எண்ணம். வசந்தம். மாற்றம்.

ஆர்வத்திற்கு ஆயுள் கொடு!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்து சென்ற 2014, நீண்ட நினைவுகளின் தோற்றுவாயாக எனக்குள் உருவாகி இருக்கிறது. பல புதிய விடயங்கள், புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள், புதிய படைப்புகள் வாயிலாக, கடந்து சென்ற ஆண்டை நான் சேமித்து வைத்துள்ளேன்.

காலத்தை சேமித்து வைத்தல் பற்றி படைத்தலின் வருவிளைவுகள் சொல்லிச் செல்வது மிக மிக முக்கியமானது.

கடந்த பொழுதுகளோடு வந்து சேர்ந்த அனுபவங்கள், மனிதர்கள் என பலதும் அந்தப் பொழுதுகளுக்கு அர்த்தம் சேர்த்தன.

அதனால், புதியன தருகின்ற பூரிப்பையும் திகிலையும் ஒருமிக்கச் சேர்த்து காலமாக என்னால் சேமித்து வைக்க முடிந்தது.

14246597211_41150c6cca_o

பயணங்கள் முடிவதில்லை என்றாலும், பாதைகள் முடிந்து போவது தவிர்க்க முடியாதது. ஆனாலும், இந்தப் பயணத்தைத் தொடர்வதா, இருக்கின்ற இடத்திலேயே படர்வதா என்கின்ற கேள்விகளுக்கு, விடை தேடுவதும் கூட, ஒரு பயணத்தின் பண்பாகவும் இருக்கிறது.

பயணங்களும் படைத்தலும் தான் ஒருவனின் அடையாளத்தை புடம் போடும் தீச்சுவாலையாக ஆகிவிடுகிறது.

மனத்தில் தோன்றும் அவாக்களின் அவதியாக, வெளிப்படுவது, ஆர்வமாகும். இந்த ஆர்வத்தை வெளிக்காட்டி, நெறிப்படுத்தும் போது, மனத்தின் தீச்சுவாலை சுடர் கொள்ளத் தொடங்கும். அப்போது, நாம் மற்றவர்களுக்கு நெருப்பாக துணை நின்று இருட்டில் வெளிச்சம் கொடுப்போம்; அடுப்பிற்கு வெப்பம் கொடுப்போம்; ஆர்வத்திற்கு ஆயுள் கொடுப்போம்.

ஓராண்டு, பறந்து சென்று விட்டது. அடுத்த ஆண்டின் ஒரு நாளும் பறந்து சென்று விட்டது. இப்படி விரைவாக நகரும் காலங்கள், உங்களுக்குள் நம்பிக்கையைப் போஷித்து, மனத்தில் நிலைத்திருக்கும் வகையில் காலத்தை சேமிக்கத் பொருத்தமான வாய்ப்பை உண்டாக்கித் தரட்டும் என்று பொத்தம் பொதுவாய் சொல்லிவிட என்னால் முடியாது. காலத்தை சேமிப்பதற்கான வாய்ப்பை, படைத்தலின் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வாய்ப்புக்கள் வருவதில்லை – உருவாக்கப்படுகின்றன என்பதை நானும் இன்னொரு தடவை பதிவு செய்கின்றேன்.

மலர்ந்துள்ள ஆண்டில், உங்கள் மனத்தில் மகிழ்ச்சி கொண்டு தரும் வகையில் தெரிவுகளைச் செய்யுங்கள். நீங்கள் எதுவோ அதுவாகவே ஆகிவிடுவதற்கான வாய்ப்பையும் வழக்கத்தையும் உண்டுபண்ணுங்கள். ஒவ்வொரு பொழுதையும் புதியதாய்க் கொண்டு, பயணங்களை பரவசத்துடன் எதிர் கொள்ளுங்கள். முக்கியமாக, அனுபவங்களை அற்புதமான பொக்கிஷமாக எண்ணி, காலத்தை சேமியுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்