எண்ணம். வசந்தம். மாற்றம்.

சொல்ல மறந்த கதை (இது திரைப்படம் பற்றியதல்ல)

நான் தலைப்பில் குறிப்பிட்ட “இது திரைப்படம் அல்ல” என்ற வரிகளே இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கும் முன் தங்கர் பச்சானின் திரையோவியமான “சொல்ல மறந்த கதை” பற்றி உங்கள் ஞாபகங்களை ஏற்படுத்திருக்கக்கூடும். கிராமத்தில் “வீட்டோடு மாப்பிள்ளை” எனும் எண்ணக்கருவைப் பற்றி திறம்பட சித்தரித்த படமது. இயக்குனர் சேரன் நடித்த படம் என்பது போனஸ் தகவல்.

இது திரைப்படம் பற்றியதல்ல எனக் குறிப்பிட்டு சினமாவைப் பற்றியே அடுக்கிக் கொண்டிருக்கிறீங்களே! என்று நீங்கள் ஆச்சரியமாகப் பார்ப்பது புரிகிறது. சரி ஓவராக பேசாமல் மேட்டருக்கு வர்ரேன்.

நான் நிறம் வலைப்பதிவில் பதிவுகளை இடும் போது, எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஆளுமைகளைப் பற்றி அடிக்கடி கதைப்பதுண்டு. அண்மையில் கூட “நீயொரு மக்கு” எனும் தலைப்பில் என்னைக் கவர்ந்த அறிஞர் அல்பர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றி பதிவொன்று இட்டிருந்ததையும் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

இந்த வகையில், ஒரு மிகப்பெரிய என்னைக் கவர்ந்த ஆளுமையைப் பற்றி பதிவு போட வேண்டுமென நினைப்பேன். ஆனால், நேரம் கிடைக்காது அல்லது அது மறந்து போய் விடும் பின்னர் திடீரென ஞாபகம் வரும். இது நான் சொல்ல மறந்த கதை…

உலகில் சிறுவர்களைப் பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்? நான் சொல்லப் போகும் ஆளுமைக்கு சிறுவர்களில் அலாதியான பிரியம். அறிவுலகின் திசைகளை விரிவுபடுத்த சிறுவர்களை இவர் ஊக்குவிக்கும் பண்பு இருக்கிறதே அது தனித்துவமானது. யார் இவர்? நீங்கள் சில வேளை இப்போது ஊகித்திருப்பீர்கள்.

ஆம், அவர் யாருமல்ல இளம் தலைமுறையின் இனிய தோழன் டாக்டர். அப்துல் கலாம்.

அவர் எழுதிய நூல்களில் “அக்னிச் சிறகுகள்” எனும் பொக்கிஷம் மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடியது. அந்த நூலில் உள்ள வரிகளை வாசிக்க வாசிக்க எமக்குள் புதுத்தெம்பொன்றே வரும். ஆக, அவர் வாழ்க்கையின் சரிதத்தை சொல்லும் அக்னிச் சிறகுகள் அவர் வாழ்வியலின் அரிய பல தகவல்களையும் சொல்லும். உயரத் துடிக்கும் இளைஞன் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் “அக்னிச் சிறகுகள்” என்பேன்.

இவர் முக்காலத்திலும் வாழ்ந்த, வாழும், வாழப்போகும் அறிஞர் அப்துல் கலாம் என்றால் மிகையேயில்லை. அறிஞராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராவும் இருக்கும் டாக்டர் தூரநோக்குச் சிந்தனையின் சிற்பியென்றே கூறவேண்டும். India 2020: A Vision for the New Millennium எனும் அவரின் நூலானது, இந்தியாவின் மனித வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதால், 2020 ஆம் ஆண்டளவில் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என்ற இனிப்பான செய்தியை எதிர்வு கூறுகிறது.

1931ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி தமி்ழ்நாட்டின் இராமேஸ்வரம் எனுமிடத்தில் பிறந்த அப்துல் கலாம், தலைசிறந்த இந்தியாவின் விஞ்ஞானியாக திகழ்கின்றார்.

30 இற்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவப் பட்டங்களைப் பெற்றிருக்கும் டாக்டர் கலாம், “பத்ம பூசண்” (1981), “பத்ம விபூஷண்” (1990) ஆகிய சிறப்பு பட்டங்களை இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் 11 ஆவது சனாதிபதியாக, 2002ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி இவர் பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டரைப் பற்றி எத்தனையோ விடயங்களைச் சொல்லலாம், என் பதிவு இப்போதே நீளமாகிவிட்டது. ஆதலால் இத்துடன் நிறைவைக் குறிக்கிறேன்.

அப்துல் கலாம் – மறக்க முடியாத என் நினைவுகளில் என்றும் நிற்கும் இன்னொரு காத்திரமான ஆளுமை.

அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய உரையொன்று இங்குள்ளது. கட்டாயம் வாசியுங்கள். இது இலட்சியங்களின் தொகுப்பு.

“நீங்கள் வாழ்வில் செல்வந்தராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் உங்களுக்கே உரித்தான பிரதான மதிப்புள்ள சொத்து உங்களிடம் உண்டு – அது சிந்தனை செய்வதுதான்” – டாக்டர் அப்துல் கலாம்

-உதய தாரகை

“சொல்ல மறந்த கதை (இது திரைப்படம் பற்றியதல்ல)” மீது ஒரு மறுமொழி

  1. நிறப்பிரியை Avatar
    நிறப்பிரியை

    சொல்ல மறந்த கதையை சொன்ன விதம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
    ஆனால், இளைஞர்கள் மட்டும்தான் ‘அக்னிச் சிறகு||களை வாசிக்க வேண்டுமா? இளைஞிகள்…..?

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்