இந்தப் புனைவு, திரைக்காவியமும் ஆகியது.

இந்தப் புனைவில் வருகின்ற ஒரு எண்ணக்கரு என்னை ரொம்பவும் கவர்ந்தது. லுவிஸ் கரோல், தனது புனைவின் மூலமாக அதனை அற்புதமாக வெளிப்படுத்துவார். அந்த எண்ணக்கருதான் பிறக்காத நாள் (un-birthday).

unbirthday-1

ஒருவன் பிறக்காத நாட்களைக் கொண்டாடுவானானால், ஒரு வருடத்தில் 364 நாட்கள் அவனால் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க முடியும். இது நெட்டாண்டாய் தொடரும் வருடத்தில் 365 நாட்களாகவும் மாறும்.

கொண்டாட்டங்கள் என்றவுடன், வேடிக்கை வினோத நிகழ்வுகள் என நீ நம்பிக் கொள்ளக்கூடாது.

குதூகலம் தருகின்ற விடயங்களைச் செய்கின்ற நிலையில் தான் ஒருவன் தன் வாழ்வின் வெற்றிக்கான பாதையை உருவாக்கிக் கொள்கிறான். பிறக்காத நாட்களில் புதியன படைத்தால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறான விடயங்கள் படைப்பதற்கான வாய்ப்புத் தோன்றும்.

அந்நிலையில், வெற்றிக்களிப்பு அந்நாட்களில், மனசோடு ஒட்டிக் கொள்ளும். அகமுழுதும் மகிழ்ச்சிப் பிரவாகம் செறியும். நாளும் விஷேடமாகும்.

இந்தக் கணத்தை விஷேடமான பொழுதாக மாற்றுவது, உன் எண்ணத்தில் தான் தங்கியிருக்கிறது. இந்த நாள் நல்ல நாள். எந்த நாளும் நல்ல நாள் தான்.

இனி, பிறக்காத நாட்களைக் கொண்டாடி, அவற்றை நீ விஷேடமாக்கு, அப்போது, நீ பிறந்த நாளில், பிறக்காத நாட்களில் நீ செய்த முயற்சிகளின் வெற்றிக்கனிகளை உன்னால் சுவைக்கலாம்.

நீ பிறக்காத, இன்றைய நாளும் புனித நாள் தான். நாளையும் ஒரு புனித நாள் வரும்.

“பிறக்காத நாட்களைப் கொண்டாடிப் பார்” என கோபாலு உன்னிடம் சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தேழாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்