உணர்வுகளிடம் நடிக்க முடியாது

வெற்றிகள் எம்மை எதிர்பார்த்த கணங்களிலும், எதிர்பாராத கணங்களிலும் நெருங்கி சினேகம் கொள்வதுண்டு. இந்த இரு நிலையிலும் நாம் உணர்ந்து கொள்ளும், வெளிப்படுத்தும் உணர்வு பொதுவாகவே ஒன்றானது தான் என எண்ணத் தோன்றுகிறது.

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வை நேற்றிரவு நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, விருதுகளை வெற்றி கொண்டு அதைப் பெற்றுக் கொண்ட பின் திரைப்பட பிரபல்யங்கள் ஆற்றிய உரையும், அவர்களின் உணர்ச்சியும் இருக்கிறதே, அது அவர்களின் தொழிலையும், நடிப்பையும் தாண்டியவொன்று.

“ஆஸ்கார் கிடைத்தவுடன், மேடையில் மயக்கம் போட்டு யாராவது விழுந்திருக்கிறார்களா? முதலாவதாக விழுவது நானாகவோ இருக்கலாம்” என்று நடுங்கிய குரலுடனும், உடலுடனும் தோன்றிய Penelope Cruz ஐ கண்டவுடன், என் கண்களில் கண்ணீர் ஆறு உருவாக்கம் பெற முனைவதை உணர்ந்தேன்.

அந்த மேடையை நோக்கி பார்த்திருந்தவர்களின் கண்களும் கலங்கிவிடுவதை தொலைக்காட்சியின் திரை காட்டிக் கொண்டிருந்தது. வெற்றி பெறலாமென்று தெரிந்தவர்களே, வெற்றி பெறும் கணத்தில் உணர்வுகளின் மூலம் பிரமிக்கச் செய்வது மிக உன்னதமான கட்டங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாதவைகள்.

ஆறாவது தடைவையாக ஆஸ்கார் விருதுகளுக்காக பிரேரிக்கப்பட்ட நாம் யாவரும் அறிந்த டைட்டானிக் நாயகி, Kate Winslet தனது வெற்றியைக் கேள்விப்பட்டதும் கொண்ட உணர்வுப் பகிர்வுள்ளதே மெய் சிலிர்க்கச் செய்தது.

தனது எட்டு வயதில் குளியலறைக் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு Shampoo போத்தலொன்றை கையில் வைத்துக் கொண்டு, ஆஸ்கார் விருதினைப் பெறுவதாய் கற்பனை செய்து ஒத்திகை பார்த்துக் கொண்ட நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, வாழ்க்கையில் பல விடயங்களை அடைவதற்காக நாம் எமது மனதினுள்ளும், யாரும் காணாத இடங்களிலும் ஒத்திகை பார்த்துக் கொள்ளும் ஆனந்த உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் கண் முன் கொண்டுவந்தார்.

Winslet பேசிய பேச்சிலிருந்த சொற்களை விட, ஒலிவாங்கி மூலம் வெளிப்பட்ட அவர் மூச்சுகளே அதிகம் என்பேன். தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சொல்லுக்கு சொல் இரு தடைவை மூச்சு வாங்கிக் கொண்டு பேசிய போது, உணர்வுகளிடம் நடிக்க முடியாமல் தோற்றுப்போன, ஆஸ்கார் விருது பெற்ற அழகிய நடிகையைக் கண்டு வியந்தேன். உணர்வுகள் ஆழமானது, சுவாசிக்கப்பட வேண்டியது.

oscar_rahman

நம்மவர், என் இசை நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் மேடையில் தோன்றி Hollywood Kodak theatre இல் “எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்று தமிழில் உச்சரித்த போது, என்னை நானே தொட்டுக் கொண்டு அது உண்மையாகவே நடக்கின்றதென உறுதி செய்து கொண்டேன்.

ரஹ்மான் சொன்ன இந்த, “All my life I had a choice of hate and love. I chose love and I’m here.” என்பது வாழ்க்கையில் நாம் செய்கின்ற தெரிவுகள் தான் எமது கனவுகளைக் கூட தீர்மானித்து நனவாக்க வழி சமைக்கிறதென புரிந்து கொள்ள முடிந்தது.

நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வும் எனக்கு வெறுமனே திரைப்பட ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வாகத் தோன்றவில்லை. அது வாழ்க்கையின் பாடங்களைச் சொல்லும் உணர்வுகளின் பாசறையாகவே எனக்குத் தோன்றியது.

வாழ்க்கையை புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்த திருப்தி என் மனதில் ஏற்பட்டது. உணர்வுகள் யாவும் எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவை அவ்வாறே உணரப்படவும் வேண்டும்.

