மொழி என்பது நாம் நினைத்ததை இன்னொருவருக்கு நினைத்த வகையிலேயே யதார்த்தமாக சொல்வதற்கு கிடைத்த அளப்பரிய சொத்து எனலாம். தாம் சொல்ல வந்த விடயத்தை பொருத்தமான முறையில் சொல்லத் தெரியாமல் அதனை மற்றவர்களுக்கு புரிய வைக்கப் போய் ஆயுளின் அரைவாசியை இழந்தோர் பலர். மொழியின் இலகுவான பயன்பாட்டை உணராதவர்கள் அவர்கள்.
ஒரு மொழி நபருக்கு நபர் வேறுபடுவதில்லை. ஆதலால், மொழியை புரிந்து கொள்பவர்கள், பயன்படுத்துவர்கள் ஆகியோரிடம் காணப்படும் மொழி தொடர்பான அறிவு இங்கே இருபட்சத் தெளிவுக்கு ஆதாரமாகிறது. கனவுகளை காரியமாக்கப் போவதை விட, விபரித்துச் சொல்வதில் சுவாரஸ்யம் இருக்கும். காரியமாவதற்கான துப்பும் கிடைக்கும். விபரிப்பில் அத்துணை விசேடம் உள்ளது.
ஒரு விடயத்தை விளக்கப் போய், அது மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் இன்னொரு வகையாக இருக்கும். ஏதோவொன்று நீங்கள் கேட்க, மற்றவர் அதற்கு சம்பந்தமில்லாத ஏதோவொரு பதிலைச் சொல்லும் நிகழ்வுகள் நாளாந்தம் நடந்தேறும் உண்மைச் சம்பவங்கள்.
இந்தச் சொல்லிலேயே நீங்கள் வாசிக்கத் தொடங்கி, நான் எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என நீங்கள் திக்கு முக்காடலாம். ஆரம்பம், முடிவு என்பன அர்த்தப்படுத்தப்படாமல் சொல்லப்படும் விடயங்களையும், ஆரம்பம் தெரியாமல் ஒரு விடயத்திற்கு தொடக்க வரைப்பிலக்கணம் சொல்லும் ‘பில்ட் அப்’ மன்னர்களையும் நீங்கள் சந்திந்திருக்கக்கூடும்.
காதல் கடிதம் எழுதப்போய், கடைசியில் அது கல்லூரி விடுமுறை கோரல் கடிதமாகிப் போன அனுபவங்களை அடைந்தவர்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். மொழி – சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிறையப் பேர் அனுப்பும் குறுஞ்செய்தியாம் SMS களே புரிந்து கொள்வதற்கே அவர்களுக்கே தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தி அதன் அர்த்தம் கேட்க வேண்டிய அவலமுள்ளது கொடுமையான நிலைதானே!
எண்ணங்களும் ஆசைகளும் வெளிப்படுத்தப்படும் போது, தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். எது சொல்ல வேண்டும் என்றே தெரியாமல், எதுவோ சொல்வதாக சொல்லுகின்ற நிலை கவலைக்குரியதே! மொழி எப்போதும் இலகுவானதே! நாம் அது தொடர்பில் கொண்டுள்ள ஆர்வத்தின் அளவில் அது வலிமை இழந்து போய் விடுகிறது.
காதலானாலும் கவிதையானாலும் வாழ்க்கையானாலும் அங்கு மொழி தான் முதன்மை பெறுகிறது. அர்த்தத்திற்கு அழகிய அர்த்தம் சேர்க்கிறது.
பென்சிலோடு ஒரு பேச்சு
நமக்குத் தெரிந்தது இது என்பதை விட, எமக்கு தெரியாதவை எவையென தெரிந்து கொள்ளுதலே வாழ்வின் ஒளி என “தெரியாது என்பதைத் தெரிந்திருத்தல்” என்ற என் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பலபேருக்கு தெரிந்த விடயங்களிலேயே தெளிவில்லாமல் இருப்பது இன்னொரு கொடுமை.
