எண்ணம். வசந்தம். மாற்றம்.

மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை

அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.

புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. “எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..” எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.

“குறைந்தது ஒரு நாட்டையாவது, பில் கேட்ஸால், தனது பணத்தால் விலைக்கு வாங்க முடியும்” என்றவாறு அவன் சொன்ன கருத்துக்கு விளக்கம் சொல்ல வழிகள் செய்தான் நண்பன். “ஆமா.. அவங்களால எவ்வளவோ முடியுது.. இதுகூட முடியாமப் போகுதா என்ன?” என்று எனது குறும்பான பதிலையும் அவன் சம்பாஷனைக்குள் சேர்த்துக் கொண்டேன்.

Forbes சஞ்சிகையானது, உலகத்தின் செல்வந்தர்களை பட்டியற்படுத்தும் வேலையை கச்சிதமாகவே செய்து கொண்டேயிருக்கிறது. அந்த சஞ்சிகையின் பட்டியற்படுத்தப்பட்ட முதல் 400 செல்வந்தர்கள், குறைந்தது ஒரு நாட்டையாவது விலைக்கு வாங்குமளவில் செல்வத்தைக் கொண்டுள்ளனர் என்பது வியப்பு.

பில் கேட்ஸின் மொத்த சொத்தின் மதிப்பு, உலகின் 140 நாடுகளை வாங்கிவிடும் அளவிற்கு விசாலமாம். பொலிவியா, உருகுவே போன்ற நாடுகள் இந்த 140 நாடுகளுக்குள் அடங்கியும் விடுகிறதாம் (நல்லா கெளப்புறாங்கய்யா.. பீதிய..).

கடந்த 12 மாதங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த வோரன் பபட் கூட, வட கொரியாவை விலைக்கு வாங்குமளவிற்கு தகுதி கொண்டுள்ளாராம் (ஆஹா.. என்னமா எல்லாம் யோசிக்கிறாங்கய்யா..)

பணத்தின் அளவில் கொண்ட மதிப்பால் இப்படியெல்லாம் Forbes சஞ்சிகை புள்ளிவிபரங்களை எடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியிருக்க முடியாது.

எப்போதோ கட்டுரையொன்றில், “அமெரிக்கர்கள் புள்ளிவிபரங்கள் எடுக்காத விடயமே இல்லை. பாதையால் நடத்து கொண்டு செல்கையில் பாப்கோர்ன் சாப்பிட்டுக் கொண்டு செல்வோர் எத்தனை பேர்? என்ற புள்ளிவிபரங்கள் கூட அங்கு சுடச் சுடக் கிடைக்கும்” என்று வாசித்திருக்கிறேன்.

பலவேளைகளில், பிரசினங்களைத் தீர்க்கக் கிடைக்கும் முதல் துப்பாக புள்ளிவிபரங்கள் இருப்பது யாருமே கண்டுகொள்ளாத உண்மை.

sculpture_cool

நாடுகளைப் பற்றிக் கதைக்கும் போது,  நேற்று திங்கட்கிழமை, ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டெண் வெளியிடப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது. எழுத்தறிவு, பாடசாலையில் சேர்தல், ஒருவருக்கான மொத்த தேசிய உற்பத்தி மற்றும் ஆயுள் எதிர்பார்க்கை போன்ற அளவீடுகளே இச்சுட்டெண் கணிப்பீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுட்டெண்ணின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு உன்னதமான நாடாக, நோர்வே தேர்வாகியுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ஐஸ்லாந்து ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.

182 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்பட்டியலில், இலங்கை 102 ஆவது இடத்திலும், 134 ஆம் இடத்தில் இந்தியாவும், 141 ஆவது இடத்தில் பாக்கிஸ்தான் இருப்பதுவும் கவலை.

இப்படி நாடுகளின் கோலங்கள் விரிந்து செல்ல, நாட்டின் பிரஜைகளின் அறிவின் எழுச்சிக்காய் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான தினமும் இன்றுதான் என்பது மகிழ்ச்சி. எனது வாழ்க்கையில் பல ஆசிரியர்களைச் சந்திந்துக்கொண்டிருக்கிறேன் (இன்னமுமா படிக்கிறீங்க..? “கல்வி கரையில. கற்பவர் நாள் சில.” என்று சும்மா யாரும் சொல்லியிருக்க மாட்டாங்களே!!??).

