எண்ணம். வசந்தம். மாற்றம்.

டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்

சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.

உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உண்டு.

இந்த நிலைக்கு ஆங்கிலக்காரன் Compassion  என்ற சொல்கொண்டு அழைப்பான். இந்தச் சொல்லின் கருத்தாக a deep awareness of and sympathy for another’s suffering என்பது அமையும். ஒரு மனிதனின் துன்பங்கள் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வும் கவலையுமே இந்த நிலையாகும்.

tear

துன்பங்களைப் பற்றி சொல்பவர்கள், அதைக் கேட்பவரின் கவனத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வது கிடையாது. அவர்கள் அந்த விடயங்களைச் சொல்லும் பாங்கு, கேட்பவர்களைக் கவர்ந்து விடுகிறது. நான் சில நேரங்களில், துன்பங்களைப் பற்றி பகிரும் நிலையில், கேட்டவர்கள் அதனால் கொள்ளும் கவலையை போக்க, அவர்களைத் தேற்றவும் செய்திருக்கிறேன்.

பகிர்தலில் எப்போதும் சுமைகள் கனமிழக்கின்றன.

இன்று மாலை “உயரத்திருந்து யாசித்தல்” என்ற சித்தார்த்தின் பதிவை வாசித்தேன். வறுமையின் கொடுமைகளை சங்ககால இலக்கியத்தின் செழிப்பில் பதிந்திருந்தார். வாசிக்கும் போது, மெய்சிலிர்த்துப் போனேன். கவலைகளை வரவைக்க வேண்டுமென யாரும் தங்கள் துன்பங்களை பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால், அந்தப் பகிரல்கள் ஒருபோதும் கவலையை வரவைக்க மறந்துவிடுவதுமில்லை.

அந்தப் பதிவில் காணப்பட்ட கவிதையொன்று என் நெஞ்சத்தைத் தொட்டது. கண்களுக்கு ஈரம் கொடுத்தது. எழுத்துக்களின் வலிமையையும் வலியையும் உணர்ந்த இன்னொரு தருணமாக இதை உணர்ந்தேன்.

அக்கவிதையை இங்கும் தரலாமென நினைத்தேன். சுயம்புலிங்கத்தின் “தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்” என்ற கவிதையது.

நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.
– மு. சுயம்புலிங்கம்.

இந்த வறுமையின் வறட்சி, கண்களின் வறட்சியை கட்டாயப்படுத்தி போக்கிறதல்லவா? அழுது விட்டேன் நான்.

எனக்குத் துன்பமான நிலைகள் ஏற்பட்டபோதும், அதனை எனக்கு நெருங்கியவர்களுடன் சொன்னால் அவர்கள் மனம் என்ன பாடு படுமென எண்ணியே பலநேரங்களில் துன்பங்களை வாடகைச் சிரிப்பினால் மறைத்த அனுபவங்கள் எனக்கு இருக்கிறது.

அந்தநேரங்களில், எனது நாட்குறிப்பேடு எனது நெருங்கியவனாக மாறிய நாட்கள் தான் அதிகம்.

இது இப்படியிருக்க, இன்னொரு வலைப்பதிவில் கீழுள்ள பொத்தானைக் கண்டேன். ஏற்கனவே, நிறத்தில் அவளின் பொத்தான் பற்றி சொல்லியுமிருக்கிறேன் என்பது வேறு விஷயம் (யாரந்த அவள்..?). ஆனால், அந்த பொத்தானுக்கும் இந்த பொத்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இணையத்தளங்களை உருவாக்கும் அனுபவம் அல்லது அறிவு உங்களுக்கிருந்தால் கீழுள்ள நிழற்படத்தில் காணப்படும் பொத்தானின் காதலின் சுவையைப் பற்றி அழகாகவே அறிந்து கொள்வீர்கள். Romance என்ற சொல்லிற்கு பொத்தானிலுள்ள வெறும் வசனம் கொடுத்த அர்த்தம் கண்டு சிலிர்த்துப் போனேன்.

button_html_css

சின்னச் சின்ன விடயங்கள் வாழ்க்கைக்குத் தரும் உணர்வுகள் எல்லாமே ரசிக்கப்பட வேண்டியது தான். அது மகிழ்ச்சியோ துக்கமோ என்பதெல்லாம் துணையான கேள்விகள் மட்டுந்தான்.

பொத்தானின் காதல் சுவை காண, இணையத்தளம் செய்வது பற்றிய அறிவு வேண்டிக்கிடக்குது. என்ன கொடுமை சார் இது என்றல்லவா யோசிக்கிறீர்கள். காதலும் சிலவேளை கஷ்டமானது தான் புரிவதற்கு (அட.. உதய தாரகை தத்துவமெல்லாம் சும்மா அதிரடியாய் இருக்கே!!!).

