சுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி

ஆரோக்கியம் என்பது எமக்கு அத்தியாவசியமான உயிர்ப்புள்ள பண்பு. சுகாதாரமாக வாழ்தல் என்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல. சுத்தம் என்பது மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடிய அவசியமான கூறு.

நேற்று நான் “புறா எச்சம்” (நிறம் வலைப்பதிவில் புறாவின் எச்சம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயத் தகவல்கள் விரைவில் பதிவாக வரவிருக்கிறது) தொடர்பாக சில விடயங்களைப் பற்றி கூகிள் செய்யும் போது, சுத்தம் பற்றிய விடயங்கள் பற்றியும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சுத்தம் பற்றி நானறிந்து கொண்ட விடயங்கள் வித்தியாசமானவை: ஆச்சரியத்திற்குரியவை.

அதிகளவு சுத்தம் ஆபத்தானது!!!

ஆங்கிலத்தில் சுத்தம் என்ற சொல்லுக்கு நிகரான சொல் “Hygiene” என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தச் சொல் ஆங்கிலத்திற்கு வந்த கதை வினோதமானது. கிரேக்க நாட்டின் சுத்தத்திற்கான கடவுளின் பெயர் Hygieia என்பதாகும். இந்தச் சொல்லிலிருந்தே சுத்தத்திற்கான ஆங்கிலச் சொல் உண்டாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தூய்மைக்கும் சந்திரனுக்கும் பொறுப்பான கடவுளாகவும் கிரேக்கர்கள் Hygieia ஐயே கருதுகின்றார்கள்.

உலகிலுள்ள நுண்ணங்கிகளைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா? பக்றீரியா, வைரஸ் என்று வகைகளில் வகை தொகையின்றி வெவ்வேறு இனங்களும் நிலைகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. எமது உடம்பில் கிட்டத்தட்ட சுமார் 1000 பக்றீரிய இனங்கள் குடிகொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதுமட்டுமா!! ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மக்களின் தொகையைக் காட்டிலும் அதிகமான நுண்கிருமிகள் எமது உடலில் வாழ்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகனும்.

நுண்ணுயிர் கிருமிகளை உடலில் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்று 11 ஆயிரம் சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அதிகளவில் சுத்தமாக இருப்பது (தெளிவாகச் சொன்னா, ஓவரா சுத்தமாக இருப்பது) Eczema எனும் தோல் நோய் மற்றும் Asthma எனும் சுவாச நோய் ஆகியன ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்குமென்ற அதிர்ச்சியான செய்தி அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓவரா எதுவும் செய்யக்கூடாது என்று இதற்குத்தான் சொல்வார்களோ!!?

இதனாலென்னவோ தெரியவில்லை, இந்தியாவிலுள்ள ஜெயின் தர்மம் என்ற சமயத்தைச் சேர்ந்த துறவிகள் தாம் குளிப்பதால் தமது உடலிலுள்ள மில்லியன் கணக்கான நுண்ணுயிர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டுவிடும் என நம்பி, அவர்கள் தங்கள் கால்கள் மற்றும் கைகள் ஆகியவற்றைத் தவிர உடலின் ஏனைய பகுதிகளில் குளிப்பதில்லை.

ஐந்து செக்கன் விதி

இப்போதெல்லாம் சவர்க்காரங்கள் விதவிதமான வகையில் விற்பனைக்கு வருகின்றன. ஆயர்வேதம் என்றும் ஆரன்ஜு என்றும் விரியும் அதன் வகைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். சுத்தம் என்று சொல்லுகையில் அதனோடு இணைந்தாற் போல், சவர்க்காரமும் சேர்ந்து வரும். சவர்க்காரங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்று நீங்கள் அறிவீர்களா?

விலங்கு கொழுப்பு மற்றும் அவற்றின் எச்சங்கள் என்பன ஒன்றாக இணைந்து Tiber ஆற்றங்கரையில் திண்மமாக படிந்துள்ளது. இத்திண்மக்கூறுகள் அழுக்குகளை நீக்குபவனவான அமைந்துள்ளன. இதனால், சவர்க்காரம் உதயமாயிற்றாம்.

