எண்ணம். வசந்தம். மாற்றம்.

உன் அபிலாஷை என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 57 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கீழைத்தேய தத்துவங்களின் செறிவை, மேலைத்தேயவர்களிடைய பிரபலம் ஆக்கிய பெருமை அலன் வட்ஸ் என்பவரையே சாரும்.

அலன் வட்ஸ் என்றால் யார் என்ற கேள்வி உனக்குள் எழலாம். அவர் யார் என்று நீ கட்டாயம் அறிய வேண்டும். பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர், அத்தோடு தத்துவியலாளரும் கூட.

தனது இயல்பான சொற்பொழிவுகளின் மூலம், வாழ்வு பற்றிய பலவகையான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள பலருக்கும் உதவியுள்ளார். இவரின் உரைகள், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை அற்புதமாக விளக்கிச் சொல்லும்.

money

“பணம் என்று ஒரு பொருளே இல்லை என்றிருந்தால், நீ என்ன செய்திருப்பாய்?” என்ற கேள்வியோடு அலன் வட்ஸ் சொல்லுகின்ற பல விடயங்கள் இன்றைய நவீன சமூக அமைப்பின் கருத்துக்களையும் விமர்சிக்கின்றன.

நாம் விரும்புகின்ற விடயம் என்னவென்று அறிந்து கொண்டு, அதனை எவ்வாறு வாழ்வின் நோக்கமாக உருவாக்கி, வாழ்வின் ஆனந்தமாய் திளைத்திருப்பது என்பதை அவரின் உரை சொல்லி நிற்கிறது.

பதிவின் தேவை கருதி, அவரின் உரையின் ஒரு பகுதியைத் தமிழாக்கம் செய்கிறேன்.

என்னிடம், தொழிற்பயிற்சிக்காக வரும் மாணவர்கள், “நாங்கள் பட்டம் பெற்றுவிட்டோம், ஆனால், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய எந்த எண்ணமும் தெளிவாக இல்லை” என்று சொல்வார்கள்.

நான் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பேன்: “பணம் என்று ஒரு பொருளே இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”

அதற்கு மாணவர்கள் தரும் பதில்கள், வியப்பைத் தருவன. அவர்களின் பதில்களில் பழைமையான எமது கல்வி முறையின் கறை படிந்திருக்கும். “நாங்கள் ஓவியராக வர வேண்டும், கவிஞர்களாக வர வேண்டும், எழுத்தாளர்களாக வர வேண்டும்” என்று ஆர்வமாகச் சொல்வார்கள்.

ஆனால், இந்த வேலைகளைச் செய்வதால், அவர்களால் பணம் அவ்வளவில் சம்பாதிக்க முடியாது என எல்லோருக்கும் தெரியும். இன்னொருவன் “எனக்கு வீட்டுக்கு வெளியே சென்று, உலகம் சுற்றுவதாய் அமைகின்ற வாழ்க்கையை வாழ வேண்டும். எனக்கு குதிரைகள் ஓட்ட ரொம்பப் பிடிக்கும்” என்பான். “உனக்கு, குதிரை ஓட்டுவதைக் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் படிப்பிக்க விருப்பமா?” என்று நான் கேட்பேன்.

“அப்படியே செய்து கொள். உனக்கு என்ன செய்ய வேண்டும்.” – என்றும் சொல்லி நிறைவேன்.

என்னிடம், நான் இப்படியாகத்தான் ஆக விரும்பிகிறேன் என்று ஆர்வமாகச் சொல்லும் மாணவர்களிடம் “அதையே அப்படியே செய்; பணத்தை மறந்துவிடு!” என்று சொல்வேன்.

ஏனெனில், பணம் சம்பாதிப்பது தான் மிக முக்கியமான விடயம் என நீ எண்ணுவாயாயின், நீ உன் வாழ்க்கையினை நேரத்தை வீணடிப்பதன் மூலமே செலவு செய்திருப்பாய். வாழ்வை ஓட்ட வேண்டும் என்பதற்காய், உனக்கு விருப்பமில்லாதவற்றையே செய்து கொண்டிருப்பாய். வாழ்வும், நீ விரும்பாத விடயங்களைச் செய்வதால் தான் இயங்கிக் கொண்டிருக்கும். இது மிகவும் முட்டாள்த்தனம்!!

துன்பங்கள் பல சேர்ந்து கொண்டு, நீண்ட நாள் வாழ்வைத் தொடரும் நிலையை விட, நீ விரும்புகின்ற விடயத்தைச் செய்து கொண்டு வாழும் குறுகிய கால வாழ்க்கை மிக மேலானது.

நீ செய்கின்ற விடயம் எதுவாக இருந்த போதிலும், அதனை உன்னால் விரும்பிச் செய்ய முடிகின்றதானால், அந்த விடயத்தின் நீ நிபுணராகுவாய்.

ஒரு விடயத்தோடு, ஒருமிக்கவிருந்து அதை விரும்பிச் செய்கின்ற நிலையில் தான், அந்த விடயத்தில் நிபுணராக முடியும். பின்னர், அந்த நிபுணத்துவத்தை வேண்டி நிற்பவர்களிடம், உன் சேவையை வழங்கி பணம் சம்பாதிக்கலாம்.

ஆக, தேவையில்லாமல் கவலைப்படாதே, ஒருவர் பலவிடயங்களிலும் ஆர்வத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பார். உன்னால், விரும்பப்படுகின்ற விடயத்தை விரும்புகின்ற இன்னும் பலரை நீ கண்டு கொள்வாய்.

நீ முட்டாள்த்தனமாக, வாழ்க்கையைக் கழித்துக் கொண்டு, நீ விரும்பாத விடயங்களைச் செய்து கொண்டிருக்கிற வேளையில், உன்னைப் போலவே, உனது பிள்ளைகளும் வாழ்க்கையை ஓட்டுவதற்காய் அவர்கள் விரும்பாததையும் செய்து, உன் பாதையைத் தொடர வேண்டுமென நீ சட்டம் போடுகிறாய். அப்படியானால், நீ பிள்ளைகளை, உன்னைப் போன்ற இன்னொரு பிரதியாகக் காணவே, அவர்களைப் கற்பிக்கிறாய் என்றே எண்ணத் தோன்றுகிறது.

உனது வாழ்க்கையின் திருப்திக்காக, உன் பிள்ளையையும் அப்படியே உன்னைப் போன்றே தொடர்ந்து வர வேண்டுமென நீ சொல்லி, அதை நியாயம் கற்பிக்கிறாய்.

ஆனாலும், நீ ஈற்றில் முக்கியமாகக் கவனித்து விடைகாண வேண்டிய கேள்வி இதுதான்:

உன் அபிலாஷை என்ன?

கோபாலும், “உன் அபிலாஷை என்ன?” என்று கேட்கச் சொன்னான்.

  • உதய தாரகை
    குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் முப்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்