எனது முதலாவது காதலி

தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)

என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)

இதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும்! போதும்! அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை?)

அன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம்! ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா?) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்! வந்ததால் ஏற்பட்ட தாக்கம்!

நான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது! ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா? என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா..? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…

தலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.

அடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்? வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…

என் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போனால், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை!)

நாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா? இதைச் செய்வாளா? அப்படிச் செய்வாளா? இப்படிச் செய்வாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.

கிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது!

என் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது! அனுபவித்துப் பார்க்க வேண்டும்! (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா? ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)

எனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்! என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…?

ஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..? இல்லையே..

அவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும்! போதும்..! எங்களுக்குப் பொறாமையாய் இருக்க….)

என்ன அதிசயம்! என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ?). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.

அவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்…! அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை!)

அவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே! அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!

அவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன்! அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா? அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா? ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா? என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…?)

இன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.

என்ன உதய தாரகை! அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.

நான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா?!! அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா? புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…

இப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்கி உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்!

நீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா?

இன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

– உதய தாரகை

21 thoughts on “எனது முதலாவது காதலி

 1. ஐயோ தாரகை..ஏமாத்திட்டீங்களே…எப்படிப்பா உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது..

 2. வாழ்த்துக்களுடன் வணக்கம்!

  இக்கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததும், தலைப்பில் காணப்பட்ட சுவாரஸ்யமான விடயம்… உடனே கட்டுரையை வாசிக்கத் தூண்டியது. ஆனாலும், இப்படி ஒரு விடயத்தை இவ்வளவு அந்தரங்கமாக உதயதாரகை எப்படி சொல்வீர்கள் என்ற ஒரு எண்ணத்துடன், முதல் பந்தியை வாசிக்க ஆரம்பித்ததும், உதய தாரகையின் முதல் காதலி யார் என்பதை மனதால் ஊகித்து விட்டேன்.

  ஆனாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டே செல்லும்போது எனது ஊகம் பிழையோ என எண்ணுமளவிற்கு முதல் காதலி பற்றியதான வர்ணனை மிகையாக இருந்தது. ஆனால், முடிவில் எனது ஊகத்தை உண்மையாக்கிவிட்டீர்கள்.

  கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள். இன்னொரு விடயம், ஒரு கம்ப்யூட்டரை பெண்ணுக்கு உருவகப்படுத்தி பெண்ணினத்துக்கே பெருமை தேடித்தந்து விட்டீர்கள்.

 3. நிறப்பிரியை உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.

  ரொம்பத்தான் பெருமை தேவையென்று திரியிரீங்க போல… 😆

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 4. வாசிக்கும் போது அருமையாக இருந்தது. எழுத்துநடை என்னை வெகுவாகக் கவர்ந்தது.

  தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

  நன்றி.

 5. மாயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 6. தலைப்பைப் பார்த்ததும் நம்ம லொல்லுப் பொண்ணு விஷயம் என்டுல்ல நெனச்சன். கவுத்துட்டீங்கலே சார்.

 7. பலே பலே உதய தாரகை ரொம்ப தான் ஏமாத்திட்டிங்க. ஆனா சொல்ல வந்த விசயத்த சுவாரஸ்யமா சொல்லிட்டிங்க்

 8. Really Very Super. தலைப்பைப் பார்த்து ஆர்வம் மேலிட உங்கள் காதலியை அறிந்து கொண்டுவிட பார்வையை மேயவிட்ட எனக்கு பெருத்த ஏமாற்றமே… வித்தியாசமான முயற்சி;. வெளுத்து வாங்கிவிட்டீர்களே.. வாழ்த்துக்கள் அண்ணா.

 9. அனிதா,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். இன்னும் பல பிரபஞ்ச எல்லைகள் விரியும்.. 🙂

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 10. பாக்யா மற்றும் ரேகா..

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல..

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்..

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s