எண்ணம். வசந்தம். மாற்றம்.

இருளை மெல்லக் கழற்றிய காலை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அது ஒரு காலைப் பொழுது. விடிந்திருக்கவில்லை. நேரம் போயிருப்பதாக தலையணைக்கருகே இருந்த திறன்பேசி சொல்லியது.

காகம் கரைகின்ற சத்தமும் சேவல் கூவும் சத்தமும் காதோடு கவிபாட, நானோ மாறி மாறிப் பெய்கின்ற மாரி மழையை எதிர்பார்த்தவனாய் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள விளைகிறேன்.

நான் மழையை வேண்டி நிற்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

rain-3

பூமியின் பூட்டைத் திறந்து, அதற்குளுள்ள வாசனையைப் பிரபஞ்சம் நுகரச் செய்கின்ற மழையின் வித்தை பற்றி நான் எப்போதும் வியந்து போவேன்.

கதிரவனின் ஒளிக்கீற்றுக்குள் புணர்ச்சி கொண்டு, வர்ணக் கோலங்கள் வானில் செய்ய மழையைத் தவிர வேறு எதனால் முடியும்?

ஒளியோடு அலைமோதும் அந்த மழையின் அழகிய நிலை அதன் ஈரம் தான். ஈரத்தைப் பொதிகளாய் சுமந்து கொண்டு, வானிலிருந்து ஒரு சொட்டு ஈரமும் குறையாமல் மண்ணின் மனதோடு பேசும் மொழிதான் மழையின் கவிதை.

நீர் — ஆவியாகி, பின்னர் மழையாகி மீண்டும் ஆவியாகிப் பின்னர் மழையாகி என இந்தச் சக்கரம் சென்று கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையின் அத்தனை நிலைகளும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டேயிருக்கும் எனச் சொல்வதாய், நான் இந்தச் சக்கரத்தைக் காண்பதுண்டு.

நீயுந்தான், உன் கவலைகளை நீர், ஆவியாவது போல், தொலைக்க வேண்டும். பின்னர் அது மகிழ்ச்சி என்ற மழையாகி உன் மேனிக்கு ஈரம் கொடுக்கும். உன் மனதுக்கு பறந்து போகும் இன்னொரு தேசம் கொடுக்கும்.

உன் கவலைகளை விபரிக்க உன்னிடம் சொல்லில்லை என்பதாய் நீ உணரக் கூடாது. உணர்வுகளைச் சொற்களால் சொல்ல, எந்த மொழிக்கும் வலிமை இருப்பதாய் நான் நம்பவில்லை. உணர்வுகளின் பாரத்தினால், சொற்கள் கூட தொலைதூரம் ஏகிவிடுகின்றன.

மொழி உனக்கு வலிகளை விபரிக்க துணையாயில்லை என்பதற்காய், வலிகளை நீ வலித்துக் கொள்ளாதே. அவை பாவம்! உனக்குள்ளே இருந்து கொண்டு உன்னைப் புடம்போட்டுக் காட்டுகின்ற அரிய வேதியல்கள் தான் அந்தக் கவலைகள். வேதியல் மாற்றங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். அதுவும் இன்பமாய் மாறும்.

நீ புதியவைகள் படைக்க வேண்டும். பழையவைகளை புதுப்பிக்க வேண்டும். இவற்றைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போது, உனக்கே தெரியாமலேயே மகிழ்ச்சிதேவி உன்னோடு சேர்ந்து வாழ வருவாள். நீ காண்கின்ற உலகம் மாற்றமாகித் தோன்றும்.

வலிகள் தொலைந்து, வழிகள் தோன்றும். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை — உன் தேகத்துக்குள் நீ நுழைந்து கொண்டு, வலிகள் தொலைத்த வாழ்வு பற்றி கனவு காணு.

“நேரம் சென்றுவிட்டது. காலையில் தேநீர் குடிப்பதும் இன்பம் தரும். முதலில் அதைச் செய்!” — கோபாலு, அன்புக்கட்டளை இடுகிறான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்