எண்ணம். வசந்தம். மாற்றம்.

வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய என் குறிப்புகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாம் வாழ்கின்ற உலகின் அன்றாட நடவடிக்கைகள் நாளுக்கு நாள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிட்டது. இதன் காரணமாக ஆசையாகப் பாவித்த பொருள்கள் பலவும், வழக்கொழிந்து போவதும் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு வழங்கொழிந்து செல்கின்ற பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும், அவர்களின் முன்னோர்கள் அன்றாடம் ஆசையோடு பயன்படுத்திய பொருள்கள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவென்றே கருதுகிறேன்.

கடதாசியில் வள்ளம் செய்ய இந்தத் தலைமுறையின் சிறுவர்களுக்குக் கூட தெரியாதது கண்டு நான் வியந்திருக்கிறேன். சிறு வயதில் கடதாசி வள்ளம் செய்து காட்டிய போது, அதைப் போலவே நானும் செய்ய வேண்டுமென செய்யத் தொடங்கி ஒவ்வொரு படிமுறைகளையும் திரும்பத் திரும்பக் கேட்டு அதனை ஈற்றில் செய்து முடித்தபோது, ஏற்படுகின்ற வெற்றிக்களிப்பை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த சிறுவர்கள் இழந்திருக்கிறார்கள். இங்கு கடதாசி வள்ளம், கடையில் வாங்கப்படும் றப்பரினால் செய்யப்பட்ட வள்ளமொன்றினால் பிரதியிடப்பட்டிருக்கிறது.

“இன்று மழை பெய்தது. கடதாசி வள்ளம் எனக்காக செய்ய அம்மா ஆசைப்பட்டார். இருந்தாலும் செய்கின்ற முறையை மறந்து போனார். நான் இணையத்தில் எப்படி கடதாசி வள்ளம் செய்வது எனத் தேடினேன். காணொளி கண்டேன். அது போன்றே செய்தேன். அம்மாவோடு சேர்ந்து கடதாசி வள்ளம் விட்டு களிப்புற்றேன்” என்கின்ற மறுமொழியை இணைய காணொளிகளின் கதம்பமான YouTube யில் கண்டபோது, இனம் புரியாத மகிழ்ச்சி என்னுள்ளே குடிகொண்டது.

சின்னச் சின்ன மகிழ்ச்சிகளுக்கான ஆர்வநிலைகள், இக்காலத்தில் செயற்கையாகச் செய்யப்பட்ட பொருள்களின் மூலம் பிரதியிடப்படுவது கவலையான விடயமாகும்.

உங்களுக்கு கீழுள்ள படத்தைப் பார்த்ததும் என்ன ஞாபகம் வருகின்றது? உங்களால் எத்தனை வருடங்களுக்கு உங்கள் ஞாபக அலைகளை பின்னோக்கி நகர்த்த முடிகிறது? இது தான் பசுமையான நினைவுகள்.

இந்த நினைவுகள் தரும் மகிழ்ச்சி பற்றிய வாசணை கூட இல்லாமல் இன்றைய சிறார்கள் வளர்க்கப்படுகின்றார்கள். விளையாட்டுப் பொருள்கள் செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் தான் பிற்காலத்தில் இந்தச் சிறுவர்களுக்கு பசுமையான நினைவுகளோடு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு.

இந்த ஓலைப் பம்பரத்தின் படத்தை நான் அண்மையில் Facebook இல் பகிர்ந்தபோதும் பலரும் தங்கள் பங்கிற்கு ஞாபகம் பற்றிய விடயங்களை பகிர்ந்து கொள்ள ஆர்வங்காட்டினர். பசுமையான நினைவுகள் என்றும் பசுமையானதே என்பதை அவர்களின் ஆர்வம் எனக்குச் சொன்னது. அந்த மறுமொழிகளுள் “ஞாபகம் வருதே” என்ற பாடலின் மெட்டிற்கு ஏற்றாற் போல், ஒரு நண்பர் ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டார். அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

“ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..!
தென்னை ஓலையில் ஈர்க்கில் முறிச்சி…
தென்னை ஓலைய இழுத்து மடிச்சி…
நடுவில ஈர்க்கில குத்திக் கொண்டு
கையில ஈர்க்கில பிடிச்சிக் கொண்டு…
றோட்டு றோட்டா சுத்தி வந்தது..
இப்பவும் எனக்கு ஞாபகம் வருதே!!”

கடந்த வார நிறத்தின் புதன் பந்தலில் கசட் பதிவு கருவிக்கும் பென்சிலுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி சொல்லியிருந்தேன். வழக்கொழிந்து சென்ற சாதனங்களில் கசட் பதிவு கருவியைப் போல், பல கருவிகள் அடங்கும். அவை எவை? அவை எவ்வாறு வேலை செய்யும்? எப்போது வழக்கொழிந்து போயின? என்பவற்றை எல்லாம் அறிந்து கொள்ள ஒரு அருங்காட்சியகம் இருந்தால் எப்படியிருக்கும்?

“வழக்கொழிந்த பொருள்களின் அருங்காட்சியம்” என்ற பெயரில், வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய விடயங்களைச் சொல்லும் YouTube Channel ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கு வழக்கொழிந்த பொருள்கள் பற்றிய காணொளிகள் அழகிய இடைமுகத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சுவை.

கடந்த வாரத்தின் பதிவில் நான் சொன்ன கசட் பற்றிய குறித்த அருங்காட்சியகத்தின் காணொளி இது. அதில் பென்சிலின் தொடர்பு பற்றி சொல்லப்படுவது கவிதை.

உங்களின் பசுமையான நினைவுகளுக்கு கொஞ்சம் உங்களோடு இணைந்து பாட அவகாசம் கொடுங்கள்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்