– உதய தாரகை

5 thoughts on “உணர்வுகளிடம் நடிக்க முடியாது

 1. எனக்கும் நேற்றைய நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கிற போது பனிக்கட்டியொன்று என் பாதமூடாக ஊடுறுவி மந்தகதியில் மேல்நோக்கி என் உடல் சூடேற்றி தலையினுள் திரண்டு பின் மீண்டும் வழிந்து சென்றது. அதே உணர்வு இந்த கட்டுரையை வாசிக்கும் போதும்

  (//தொழிலையும், நடிப்பையும் தாண்டியவொன்று//, //உணர்வுகளிடம் நடிக்க முடியாமல்…//
  போன்ற இடங்கள்…)

  பல தடவைகள் ஏற்படுகிறது. நானும் என்னைத் தொட்டுப் பார்த்து என் இருப்பு கதிரை மீது என்பதை ஒருமுறை உறுதி செய்து கொள்கிறேன். பதிவின் உள்ளீடுடன் இசைந்து போகும் உங்கள் சொல்லாடல் அபாரம்.
  Steve Jobs உம் இதையே கூறியதாய் ஒருமுறை நீங்கள் சொல்லக்கேட்ட ஞாபகம்.
  “வாழ்க்கை என்பது எமது தெரிவுகளின் பெறுபேறு” உண்மைதான்.

  .

  • நன்றி றம்ஸி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும்.

   வாழ்க்கையில் மேற்கொள்ளப் போகும் தெரிவுகள் தான் எமது தற்போதைய நிலையைத் தாண்டிய அடுத்த அடைவை தீர்மானிக்கப் போகிறது. இன்றைய தெரிவுகளும் தீர்மானங்களும் தான் ‘நாளை’ என்பதை நம்பிக்கையுடன் சொல்லிக் காட்டும் ஊக்கிகள். ஏ. ஆர். றஹ்மான் பாடிய பாடலொன்றின் வரிகள் என் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது இந்த நேரம்..

   நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
   நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே
   இன்றே விதைத்தால் நாளை முளைக்கும்
   அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
   நீ அதை நீ மறக்காதே

   எத்துணை ஆழமான வரிகள். “பிறந்தோம் இறந்தோம் சென்றோம், என்ற வாழ்வை தூக்கி போடுடா” என்ற வரிகளும் இப்பாடலில் பின்னர் வந்து அர்த்தங்களுக்கு முத்தாய்ப்பாய் அழகு சேர்க்கும்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. எனக்கு முன்புள்ள கருத்துகளையும் நானும் ஏற்கிறேன். ரசிக்கிறேன்.

  நமக்கு (ஆசிய மக்களுக்கு) பொதுவாக ஒஸ்கார் ஒரு எட்டாக் கனி… எட்டியும் ஏன் எங்களுக்கு வெள்ளையர்களைப் போல் சந்தோசமில்லை வெளிக்காட்டுவதுமில்லை. ஏன்? பதில் கூறமுடியுமா……?

  விருதுகளும் அதன் பின்னணியையும் நன்றாக விபரிக்கும் ஒலிக்கோப்புக்கான இணைப்பிது. இதை நீங்களும் கேட்டால் விருதுகளின் விஞ்ஞானம் ஏன் என்பது புரியும்….
  [audio src="http://podcasts.britishcouncil.org/podcasts/awards-article.mp3" /]

  • உங்கள் கருத்துக்கும் ஒலிக்கோப்பின் இணைப்பிற்கும் நன்றிகள் பல பெளஸர்.

   நல்லதொரு கேள்வி கேட்டிருந்தீர்கள். இது வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். ஆசிய மக்களின் மனதில் பூட்டி மறைத்து வைக்கப்பட்டுள்ள உணர்வுகளின் அளவைச் சொல்ல அளவுகோல் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டும். அந்தளவில் அத்தனை உணர்வுகளையும் மறைத்து வைக்க முடிந்தவர்கள். ஆனால், உணர்வுகளிடம் நடிக்க முடியாததால், வாழ்க்கையில் சில பல கட்டங்களில் அந்த உணர்வுகளை தமது நினைவுகளில் அசை போட்டுப் பார்த்து ஆனந்தம் கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

   இவ்வாறு ஆசிய மக்கள் இருக்க சமூகச் சூழல் மற்றும் தனிநபர் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தடைச்சுவர்கள் என்பன காரணமாக இருக்கலாம். இந்தக் காரணிகள் தொடர்பாகவும், இது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் ஏன் நாம் உணர்வுகளை மறைத்து வைத்துக் கொள்கிறோம் என்பதை “இன்னொரு பிரபஞ்சத்தில்” சொல்லவுள்ளேன். நாம் உணர்வுகளின் சொந்தக் காரர்கள்..

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s