சடப்பொருள்களின் வாழ்க்கையின் அவத்தைகள், சிலவேளை எமது வாழ்வுக்கான பாடமாய் மாறி அழகாக அர்த்தம் சேர்க்கும். எழுத்துக்களை எழுதத் தொடங்க நான் முதன் முதலில் பாவித்தது பென்சில் தான். அது மிகவும் விலை குறைந்த பொருளாகவே யாவரும் அறிந்தது. அது பற்றிய இந்த நீதிக் கதை என் மனதை விகசித்தது.
பென்சிலை உற்பத்தி செய்த வியாபாரி பென்சிலொன்றை எடுத்து உனக்கு ஐந்து விடயங்கள் சொல்கிறேன். அவற்றை ஒருபோதும் மறக்காமல் எப்போதும் ஞாபகப்படுத்திக் கொள். அப்போதுதான் உலகிலேயே உன்னதமான பயனுள்ள பென்சிலாக நீ ஜொலிக்க முடியுமெனக் கூறினான்.
“நீ இன்னொருவனின் கையில் தங்கியிருப்பதாலேயே உன்னால் பல உன்னதமான செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும்”.
“உனக்கு வலிகளைத் தரும் அளவில் நேரத்திற்கு நேரம் உன் கூரானது தீட்டப்படலாம். அது நீ உயரிய பென்சிலாக உருவாகக் கட்டாயம் தேவை”.
“நீ எழுதும் தவறுகளை உன்னால் திருத்திக் கொள்ள முடியுமாக இருக்கும்”
“உனக்கு உள்ளே இருப்பதுதான் உனது மிக முக்கியமான பகுதியாகும்”
கடைசியாக, “நீ எந்த மேற்பரப்பில் பயன்படுத்தப்பட்டாலும், அங்கே உனது சுவட்டை பதிய வேண்டும். எந்த நிலையானாலும், நீ எழுதுவதை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்” என ஐந்து விடயங்களை அழகாக சொல்லி முடித்து பென்சிலைப் பெட்டிக்குள் பொதி செய்தான் வியாபாரி.
பென்சிலும், தனது நிலையை உணர்ந்து காரியத்தில் இறங்க திடசங்கல்பம் பூண்டு கொண்டது.
பென்சில் போன்றே நாமும் இருக்கிறோம். “இறைவனிடத்தில் எம்மை வழங்கி, மற்றவர்கள் நாம் கொண்டுள்ள ஆற்றல்களின் நிலையால் பலனடைய வேண்டுமென எண்ணும் போதே, எம்மால் உன்னதமான செயல்களை மேற்கொள்ள முடியும்.
வாழ்க்கையில் வலிகள் இல்லையென்றால், உணர்ச்சிகளற்ற நிலையென்று தான் அர்த்தம். வலிகள் தான் வாழ்க்கையின் உயிர்ப்பைச் சொல்லி நிற்கும். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிடையே பயணிக்கும் போதே எம்மை நாம் வலிமை பொருந்தியவர்களாக மாற்றிக் கொள்ளலாம். பட்டை தீட்டப்படாத மாணிக்கமே சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதில்லையே!
காலவோட்டத்தில் நாம் செய்யும் தவறுகள் என்பவை, திருத்தப்பட வேண்டியவைகளே! தவறுகள் அனுபவம் எனும் ஆசானைத் தருவது அற்புதமான விடயம் தான். தோல்விகள் சந்திக்கப்படும் போதே வெற்றி என்கின்ற விடயமொன்று காத்து நிற்கிறது என்ற தெளிவு தோன்றும்.
எமக்குள் நாம் கொண்டுள்ள ஆற்றல்கள், திறமைகள் என்பவையே எம்மை மற்றவர்களிடையே கொண்டு சேர்க்கும் அழகிய அம்சங்கள். அதுதான் எமது சுவாசத்திற்கு சுவடு கொடுக்கிறது. வார்த்தைகளுக்கு வாலிபம் சேர்க்கிறது.
எங்கு சென்றாலும் நாம் எமது சுவடுகளை பதித்துச் செல்வதற்கே ஆர்வங் கொள்ளல் அவசியம். எந்த நிலையிலும், வாழ்க்கையின் சுவாசத்திற்கு அர்த்தம் கொடுக்கும் ஆராதனையை தொடர்ந்து கொண்டே இருக்க முயல்தல் நன்றானது. நம் வாழ்க்கையின் இன்றைய நிமிடங்கள், பிரிதொரு காலத்தில் வாழப்பட இன்று நாம் செய்கின்ற செயல்களே ஆதாரம்!