பண்டைய எகிப்தியர்களும் 16 ஆம் நூற்றாண்டில் மெக்சிக்கோவில் வசித்தவர்களும் தமது உடலின் தோலில் ஏற்படும் வெட்டுக்காயங்களை குணமாக்க சிறுநீரைக் காயமுள்ள பிரதேசத்தில் பூசுவார்களாம். சிறுநீரில் காணப்படும் யூரியா எனும் பிரதான இரசாயனமானது, பங்கஸ் மற்றும் பக்றீரியா ஆகியவற்றைக் கொல்லக்கூடிய ஆற்றலுடையது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இது இப்படியிருக்க, அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆச்சரியமான நிகழ்வொன்று இடம்பெற்றது. அது என்ன தெரியுமா? தனது பாடசாலையில் நடாத்தப்பட்ட விஞ்ஞானம் சம்மந்ததமான கண்காட்சியின் போது, ஒரு சிறுமி காட்சிக்காக வைத்திருந்த நீரின் இரு மாதிரிகளே ஆச்சரியத்திற்கு காரணமெனலாம். அதாவது, கழிவறையில் கழிவுக் குழி நீரிலும் (Toilet bowl water) பார்க்க சிற்றுண்டிச்சாலையொன்றின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள நீரில் அதிகளவு பக்றீரியாக்கள் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது அச்சிறுமியின் கண்காட்சிக்கான இரு நீர் மாதிரிகள்.

five-second-rule.jpg

ஐந்து செக்கன்கள் விதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதாவது, நாம் தவறுதலாக நிலத்தில் விழும் உணவுப்பொருள்களை ஐந்து செக்கன்களுக்குள் விரைவாக எடுத்துக் கொண்டால், அதில் நுண்ணங்கிகள் தொற்றிக் கொள்ளதாம் என்பதே அந்த விதி சொல்லும் கதை. ஆனால், இந்த விதி எச்சந்தர்ப்பத்திலும் உணவுகள் தொடர்பில் இனி பொருந்தவே மாட்டதாம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. ஏனெனில், உணவில் பக்றீரியா தொற்றிக் கொள்ளுவதற்கு ஒரு நேர இடைவெளியும் தேவையில்லை. அவ்வளவு வேகமாக உணவுகளில் பக்றீரியா தொற்றிக் கொள்ளும். ஐந்து செக்கன்களுக்குள் ஆயிமாயிரம் பக்றீரியாக்கள் தொற்றிக் கொள்ளும் அபாயம் தவறுதலாக நிலத்தில் விழும் உணவுப்பொருள்கள் தொடர்பில் உள்ளதாம்.

தொலைக்காட்சி உயிர் கொல்லும்!!

சுத்தம் என்பது பற்றிக் கதைக்கும் போது, பல் துலக்கல் பற்றியும் கதைக்க வேண்டும். நான் ஏற்கனவே “பல் போனால் இதயமே போகுமாம்” என்ற தலைப்பில் பல் சுத்தத்தின் அவசியம் பற்றியொரு பதிவிட்டிருந்ததை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். முதலாவது பற்தூரிகை எதனால் ஆக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? பன்றியின் உரோமம் தூரிகையாகவும், ஆட்டின் எலும்பு அதன் கைப்பிடியாகவும் அமைந்திருந்தது. இது 1498 ஆம் ஆண்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாம். ரொம்ப பழசுதானே!. இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்ட இராணுவ வீரர்களை பல்துலக்கும் படி கட்டளையிட முன், அமெரிக்காவில் பல் துலக்கும் வழக்கம் இருக்கவில்லையாம் என்பது ஒரு போனஸ் தகவல்.

,இப்படியொரு சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீங்களா? கழிவறையொன்றைக் கட்டுவதற்கு 23.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்த உண்மைச் சம்பவம் உங்களுக்கு தெரியுமா? அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிறுவனம் நாஸாவானது, விண்வெளி ஓடத்தில் கழிவறை கட்டுவதற்கே இவ்வளவு பணத்தை செலவழித்தது. இந்த கழிவறையானது, பூச்சிய புவியீர்ப்பு விசையிலும், நிமிடத்திற்கு 850 லீட்டர் வளியை உறிஞ்சி எடுக்கும் தகவு கொண்டதாம். கழிவு அறைக்கு இப்படியெல்லாம் செலவு செய்வது ரொம்ப ஓவருங்க…

வைத்தியசாலைகளில் சுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் Oliver Wendell Holmes என்பவரால் 1843 ஆம் ஆண்டில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அப்போதைய சமூக சித்தாந்தங்கள் தொடர்பில் மக்கள் கொண்ட ஈடுபாட்டால் இம்முன்னெடுப்புகள் வெற்றியளிக்கவில்லை. அமெரிக்காவின் முன்னணி வைத்தியர்களுள் ஒருவரான Charles Meigs என்பவர் வைத்தியர்களின் சுத்தத்தை வலியுறுத்தும் வகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “Doctors are gentlemen, and gentlemen’s hands are clean.” எந்தளவு உளவியலாகத் தாக்கும் வரிகள் இவை.

