எண்ணம். வசந்தம். மாற்றம்.

முப்பத்தொன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இன்றோடு இந்த மாதம் நிறைவு காண்கிறது. நாளை புதிய மாதம் தொடங்குகிறது. சரியாக முப்பது நாட்களுக்கு முந்தி, நான் நிறத்தில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புதிய பதிவொன்றை வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டு கொண்டேன்.

ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. நானும் ஒவ்வொரு நாளும் நிறத்தில் புதிய பதிவுகளை வெளியிட்டு வந்தேன். இந்தத் திடசங்கல்பம் அற்புதமாய் இன்றோடு நிறைவைக் காண்கிறது.

ஆனாலும், இந்த திடசங்கல்பம் பூண்டு கொண்டதன் பின்னர், அதனை செயல் நிலைப்படுத்துவதற்கான உத்வேகத்தை எவ்வாறு பெறுவது? எவ்வாறு விடயங்களை நாம் பிந்திப்போடாமல் உடனே செய்து கொள்ள முடியுமான ஆர்வத்தைப் பெற்றுக் கொள்ளலாம்? போன்ற விடயங்களை இந்த மாதத்தின் இந்த அப்பியாசம் எனக்கு அனுபவமாய் கற்றுத் தந்தது.

அந்த அனுபவங்களை நிறத்தின் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள ஆர்வமானேன். அதுவே இப்பதிவாயிற்று. இது இந்த மாதத்தின் திடசங்கல்பத்தின் நிறைவைக் குறிக்கும் முப்பத்தோராவது, பதிவாய் இருப்பதும் சுவை.

writing-niram

ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு, அதனை முதலில் ஆரம்பிக்க வேண்டும். ஒரு வேலையை செய்யத் தொடங்கினாலேயே, அதன் 50 சதவீதமான வேலைகள் நிறைவு கண்டுவிட்டதென பிரபலமான கூற்றும் உள்ளது. இது முற்றிலும் உண்மை.

ஒரு விடயத்தை ஆரம்பிப்பதுதான் மிகவும் கடினமானது. ஆரம்பித்தால், தொடரும் நிலைகள், அருவி நீராய் மேடு, பள்ளம் மறைத்துப் பாய்ந்தோடும்.

அப்படியானால், ஒரு விடயத்தை தொடங்கி, நிறைவு செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை எவ்வாறு தோற்றுவித்துக் கொள்வது?

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கட்டுரையை எழுதப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்களும் பேனாவும் கடதாசியும் மட்டுந்தான் உங்கள் அருகாமையில் இருக்க வேண்டும். இடைஞல்கள் தரும் எதுவும் அங்கிருக்கக் கூடாது.

வெற்றுக் கடதாசியை நிரப்ப, பேனா ஆசை கொள்ளும், பேனாவிற்கு, எந்த தடங்கலுமில்லா உங்கள் சிந்தை நடக்கக் கற்றுக் கொடுக்கத் தொடங்கும். சிந்தையிலிருந்து நீங்கள் தோன்றச் செய்ய நினைத்த, எழுத்தின் வடிவம் கடதாசியில் மலர்ந்து கொள்ளும்.

கணினியில் நீங்கள் எழுதுவதானால், எழுதப்பயன்படுத்தப்படும் செய்நிரலைத் தவிர எதுவுமே கணினியில் செயலில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்நிலையில், செய்நிரலோடு உங்கள் சிந்தை கொண்ட அற்புத எண்ணங்கள் விசைப்பலகையில் விருப்பத்தில் எழுத்துக்களைப் பிரசவிக்கும்.

எழுதிக் கொண்டிருக்கும் போது, அங்கே என்ன நடக்கிறது? இங்கே என்ன நடக்கிறது? என்ற எண்ணங்கள் மனதில் இடைவிடாது தோன்றிக் கொண்டு, “எழுதுவதை நிறுத்திவிட்டு, வேறு ஏதாவது செய்” என்பதாகச் சொல்லிக் கொள்ளும் மனவோசை கேட்கும். மயங்கிவிடக் கூடாது. எழுதி நிறைவு செய்த பின் அவை பற்றி அறிந்து கொள்ளலாம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

நான் பதிவுகளை எழுதும் போது, இந்த முறையையே கையாள்வேன்.

என்ன வேலை, செய்கிறோமோ அதில் மட்டுமே கண்ணுங்கருத்துமாக நின்று, அதனை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டால், அந்த வேலை நிறைவு கண்டுவிட்டதென்றே எண்ணிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பதிவை எழுத வேண்டுமென்ற நிலையில், நான் கடந்த முப்பது நாட்களிலும், இந்த அணுகுமுறையைக் கையாண்டேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புதிய பதிவுகளை எழுதக்கூடியதான வாய்ப்பை அது அற்புதமாக வழங்கியது.

“நேரமில்லை என்றெல்லாம் யாரும் சாட்டுப்போக்கு சொல்லிவிட முடியாது” — இங்கு வென்றவன், தோற்றவன், பணக்காரன், ஏழை என யாருக்கும் ஒரே அளவான நேரந்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தொடங்கும் போது, இன்று எதனை படைக்கலாம், எதனைத் தொடங்கி, அதனை நிறைவு செய்யலாம் என்ற எண்ணத்தின் செறிவு உங்கள் சிந்தையில் மலர வேண்டும். அது ஆயிரம் வெற்றிகளைக் கொண்டு தர வேண்டும்.

“நேரத்தை நீ பயன்படுத்தி, ஒரு விடயத்தை உருவாக்கினால், அந்த விடயம் மூலமாக காலத்தை சேமித்து வைக்கிறாய். நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆனால், படைப்பதால் உன்னால் அதனை கைப்பற்றிக் கொள்ள முடியும்” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்ப்பத்தின் முப்பத்தோராவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. இன்றைய பதிவோடு இந்த ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு என்ற நிலை நிறைவு காண்கிறது. நிறத்தில் வழமை போல, பதிவுகள் தொடரும். நிறத்தின் பதிவுகளை வாசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அத்தனை உயிர்களுக்கும் நன்றிகள் கோடி. விரைவில் இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்!

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்