எண்ணம். வசந்தம். மாற்றம்.

எங்கே போகிறீர்கள்?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வாழ்வின் ஒவ்வொரு நொடியினதும் நிகழ்வுகளின் மிச்சங்களை அகத்துள் சேகரித்து அன்போடு அரவணைத்துக் கொள்வதற்குள் அடுத்த நாளும் அதன் நிகழ்வுகளும் உடனேயே வந்து ஒட்டிக் கொள்கிறது.

இங்கு கனவுகளை இரையாக்கிவிட ஓடுகின்றவர்களாகவே எல்லோரையும் காண வேண்டியுள்ளது. ஒருவனின் கனவு — இன்னொருவனுக்கு ஆச்சரியம் அல்லது நகைப்பு அல்லது கேள்வி என பல தன்மைகளை வழங்கி நிற்கிறது.

அந்தச் செம்மறியாட்டை மேய்க்கின்ற இடையனும் கனவுகளைத் தேடுகின்றவன் தான். கனவுகளின் ஈற்றில் காணும் பொக்கிஷத்தை நோக்கிய அவனின் பயணம் தொடர்கிறது.

அவனின் பயணத்தில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களை பல்வேறான சம்பவங்களின் வடிவில் சந்திக்கிறான். சம்பவங்கள் அத்தனையும் ஏகப்பட்ட அதிர்வுகளை அவனுக்குள் சொல்லிச் செல்கிறது.

அன்பு, சந்தர்ப்பம், ஆர்வம், அபாயம், அனர்த்தம் என ஏகப்பட்ட உணர்வுகளின் வீச்சில் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு, தன் சார்பான வாழ்வியலின் வினோதத்தை உணர்ந்து கொள்கிறான். உலகம் எப்படிப்பட்டது என்பதுவும் அவனின் பயணத்தில் அவனுக்கு புரியத் தொடங்குகிறது.

கனவுகளின் “புதையலைத்” தேடிச் செல்கின்ற இவனின் பாதையில் வருகின்ற தடங்கல்கள் ஒவ்வொன்றும் புதையல் கிடைக்கின்ற மகிழ்ச்சியையும் வாழ்வின் பாடத்தையும் அவனுக்கு சொல்லிவிட மறக்கவில்லை.

பவுலோ கோயிலோவின் “தி அல்கெமிஸ்ட்” என்ற புதினத்தில் வரும் இடையனின் வாழ்க்கை நிலை இயல்பு தான் நான் மேலே சொல்லியிருப்பது.

இங்கு எல்லோரும் எங்கோ போகிறார்கள் என எண்ணிக் கொண்டு, எங்கோ போகிறார்கள். “எங்கு போகிறோம், எனத் தெரியாமல் எங்கே போவது?” என கோபாலு திடீரெனக் கேட்கச் சொன்னான்.

எது வேண்டுமென்ற தெளிவுதான், அடுத்த வினாடியின் செயற்பாட்டின் தூண்டுகோல்.

“நீ ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென வெகுவாக ஆர்வமும் ஆசையும் கொள்வாயெனில், இந்த மொத்த பிரபஞ்சமே, அதை நீ பெற்றுக் கொள்வதற்காக உனக்கு உதவிட வந்துவிடும்” என்பதைச் சொல்வது தான் இந்தப் புதினத்தின் சாரம்.

எது வேண்டுமென்ற தெளிவான தீர்மானத்தின் இயல்பில்தான் பிரபஞ்சத்தின் உதவிக்கான சமிஞ்சை எமக்குக் கிடைக்கிறது.

நேரம் கிடைக்கும் போது, முடிந்தால் இந்தப் புதினத்தை வாசியுங்கள். ஆனாலும், உங்களின் ஒவ்வொரு நிமிடத்தின் உயிர்ப்பிலும் கனவுகளின் தேடல் பற்றிய தேவை இருக்கும் போது, நீங்களும் அப்புதினத்தில் வரும் அற்புதமான கதாநாயகன் தான்.

“கதாநாயகனாகக் காத்திருக்க வேண்டாம். உன் இருப்பின் அடையாளத்திற்காக நீ ஆற்றும் அனைத்தும் உன்னை ஏளவே கதாநாயகனாக்கிவிட்டது. காத்து இருப்பதல்ல, வாழ்க்கை. வாழ்வதே வாழ்க்கை” என அவள் சொல்லச் சொன்னாள்.

– உதய தாரகை

தொடர்புடைய பதிவு: எதை நீ துரத்துகின்றாய்?

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்தும் இங்கிருந்தும் எடுத்தாளப்படுகிறது.

“எங்கே போகிறீர்கள்?” அதற்கு 2 மறுமொழிகள்

  1. திண்டுக்கல் தனபாலன் Avatar
    திண்டுக்கல் தனபாலன்

    /// நேரம் கிடைக்கும் போது, முடிந்தால் இந்தப் புதினத்தை வாசியுங்கள். ஆனாலும், உங்களின் ஒவ்வொரு நிமிடத்தின் உயிர்ப்பிலும் கனவுகளின் தேடல் பற்றிய தேவை இருக்கும் போது, நீங்களும் அப்புதினத்தில் வரும் அற்புதமான கதாநாயகன் தான். ///

    அருமை… தொடர வாழ்த்துக்கள்… நன்றி

  2. Muszhaaraff Avatar
    Muszhaaraff

    கனவுகள் என்பது ஆசையின் இன்னுமொரு வடிவம் எனலாம். ஆசை என்பதோ வெற்றிக்கான அடிநாதம் . புத்தர் ஆசையைத் துறக்கச் சொன்னார் என்பதும், ஆசை அழிவிற்கு வித்திடும் என்பதும் வெறும் புனைவுகளாகவும், சில தவறான புரிதல்களாகவுமே இருக்கின்றன. ஆசைப்படாத ஒரு சாதனையாளனையாவது காண்பிக்க முடியுமா?. ‘புத்தர் ஆசையைத் துறக்க ஆசைப்பட்டார்’ என்றுதான் சொல்ல முடியும். ஆசைகள் எமக்கும், பிறருக்கும் தீங்கிழைக்காவண்ணமும், தீய உணர்ச்சிகளின் வழித்தொடரலாக இல்லா வண்ணமும், மாறாக நல் உணர்ச்சிகளின் வழித்தொடரலாக, கனவுகளின் திசை நோக்கியதாக இருக்கும் போது அவ்வாசை அர்த்தமுள்ளதாகிறது. ஒரு ஆசையானது மீண்டும், மீண்டும் ஆழ்மனதால் அசைபோடப்படும் தீவிர ஆசையாக மாறினாலன்றி ஆசை நிறைவேறுவதும், கனவு மெய்ப்படுவதும் சாத்தியப்படாது. கனவு காண்போம். கனவு மெய்ப்பட ஆசைப்படுவோம். ஆசை நிறைவேற அதனை மீண்டும் மீண்டும் அசைபோடுவோம்.

    தாரிக்: தங்கள் எழுத்தில் வீரியமும், கருத்தில் வலிமையும் தெரிகிறது. மனம் பற்றியதான தங்களது தேடல்கள் பெறுதற்கரிய ஞானங்களைக் கண்டடைய வழிவகுக்கும் என நம்புகின்றேன். வாழ்த்துகள்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்