17 ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலைகளில் பிரசவம் செய்யும் தாய்மார்களில் ஏறத்தாழ கால்வாசிப் பகுதியினர் ஒரு வகைத் காய்ச்சல் தொற்றுவதன் மூலம் இறந்துள்ளார்கள். என்ன காரணமென்று பார்த்தால், பிரசவம் நடத்திய வைத்தியர்களினதும், தாதிமாரினதும் சுத்தமில்லாத தன்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. என்ன கொடுமை!!

இப்போதெல்லாம் சின்னத் திரையில் சீரியல்களை சீரியஸாக பார்ப்பது என்பது வீடொன்றின் குடும்பத்தலைவியின் தவிர்க்க முடியாத கடனாவிட்டதோ என்னவோ என்றே சொல்லத் தோனுகிறது. என்ன உதய தாரகை, சுத்தம் என்பது பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் திடீரென இப்படி சீரியல் பற்றி கதைக்கிறீங்க என்றுதானே நீங்கள் எண்ணுகிறீர்கள். எல்லாவற்றுக்கும் பொருத்தமான காரணம் இருக்குதுங்கோ!!

television-kills-you.jpg

அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பெறப்பட்ட முடிவுகளின் படி, வைத்தியசாலைக் கட்டில்கள் ஏன் கழிவறை கைப்பிடிகள் என்பவற்றிலும் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டிகளின் ரிமோட் கொன்ட்ரோல்களே (Remote Controls) மிக அதிகளவில் பக்றீரியாக்களைக் காவும் சாதனமாகும் என அறியப்பட்டுள்ளது. வருடாந்தம் வைத்தியசாலைகளில் 90,000 இற்கும் அதிகமான மரணங்களுக்கு காரணமாகவுள்ள Staphylococcus எனும் பக்றீரியாவையே இந்த ரிமோட் கொன்ட்ரோல்கள் காவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. உஷாராக வேண்டியது அவசியம்!!

Charles Guiteau என்ற தனது நண்பரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் மட்டும் அமெரிக்காவின் இருபதாவது ஜனாதிபதியான James Garfield இறக்கவில்லையாம். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகும் போது, அவரின் கையானது, எருதுப் பசளையால் அசுத்தமாகியிருந்ததாம், இந்த அசுத்தம் நீக்கப்படாமலேயே சிகிச்சை செய்யப்பட்டதாம். இந்த சுத்தமில்லா கையால் ஏற்பட்ட தொற்றே அவரை மூன்று மாதங்களின் பின்னர் மரணமடையச் செய்தது என இப்போது நம்பப்படுகிறது.

சுத்தமென்பது மிகவும் முக்கியமானதொன்று என்பதை இன்றளவில் உலகில் எல்லா விடயங்களிலும் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. சுத்தம் என்பது தொடர்பாக நான் தேடித் தெரிந்த தகவல்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். நீங்கள் அறிந்த சுத்தம் பற்றிய சுவாரஸியமான தகவல்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளலாமே!

-உதய தாரகை

One thought on “சுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி

  1. பற்தூரிகை எதனால் ஆக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? பன்றியின் உரோமம் தூரிகையாகவும், ஆட்டின் எலும்பு அதன் கைப்பிடியாகவும் அமைந்திருந்தது.

    😯 கொடுமை! இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நம் முன்னோர்களே ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று ஆரோக்கியமாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

    நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது, அதையே தங்களின் இந்த பதிவு உணர்த்துகிறது. ஆனால் சென்னை போன்ற நரகங்களில் குறைந்தபட்ச சுற்றுப்புற சுகாதாரத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை. இப்படி இருக்கையில் உடற்பயிற்சியைப் பழகி நம்மை நாமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s