கசப்பாய் இருந்தபோதிலும், நோய் போக மருந்தை அருந்தியேயாக வேண்டும். பல ஆசிரியர்களினதும் அணுகுமுறைகள் என்னை புடம் போடச் செய்தலில் பங்கு பெற்றிருக்கிறது. அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் பற்றி எனது இன்னொரு பிரபஞ்சம் தொடரில், பட்டம் பறக்கும் இரகசியம் என்றும் ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்குக் காலம் வரும் என்றும் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன். இன்னும் சொல்வேன் (இன்னுமா..?!! சபா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!!!)

இன்னும் சிலரையும், நான் பாடசாலைகளில் சந்திந்திருக்கிறேன். அவர்கள் ஆசிரியர்கள் என அதிபர் சொன்ன போதுதான் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை, செங்கல் கொண்டு தலையில் அடிக்கும் ஆனால் சோர்ந்து விடவோ, நம்பிக்கையிழந்து விடவோ கூடாது (என்ன உதய தாரகை!! ரொம்ப பீலிங்ஸா எல்லாம் பில்ட்அப் கொடுக்குறீங்க…??). இது பற்றியும் இன்னொரு பிரபஞ்சம் தொடரில் சொல்லவுள்ளேன்.

சிற்பிகளை உருவாக்கும் சிற்பியாய் திகழும் ஆசிரியர்களுக்கு, நினைக்கும் நல்ல விடயங்கள் எல்லாம் வசமாகும் வலிமை சேர வாழ்த்துக்கள் சொல்கிறேன்.

மெழுகுதிரி என ஆசிரியர்களை உவமித்துக் கூறும் பழக்கம் இன்றும் இருக்கிறது.

பிறருக்கு ஒளி கொடுத்து தன்னிலையை இழந்துவிடும் மெழுகுதிரியை எனக்கு பாடம், வாழ்க்கை என்பன சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு உவமையாகச் சொல்ல நான் விரும்பவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. தன்னிலை இழக்காத நிலையில் தான் ஒரு தனிமனிதனால், அவனின் நிலைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாகச் சொல்லமுடிகிறது.

அவர்கள் சிற்பிகளாவே இருக்க வேண்டும். கற்களைத்தான் அவர்கள் செதுக்குகிறார்களே!

இது இப்படியிருக்க யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவராக உதய தாரகை (ஆமா.. அது நான் தாங்க..) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. சென்று பார்த்தேன். அட ஆமால்ல.. நானே தான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் (ஏனிந்த பில்ட்அப் உதய தாரகை??) யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள் பல.

“என்னடா.. இன்னுமா ஆர்டிகல் (article) எழுதிக் கொண்டிருக்கிறாய்? உனக்கு வேற வேலையே கெடயாதா?” என்று தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு நண்பன் கேட்கிறான். “இப்படிக் கேட்பதுதானே உனது வேலை என்பதால், உனக்கு வேலை தந்து கொண்டுதான் இருப்பேன்” என்கிறேன் சிலேடையாக.

– உதய தாரகை

*Forbes சஞ்சிகையின் ஆய்வுபற்றிய நிழற்படத்தொகுப்பின் இணைப்பு: [நாடு வாங்கக்கூடிய ராசிக்காரர்கள்].
* இவ்வருடத்திற்கான (2009) ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டெண்: [முழுப் பட்டியல் விபரம்].

“மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை” அதற்கு 8 மறுமொழிகள்

  1. தெருவிளக்கு Avatar
    தெருவிளக்கு

    இப்போ கொஞ்சம் பதிவிடுதல் கூடுதலாயிருக்கு உங்களிடமிருந்து…

    மகிழ்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்….வாசகனாய் இருக்கிறேன்
    யாழ் தேவி திரட்டியின் நட்சத்திர பதிவாளரானமையிட்டு எனது வாழ்த்துக்கள்(ஒரு நண்பனாய்)
    ஒரு வேண்டுகோள் பரீசீலிக்கவும்….தங்கள் இடுகையில் தங்களின் அடைப்புக்குறிப்பை நீக்கலாமே…..