பென்சிலாக வேண்டும். வலிகள் தாங்க வேண்டும். வளர்ச்சிகள் மேலோங்க வேண்டும்.
என் மன வானில்
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். மனதில் நான் எண்ணுவதே, நான் தான். ஈற்றில் அதுவே நானாகிவிடுகிறது.
சாதனைகள் படைக்க வேண்டுமென்ற நினைப்பில் எப்போதும் தம்மை ஆட்படுத்திக் கொள்வோர்கள் சாதனையாளர்களாகவே உருவாகி விடுகிறார்கள். தமது எண்ணங்களை அழகாகச் சொல்கின்ற மொழி ஆளுமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்றால் அது பொய். ஒவ்வொருவரும் மொழியைப் பயன் படுத்தும் நிலையில்தான் அது புடம் போடப்படுகிறது.
மொழிப்பயன்பாடு என்பது வாழ்க்கையின் பல நிலைகளில் அர்த்தம் சேர்க்கும் ஆதாரம் என்றே நான் சொல்வேன். எமது சுவடுகளை வரலாறு சொல்ல வேண்டுமானால், மொழியை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்ற வழி தெரிய வேண்டும்.
நீங்கள் விசேடமானவர் தாம். உங்கள் அழகிய செயற்பாடுகள் பூமியில் மலர்வனங்களைத் தோற்றுவிக்க முடியும். பிறந்ததன் பலனை உலகில் நிலைநாட்டும் சக்தி உங்களுடையதே! ஒருபோதும் நீங்கள் எதையும் தொலைத்துவிட்டதாக கனவு கூட கண்டுவிடாதீர்கள். நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமுள்ளவை.
அது சரி.. ‘நான் பிடித்த முயலும் அதன் மூன்று கால்களும்” என்ற தலைப்பு இருக்கிறது. என்ன மேட்டரை இன்னும் காணலையே என்றல்லவா கேட்க நினைக்கிறீர்கள். தலைப்பொன்றை நச்சென்று வைக்கலாம் என்று யோசித்ததில் உதித்தது. இந்த மரபு வழியாக வரும் சொற்றொடருக்கு பல அர்த்தங்கள் உண்டு. அது எதுவுமே இந்தப் பதிவோடு எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஒரு பரிசோதனை தலைப்பு முயற்சி. எப்படியுள்ளதென சொல்லியனுப்புங்கள்.
இற்றைப்படுத்துகை: “நான் பிடித்த முயலும் அதன் மூன்று கால்களும்” என்ற தலைப்பே இப்பதிவில் தலைப்பாகவிருந்தது. பரிசோதனை தலைப்பு முயற்சியாக இதனை பதிவிட்டேன். இம்முயற்சி எப்படியுள்ளதென நான் கேட்டிருந்தேன். அதற்கு நண்பர்கள் மற்றும் எனது வலைப்பதிவு வாசகர்களாகிய நீங்கள் தந்த மறுமொழிக்கமைய இந்தத் தலைப்பு இப்பதிவுக்கு பொருந்தாது என்ற முடிவுக்கு நானும் வந்தேன். பலரும் தலைப்புகளை இப்பதிவிற்கு பரிந்துரை செய்திருந்தார்கள்.
அவற்றில், “சொன்னது சரிதானா..? என்ற தலைப்பு எனக்கு பிடித்துப் போனது. இந்தத் தலைப்பை பரிந்துரை செய்த ருஷாங்கன் ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். (2009.05.05)
– உதய தாரகை
மிகவும் அருமை.
//சாதனைகள் படைக்க வேண்டுமென்ற நினைப்பில் எப்போதும் தம்மை ஆட்படுத்திக் கொள்வோர்கள் சாதனையாளர்களாகவே உருவாகி விடுகிறார்கள். தமது எண்ணங்களை அழகாகச் சொல்கின்ற மொழி ஆளுமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்றால் அது பொய். ஒவ்வொருவரும் மொழியைப் பயன் படுத்தும் நிலையில்தான் அது புடம் போடப்படுகிறது.//
நூறு சதம் உண்மை.
நன்றி முக்கோணம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை