எண்ணம். வசந்தம். மாற்றம்.

அர்த்தம் சேர்க்கும் நினைவுகள்

நாம் ஒவ்வொரு கணமும் எண்ணுகின்ற, விரும்புகின்ற, ஆசைப்படுகின்ற, நம்புகின்ற, வெறுக்கின்ற மற்றும் உணர்கின்ற அத்தனை உணர்வுகளையும் யாராலும் பிரதி பண்ணி விட முடியாது. உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது. அது தனிமனிதனின் சூழல் தொடர்பாக மாறும் தன்மை கொண்டது.

எம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் தொடர்ச்சியாகக் குறித்து வைக்கத் தொடங்கினால், அது அழகிய கருத்துக்கள் பொதிந்த அன்பேடாக வருங்காலத்தில் காட்சி தரும். அவை எமக்கு எண்ணங்களின் வலிமையைச் சொல்லிப் போகும். எண்ணங்களின் வலிமையோ, அதன் தன்மையோ எமது அன்றாட தேவைகளைப் பொருத்துக்கூட வித்தியாசப்படலாம். “தோல்வியைக் கண்டிறாதவன், ஒருபோதும் புதிதாக எதையும் செய்ய முயற்சி செய்திருக்க மாட்டான்” என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். யாரோ ஒருவன் இதை அனுபவித்து குறித்து வைத்திருப்பான் அது தாரக வார்த்தையாக, வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லும் “கவிதையாக” மலர்ந்து விட்டது.

village

தொடர்ச்சியாக எம்மனதில் தோன்றும் அர்த்தமுள்ள எண்ணங்களை ஆவணப்படுத்தி வைப்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல என்று பந்தா காட்டுவதெல்லாம் பொருத்தமாகாது. முடியாது என்ற விடயங்களே உலகில் இல்லை.

நிறம் என்ற இவ்வலைப்பதிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக, எழுதிவந்த பதிவுகளில் எழுந்தமானமாக சிலவற்றை அடிக்கடி வாசிப்பதுண்டு. அண்மையில் நான் எழுதிய பதிவுகளை மீண்டும் வாசிக்கும் போது, அந்தப் பதிவை எழுத என்னைத் தூண்டிய சம்பவங்கள் என் கண்ணெதிரே தோன்றத் தொடங்கின. கண்கள் ஈரமாவது உணர்கிறேன். எனக்குள் இருந்த எண்ண உணர்வுகளின் வலிமையை எண்ணி வியக்கிறேன். இந்த உணர்வுகள் பற்றி கட்டாயம் பதிவொன்றை பதிய வேண்டுமென எண்ணினேன் அது இப்பதிவாக உருவாயிற்று.

எண்ணங்களில் ஆரோக்கிய மாற்றம்

எனக்கு ஆக்கபூர்வமான எண்ணங்களில் இருக்கும் ஆர்வம் அலாதியானது. எண்ணங்களில் மாற்றங்களை கொண்டு வருவதுதான் வாழ்தலின் புரிதல் என நான் நம்புகிறேன்.

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் சம்பவங்கள் ஆகியவற்றை கவரும் வகையில் எமது எண்ணங்களை பொருத்தமான வகையில் மாற்றிக் கொள்ளுதல் உயிர்ப்பான நடவடிக்கையே. இவை எண்ணங்களினால் ஆளப்படும் பண்புகள் என்றால் மிகையில்லை.

மாற்றத்தை உண்டுபண்ணுவதற்கு ஒரு எண்ணம் மட்டும் இருத்தல் போதுமற்றது. ஆனால், அந்த ஒரு எண்ணமும் தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது, அவ்வெண்ணம் வலிமை பொருந்தியதாக மாறிவிடும் என்பது மறுக்க முடியாதததே. இவ்வாறு மீண்டும் மீண்டும் நாம் கொண்டுள்ள எண்ணங்கள் எமது மனத்திலும், எம்மைச் சுற்றியுள்ள சூழலிலும் மாற்றங்களைக் கொண்டுவர வழிகோலும். இந்த நிலையை எம்மில் உருவாக்கிக் கொள்ள நாம் “பகிரத” பிரயர்த்தனம் எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

வாழ்தல் என்பது பிரதிபண்ணல் அல்ல. மாறாக புதுமை பண்ணல் ஆகும்.

என்னது பகற்கனவு காண்பதா? என்ற எனது பதிவிலிருந்து

எனக்கு அவளொரு சோலை

எம்மால் சிரமப்பட்டு உழைக்கப்பட்டு பெற்ற பணத்தால் ஒரு பொருளை வாங்கி, அது தொலைந்து போனால் ஏற்படும் வேதனை இருக்கிறதே, சொல்லி மாளாது. எனது கையடக்கத் தொலைபேசி (கொஞ்சம் விலை அதிகமானது தான்) தொலைந்து போனது. அதன் போது, என் உயிர் நண்பி எனக்களித்த அன்பும், ஆறுதலும் இருக்கிறதே, துயர் வந்த வேளை துணையாக நின்றாள் எனக்கு அவள் சோலை – அவள் என் அன்பின் அரிச்சுவடி. (நண்பி என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கிறீங்க.. இதைப் பற்றி நீங்க எங்களிட்ட சொல்லவேயில்ல… இவள் பற்றிக் கட்டாயம் இன்னொரு பிரபஞ்சம் தொடரில் சொல்வேன்.)

