ஏமாளியா நீ?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒரு கல்லூரியின் மாணவன் ஒருவன் அவன் நம்புகின்ற ஒரு விடயத்தை ஆய்வின் மூலம் கண்டு கொள்ள முனைந்தான்.

அதற்காக அவன் தயார் செய்த ஆய்வின் வடிவம் இதுதான். “ஈரைதரசன் ஓரக்சைட்” என்ற ரசாயனத்தை சூழலில் பாவிப்பதை கட்டுப்படுத்த அல்லது முற்றாக அகற்றிவிட வேண்டுமென்ற யோசனைக்கு மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்பது தான். இந்த ரசாயனத்தை தடுக்கவிரும்புவோர் தங்கள் கையொப்பத்தையிட்டு உறுதி செய்யலாம்.

ஏன் இந்த ரசாயனம் தடுக்கப்பட வேண்டுமென்பதற்கான காரணங்களையும் அந்த மாணவன், ஆய்வில் பங்குகொண்ட அனைவரிடமும் விரிவாகச் சொன்னான்.

அவன் சொல்லிய காரணங்கள் வருமாறு:

  1. இந்த ரசாயனம், அதிகளவான வியர்வையையும் வாந்தியையும் உண்டு பண்ணும்.
  2. இந்த ரசாயனம், அமில மழையின் மிக முக்கியமான கூறாகும்.
  3. இந்த ரசாயனம், அதன் வாயுநிலையில் பாரதூரமான எரிகாயங்களை ஏற்படுத்தும்.
  4. இந்த ரசாயனம், மண்ணரிப்பினை ஏதுவாக்கின்றது.
  5. இந்த ரசாயனம், மோட்டார் வாகனங்களின் நிறுத்துகையை (brake) பலவீனப்படுத்துகின்றது.
  6. இந்த ரசாயனம், அதீத புற்றுநோயுள்ளவரின் புற்றுக் கலங்களில் காணப்படுகிறது.

illusion

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் 50 பேர். அதன் முடிவு வருமாறு:

43 பேர், இந்த ரசாயனத்தை பாவிப்பதில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் அல்லது சூழலிருந்து முற்றாக அகற்ற வேண்டுமென கையெழுத்திட்டனர். இன்னும் 6 பேர் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை என்று விலகினர். ஒருவர் மட்டுந்தான் இந்த “ஈரைதரசன் ஓரக்சைட்” என்கின்ற ரசாயனம் நாம் யாவரும் அறிந்த H2O என்ற ரசாயனப் பெயரால் வழங்கப்படும் நீர் என்பதை அறிந்திருந்தார்.

மாணவனின் ஆய்வின் கருதுகோள், இந்த ஆய்வின் பெறுபேற்றின் மூலம் நிரூபணமாகியது.

அறியாத விடயங்கள் பற்றிச் சொல்லப்படுகின்ற போது, அதனை ஆய்ந்தறிந்து கொண்டு காரியத்தில் இறங்க வேண்டுமென்கின்ற தன்மை பொதுவாகவே அரிதாகியுள்ளது. சொல்லப்படுவதெல்லாம், மந்திரங்கள் என நம்பப்பட்டுவிடுகிறது, இதனால் ஆய்ந்தறிதல் என்கின்ற நிலை அந்நியமாக்கப்பட்டுள்ளது.

சூழலில் அது நடக்கலாம், இது நடக்கலாம், இதனால் அது வரலாம், அதனால் இது வரலாம் என்கின்ற பல விடயங்கள் தான், ஆய்ந்தறிதல் எதுவும் இல்லாமல் தாரக மந்திரங்களாக, காட்டுத்தீயாக மக்களிடையே மக்களால் பரப்பி விடப்படுகிறது. பரவியும் விடுகிறது.

“எந்தளவில் நாம் ஏமாளிகள்?” என்பதே அந்தக் கல்லூரி மாணவன் மேற்கொண்ட இந்தச் செயற்றிட்டத்தின் தலைப்பு. ஆய்வின் முடிவு, இந்தக் கேள்விக்கு அழகிய விடையைக் கொடுத்துவிட்டது.

சொன்னவற்றையெல்லாம் வெறுமனே உடனே எளிதில் நம்பிவிடுகின்ற தகவு உன்னை விட்டும் மறைய வேண்டும். ஆய்தலின் பின்னர் தான் நம்பிக்கை என்பது துளிர் விட வேண்டும்.

“நீ மெய்யென நம்பியுள்ள பொய்கள்” பற்றி நிறத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

உலகம் திறந்தே கிடக்கிறது. ஆய்ந்தறிந்து கொள்ள ஆயிரத்தெட்டு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன. உன் நேரந்தான் இது.

“உன் கனவில், உன்னைத் தவிர வேறு யாராலும் மழை பெய்விக்க முடியாது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தொன்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s