எண்ணம். வசந்தம். மாற்றம்.

“அழகு” என்ற சொல் என்றும் அழகானதன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

முகத்தை அழகென்றும் முடியை அழகென்றும் தமிழை அழகென்றும் தன்னை அழகென்றும் சொல்கின்ற உலகப்போக்கு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அழகை ஆராதிக்கும் பழக்கம் ஒவ்வொரு மொழியிலும் ஆளப்பட்டிருக்கும் விதமே தனியழகானதுதான்.

ஆனால், அழகு என்பது வதனத்தின் முகவரிக்குக் கொடுக்கும் முத்திரைதான் என்றால் இல்லையென்றே சொல்வேன். நகரும் மலைகள், மனதோடு பேசும் சிரசுகள், மரங்களை வெட்டிச்செல்லும் காற்றின் சீற்றம் எல்லாமும்தான் அழகு நிறைந்தவை.

வாழ்க்கை என்பதுகூட ஒருசொல்லாக இனங்கண்டுவிடப்படக் கூடாதது. அது அழகான வாழ்க்கை என்ற அடைமொழிக்குள்ளும் அடக்கப்படக்கூடாதது. பசி கொண்ட வாழ்க்கையின் பெறுதிக்கு கிடைக்கின்ற பரிசு — அழகு. வியர்வை சிந்தி உழைக்கின்ற வாழ்விற்கு கொடுக்கின்ற வலிகள் — அழகு. பொய் கொண்டு சேர்க்கும் மொழியின் விந்தையான நடனம் — அழகு.

“அழகு” என்பது ஒரு பொருளா என்றால் இல்லை என்றுதான் பதில். பொருளின் அழகைக்கூட்டும் அடைமொழிதான் அழகு என்பது வெளிப்படையானது. வான நட்சத்திரங்களின் பெறுதியான நீயும், அழகின் அடைமொழிதான்.

beauty-azhagu

சூரியன் கக்கும் சூட்டிற்கு புதிதாக யாரும் பெயர் வைப்பதில்லை. அதுவொரு அழகிய சூடு என்று யாரும் சொல்லிவிட்டதாகத் தகவலில்லை. எரிமலைகளின் பெறுதிகளாய் வருகின்ற தீக்குழம்பின் அளவைக் கண்டு யாரும் அதற்கு பெயர் வைத்ததாய் வரலாறு இல்லை. அழகிய எரிமலை என்று எரிமலையை ஆராதிப்பதாய் கேள்விப்பட்டதில்லை.

உன் உணர்வுத்தீயில் வெந்து ஆவியாகும் உணர்ச்சிகளின் பெறுதிகளுக்கு யாரும் அழகு என்று அர்த்தம் சொல்வதில்லை. அழகான உணர்வுகளுக்கு அழகு என்ற அடைமொழி இல்லாமலேயே அழகாய்த் தோன்றிவிட முடிகிறது.

அழகு என்பது எப்போதும் பாராட்டப்படும் வார்த்தையாக நீ எண்ணிக் கொள்ளக் கூடாது. நீ “அழகு” என்ற அடைமொழிக்குள் காண்கின்ற எழிலை, இன்னொருவன், “அசிங்கம்” என்பதாய் உணர்வதும் மனித இயல்பின் அழகிய நிலை.

அழகு என்பதை உச்சரிக்கும் மொழியின் கனத்தில்தான் அதன் அர்த்தம் மிளிர்கிறது. வாயும் மனதும் எண்ணிச் சொல்கின்ற வார்த்தையில் கலந்து நிற்கும் அழகு என்ற மொழியின் பாவனைதான் உண்மையானது.

நீ, அழகு என்ற அடைமொழியை ஒரு பொருளோடு பொருத்திக் கொள்ள முனையாதே! அழகு என்பது உன்னோடு பொருந்திக் கொள்ளட்டும்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்