அன்பின் வெளிப்பாடு, உணர்வுகளின் பகிர்வாகவே இருக்கும். உணர்வுகளின் பகிர்வு என்பது வெறும் இன்பங்களின் பகிர்வாக மட்டுமே இருக்காது, துன்பங்களும் உணர்வுகளின் உயிர்ப்பான வடிவம் தானே! அன்பினால் பிணைக்கப்பட்ட நிலையில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் ஆறுதல் அளப்பரியதே!

சந்தோசத்தில் ஆனந்தக் கண்ணீர், துக்கத்தில் கண்ணீர் என தன்னை அறியாமலே கண்ணிலிருந்து நீர் வடிக்கும் உங்கள் அன்பான உறவுகளைக் கண்டிருப்பீர்கள். அவர்கள் எம் உணர்வுகளோடு ஒன்றிப்போனவர்கள். அன்பினால் இணைந்த நிலையிலேயே இந்த அழுகையும் சாத்தியமாகும். ஆக, அழுகை உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தியானம் என்பது பொருந்தும் தானே!

அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம் என்ற எனது பதிவிலிருந்து…

கிராமத்தின் ஈரம்

என்னை கிராமிய எண்ணங்களுக்குள் மீண்டும் அழைத்துச் செல்ல என் பதிவின் சில பந்திகள் எனக்கு ஆதாரமாய் இருந்தன. நான் என்னையே நினைவுகளுக்குள் தொலைத்தேன். மகிழ்ச்சியைக் கண்டடைதல் என்ற பதிவில் கிராமிய மக்கள் பற்றி நான் இப்படிச் சொல்லியிருந்தேன். நீங்கள் உங்கள் கிராமத்து அத்தியாயங்களை புரட்டிக் கொள்ள எத்தனிக்கிறீர்களா?

நான் எனது வாழ்க்கையில் கிராம மக்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஒவ்வொருவரினதும் முகங்களில் உண்மையான மகிழ்ச்சி எனும் உன்னதமான உயிர்ப்பைக் கண்டிருக்கிறேன். அவர்கள் எனக்கு மகிழ்ச்சியைப் பற்றி நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எதையும் கற்றுத் தரவில்லை. (என்னது! முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைத் தெரிவிக்கிறது?) அவர்களின் வாழ்வே கற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்றே நான் சொல்வேன்.

இங்கிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி அகராதி புரட்டாதீர்கள். ஒரு கிராமத்தின் ஒரு மனிதரைச் சந்தியுங்கள். அச்சந்திப்பே உங்களுக்கு இங்கிதம் என்பதை மட்டுமல்ல வாழ்வு என்ற அகராதியின் பல பக்கங்களை மனனம் செய்ய ஆதாரமாக அமையும். வாழ்க்கையை இரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை இரசியுங்கள் என்று சொல்லும் அவர்களின் செயல்கள். வாழத் தெரிந்தவர்கள். மகிழ்ச்சியின் புத்திரர்கள்.

அவர்களிடம் புன்சிரிப்பு என்றும் இருக்கும். அன்பே உருவாய் இருப்பார்கள். மகிழ்ச்சிதான் அவர்களின் மொழி. மகிழ்ச்சி அவர்களின் வாழ்க்கையின் ஒளி. அவர்களால் எப்படி இவ்வாறு மகிழ்ச்சியாய் இருக்க முடிகிறது? யார்தான் இவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள்…? – இதுவும் கேள்விகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதுதான். நான் இவர்களின் வாழ்வின் மீதான அணுகுகையை எண்ணி பல வேளைகளில் வியந்திருக்கிறேன்.

இப்போது, நீங்களும் என்கூடவே உங்கள் கிராமிய வாழ்வையும் அங்கு நீங்கள் சந்தித்த அனுபவங்கள், பாத்திரங்கள் என்பவற்றையெல்லாம் உங்கள் மனதில் அசை போட ஆரம்பித்திருப்பீர்கள். அற்புதமான அனுபவம் தானே அது…. பாதையால் செல்லும் போது, எங்கு போகிறோம் என விசாரித்து வீட்டிலுள்ளவர்களையும் விசாரித்து கவனமாக பாதையோரமாக போகும் படி அன்புக்கட்டளையிடும், அன்பின் மொழி கிராமத்தின் சொந்தமல்லவா? இவை உங்கள் கிராம வாழ்க்கையிலும் நீங்கள் பெற்றுக் கொண்ட வரமல்லவா?

நாம் பெற்ற அனுபவங்களை மீள எண்ணுகையில் இருக்கும் சந்தோசம் அலாதியானது. ஆனால், அந்த அனுபவங்களை குறித்து வைத்து அதனை பின்னொரு காலத்தில் படித்துப் பார்க்கும் போது ஏற்படும் அழகிய களிப்பு அதையும் விட அலாதியானது. வாழ்க்கை வாசிக்கப்பட வேண்டியது தான்.

உணர்வுகளைப் மீள உயிர்ப்பாக்கிய நினைவுகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. ஆனந்தமான அழகிய நினைவுகள் – உணர்வுகள். நினைவுகளில் காதல் கொண்டு மெய் மறக்கிறேன்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்