உண்டியலும் காதலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.

நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.

நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.

“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.

நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.

கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.

ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.

“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.

அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.

அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.

அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.

உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.

நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.

பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு?

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.

Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.

அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன?

டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.

புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.

இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

1 thought on “உண்டியலும் காதலும்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s