இன்னொன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மாதமொன்று தொடங்கி, நிறைவாகிப் போவதற்கு எடுக்கின்ற காலம் குறைந்து கொண்டு போவது போன்ற உணர்வு எனக்குள் எழுகின்றது. பருவ காலங்கள் மாறி வரும் நிலைகளைக் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைத்திருக்கிறது.

மழை பெய்யும் நள்ளிரவில் நான் என்ற பதிவில் பருவ மாற்றங்களின் பார்வையில் உங்களை ஒருதரம் அழைத்துச் சென்ற ஞாபகமெனக்கிருக்கிறது.

பருவங்கள் வேகமாக மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன்.

மரத்தின் பாலுள்ள இலைகள் பொன்னிறமாகி, பூமியினை நாடிவிட கிளைகளை விட்டகழும் அழகியலும் இந்தக் காலத்தில்தான் நடக்கும். வெவ்வேறு நிறங்களில் இலைகள், மரத்தின் கீழான மேற்பரப்பிற்கு கம்பளம் விரித்திருக்கின்ற அழகு — இயற்கையின் கொடை.

இந்த இலையுதிர் காலத்தில் இருமருங்கிலும் மரங்கள் கொண்ட சாலையொன்றில் நடந்து செல்கின்ற அனுபவம் — கலை.

கொஞ்ச நாளில், இலைகளின் நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட பூமிக்கம்பளத்தைப் போர்த்திக் கொள்ள பனியும் வந்து விழும். பனிவிழும் அழகு – ஆனந்தம்.

நிறங்களையெல்லாம் போர்த்திக் கொண்டு, பரந்த பரப்புகளெல்லாம் வெள்ளை நிறத்தை தரக்கூடிய பனியின் இயல்பு — விஞ்ஞானம்.

கோடை வந்தவுடன், வெயில் பற்றிக் குறை கூறும் மனிதர்களைப் போல், பனிவிழும் நாட்கள் தொடங்கியவுடனும் பனியைப் பற்றி முறையிடுபவர்களையும் இந்த ஆண்டும் நான் சந்திப்பேன். முறைப்பாடு — அவர்களின் மூச்சு.

கனவுகளின் முகவரிகளாகவே, நான் பருவகால மாற்றத்தைக் காண்கின்றேன்.

கனவுகளின் பரிவர்த்தனையில் பல உன்னத நிலைகள் எய்தப்படுவது போல், பருவகால மாற்றங்கள் பற்றிய எமது புரிதல்களின் விரிவாக்கத்தில் மட்டுந்தான் அழகிய நாட்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், “எனக்கு அது கிடைக்கவில்லை. இது கிடைக்கவில்லை” என்று அவள் சொல்கின்ற போதெல்லாம், கோபாலு கேலியாகச் சிரிப்பான். எதிர்பார்ப்புகளை உங்களால் சந்திக்கின்ற சக்தியில்லாவிட்டால், அதுவும் உங்களை சந்திக்காமலேயே போய்விடும்.

அடுத்த நிமிடத்தின் பருவமாற்றம், ஆயிரம் புதிய விடயங்களை சூழலுக்குத் தரலாம். ஆனால், நீ உன் சூழலில், உன் உலகத்தில் காண எண்ணுவது என்ன? என்பதை ஆராய வேண்டும். உனது கனவு — போசணைச்சத்து.

அந்தக்கனவின் உயிர்ப்பில்தான், பனியோ, வெயிலோ உன் சார்பான உலகத்தில் அர்த்தம் பெற்றுக் கொள்ளும். சூழலில் நிகழும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகத்தான் நாம் எமது நிலையைத் தக்கவைத்துள்ளோம் என்பதை பலரும் விபத்துக்கள் ஏற்பட்டால் மட்டுமே அறிந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு என ஆயிரமாயிரம் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் அழகான சின்னச் சின்ன சம்பவங்களுக்கு முக்கிய இடம் தராததால், கனியிருந்தும் காய் கவர்கின்றோம்.

மாதங்கள் வேகமாக மாறிக்கொண்டிருப்பது போல், மனிதர்களும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள், இன்னொன்றாக.

– உதய தாரகை

பதிவில் இணைக்கப்பட்டுள்ள நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

One thought on “இன்னொன்று

  1. இந்த பதிவின் கடைசி இரண்டு வரிகளும் மிகவும் அர்த்தமானவை. ஆனந்தம் நிறைந்த பல அதிசயங்களை உள்ளடக்கியவை என்றே நான் கருதுகிறேன். வரவிருக்கும் பதிவுகளில் அவற்றையும் நிறத்தில் எதிர்பார்த்திருக்கும் நிரப்பிரியர்களில் ஒருவன் நான்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s