திக்நக்ஹான் என்ற எழுத்தாளர் சொன்ன கூற்றொன்றை அண்மையில் வாசித்தேன். பிடித்திருந்தது. அதனை தமிழ்ப்படுத்தினேன்.

நீரிலோ அல்லது மெல்லிய காற்றிலோ நடப்பதை மக்கள் வழமையாக அதிசயமாக பார்க்கின்றனர். ஆனால், நீரிலோ, மெல்லிய காற்றிலோ நடப்பது அதிசயமேயல்ல. பூமியில் நடப்பதுதான் அதிசயமானது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ அதிசயங்களை நாம் வாழ்க்கையில் எம்மையறியாமலே சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். நீல வானம், வெண் முகில்கள், பச்சை இலைகள், சின்னக் குழந்தையின் ஆர்வமான கரிய கண்கள் – ஏன் நமது சொந்த இரு கண்கள். எல்லாம் அதிசயமே!!☻

அதிசயங்களே தொடர்கின்றன. நீங்கள் வாசிப்பதும் தான்!!

– உதய தாரகை

“டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்” அதற்கு 4 மறுமொழிகள்

  1. றம்ஸி Avatar
    றம்ஸி

    //கால் நீட்டி தலைசாய்க்க
    தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
    திறந்தவெளிக் காற்று
    யாருக்கு கிடைக்கும்.//
    ஒரு வகையில் உண்மைதான். சிலவேளைகளில் அவர்களுக்கான அப்பம் காலடி தேடி வருகிறது. ப்ளாட்போம் காரர்களுக்கு நிலத்தின் எல்லைகள் வரையறுக்கப் படுவதில்லை. விரும்பிய இடங்களில்லாம் தூங்கி எழுகிறார்கள். திருடர் பயம் இல்லை. உண்மையில் யாருக்குக் கிடைக்கும் இந்த சுதந்திரம்? அவர்கள் சந்தோசமாய்த்தான் இருக்கிறார்கள்.

    நமது வறுமை நமக்குள் நம்மால் மறைக்கப்படும் போதுதான் அதன் வலி நம்மை வாட்ட வருகிறது. உள்ளதை உள்ளபடி அப்படியே வெளிப்படுத்திவிட்டால் பிரச்சினை முடிகிறது. சுயகெளரவம் தேடித்தேடி பொய்யாக வாழ்ந்து வாழ்ந்தே வாழ்வை தொலைத்தவர்கள்தான் வலியுடனேயே சாகிறார்கள். ரயில் வண்டிப் பிச்சைக்காரனைப் பார்க்கின்ற போதும் பொய்த் தம்பட்டம் அடிக்கின்றவனைப் பார்க்கின்ற போதும் நம்முள் எழும் உணர்வுகள் வேறானவை. மனிதனாய்ப் பிறந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் மனிதநேயம் மனதின் எங்காவது ஒரு மூலையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் அழிகின்றவரை ப்பளாட்போம் காரன் சந்தோசமாய்த்தான் இருப்பான்.

    அன்பேசிவம் படத்தில் கூட நடிகர் கமல்ஹாஸனின் குரலில் இப்படியொரு வசனம் வரும்.

    அடுத்த வினாடி ஒழித்து வைக்கப்பட்டிருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம். ஆச்சரியங்கள் நிறைந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பயணிக்கிறேன். உங்களைச் சந்தித்தது கூட அப்படியொரு ஆச்சரியம்தான்.

    இதற்கும் திக்நக்ஹான் சொன்னதற்கும் ஒற்றுமையை உணர்கிறேன்.

  2. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    வாங்க றம்ஸி.

    //சுயகெளரவம் தேடித்தேடி பொய்யாக வாழ்ந்து வாழ்ந்தே வாழ்வை தொலைத்தவர்கள்தான் வலியுடனேயே சாகிறார்கள்.//

    சரியாகச் சொன்னீங்க..

    வாழ்க்கையின் வேதனைகளின் பகிர்வின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லியதில் அழகைத் தாண்டிய அனுபவம் கண்டேன். உங்கள் விரிவான கருத்துக்கு நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  3. cherankrish Avatar
    cherankrish

    இப்பிடிக்கவிதைகளை ஓருவர் விமர்சித்தபின் வாசிப்பதில் அதன் கனம் இன்னும் கூடிவிடுகிறது.பதிவுகளை விமர்சிப்பதையே நீங்கள் பதிவுகளாகப்போடலாமே?
    இங்கு நிறைய விமர்சனம் தேவைப்படுகிறது.

    1. உதய தாரகை Avatar
      உதய தாரகை

      நன்றி சேரன் கிறிஷ்.

      வருகைக்கும் கருத்துக்கும்.

      தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

      இனிய புன்னகையுடன்,
      உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்