    “182 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்பட்டியலில், இலங்கை 102 ஆவது இடத்திலும், 134 ஆம் இடத்தில் இந்தியாவும், 141 ஆவது இடத்தில் பாகிஸ்தான் இருப்பதுவும் கவலை”

    இதில் நம் நாடு முன்னேறியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

  2. Ramzy Avatar
    Ramzy

    // பிறருக்கு ஒளி கொடுத்து தன்னிலையை இழந்துவிடும் மெழுகுதிரி… //

    தன்னிலை இழந்த மெழுகுதிரிகள் பற்றி மெழுகுதிர்கள்தான் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் பற்றி உலகம் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த உவமையை ஆசிரியர்களுக்குள் மட்டும் அடக்கவும் முடியாது.

  3. Ramzy Avatar
    Ramzy

    யாழ்தேவியின் இந்தவார நட்சத்திரத்திற்து ஒரு ஓ………………………………… ப்போடுறேன்.

  4. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @தெருவிளக்கு,

    தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல.

    //ஒரு வேண்டுகோள் பரீசீலிக்கவும்….தங்கள் இடுகையில் தங்களின் அடைப்புக்குறிப்பை நீக்கலாமே…..//

    எனது இந்த அடைப்புக்குறி மறுமொழிகள் பல வேளைகளில், வாசகர் இடைத்தொடர்பாடலை (Reader Interaction) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று எண்ணிய நான் சேர்க்கிறேன். ஆனால், அடைப்புக்குறிப்புள் இருக்கும் விடயம் நீளும் போது வாசகரை அலுப்படையச் செய்து விடுவதாக எனது நண்பர்கள் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைத்தான் நீங்களும் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

    வரும் பதிவுகளில் அடைப்புக்குறிக்குள் மறுமொழிகளை வெறும் மூன்று சொற்களுக்குள் குறைக்கலாமென எண்ணியுள்ளேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  5. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    @Ramzy

    //தன்னிலை இழந்த மெழுகுதிரிகள் பற்றி மெழுகுதிர்கள்தான் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் பற்றி உலகம் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த உவமையை ஆசிரியர்களுக்குள் மட்டும் அடக்கவும் முடியாது.//

    ஆசிரியர்கள் எனச் சொல்கையில் அவர்களின் முன்மாதிரியான நடவடிக்கைகள் தாம் மாணவர்களை நெறிப்படுத்துகிறது எனலாம். ஆக, தன்னிலை மறந்த ஒரு மனிதனால், முன்மாதிரிகளைச் சொல்லவோ செய்யவோ முடியுமென எண்ணுவது எந்த வகையில் பொருந்தும்.

    நீங்கள் சொன்னது போல், ஏனையவர்களுக்கு மெழுகுவர்த்தி உவமையை சொல்லிவிடலாம். ஆனால், ஆசிரியர்கள் என்ற நிலையில் அவர்களுக்கு மெழுகுவர்த்தி என்ற உவமை பொருந்தாது என்றே நான் கருதுகிறேன்.

    பலவேளைகளில், தன்னிலை மறக்காத நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆசிரியர்களை நான் சந்தித்துள்ளதாலோ என்னால் மெழுகுவரத்தி என்ற உவமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    //யாழ்தேவியின் இந்தவார நட்சத்திரத்திற்து ஒரு ஓ………………………………… ப்போடுறேன்.//

    தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  6. Ramzy Avatar
    Ramzy

    Interaction க்கு நீண்ட நாட்களாக தனியான தமிழ்ச் சொல் தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. நன்றி.

  7. Ahamed Ajmal Avatar
    Ahamed Ajmal

    வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்….வாழ்த்துக்கள்…..
    மகிழ்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

  8. rustham Avatar
    rustham

    very nice & useful article.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்