வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்

“நான் வாசித்த அனைத்தினதும் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார்.

இன்று உலக புத்தக தினம்.

உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக முக்கியமானது.

வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள்.

உங்கள் யோசனைகளின் தோற்றுவாயாக மனச்சித்திரங்கள் வரும்.

அந்த மனச்சித்திரங்களின் விசித்திரம், வாசிக்கின்ற நூல்கள் மூலமே நெறியாள்கை செய்யப்படுகிறது.

உங்களின் வாழ்க்கையின் வருங்கால பெறுமதியை நிர்ணயிக்கும் கூறுகளாக நீங்கள் வாசிக்கும் நூல்கள் இருக்கின்றன.

உடலுக்கு உடற்பயிற்சி எப்படி வலிமை சேர்க்கிறதோ,

மூளைக்கு வலிமை சேர்ப்பது வாசிக்கும் உங்கள் செயலாகிறது.

புத்தகங்களை வாசிக்கும் உங்களின் தேட்டம், உங்களின் ஞாபகங்கள், யோசனைகளை நெறிப்படுத்தும்.

அடுத்தவரின் கவலை, வாழ்வை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை வாசிப்பு கொண்டு தரும்.

உங்களுக்கே உரித்தான யோசனைகளை உருவாக்க உபயமாக வருவது நீங்கள் வாசிக்கும் நூல்கள் தாம்.

உங்களின் மனத்தின் அமைதியையும் ஓர்மையையும் சாத்தியமாக்கும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு.

வாசிப்பது என்பது, மனச்சித்திரம் வரைவதாகும்.

புத்தகங்கள் வேண்டி நிற்பது செயலை; அவை சொல்பவற்றை மனத்தில் கொண்டுவரும் ஆற்றலை.

மனவுளைச்சலை 68 சதவீதம் குறைக்கக்கூடிய ஆற்றல், புத்தகங்களை வாசிப்பதால் தோன்றுகிறது என,

இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன.

மூளையை கட்டமைத்து, நீண்ட நாள் நினைவுகளை தேக்கி வைப்பதை, புத்தக வாசிப்பு கூர்மைப்படுத்துகிறது.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களை போரின் வடுக்களிலிருந்து மீள வைப்பதற்காக,

அமெரிக்க நூலக சேவை, இராணுவ வீரர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாசிக்கச் செய்தது.

அந்த வீரர்களின் மனத்தில் அமைதியும், ஆர்வமும், அழகியலும் தோன்றியது என்பது வரலாறு.

ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டுமென நீங்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால், அதைத் தொடங்குவது உங்களால் முடியாமல் போயிருக்கலாம்.

இன்று அதற்கான நேரம், நீங்கள் விரும்பிய அந்தப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

ஓரிரண்டு பக்கங்கள் வாசியுங்கள்.

ஒவ்வொரு நாளும் வாசியுங்கள்.

சின்னச் சின்னதாய் தொடங்குங்கள். சிகரம் எட்டுவீர்கள்.

வாசித்தவைகளை உங்களை நேசிப்பவர்களோடு பகிருங்கள்.

உங்கள் மனத்தில் தெளிவு பிறக்கும், மூளையில் நினைவு மையம் கொள்ளும்.

நல்ல புத்தகங்களை வாங்குங்கள். அல்லது நூலகங்களில் இருந்து இரவல் எடுங்கள்.

PDF ஆய் கேட்காதீர்கள். PDF ஆக பகிராதீர்கள்.

முடிந்தால், Kindle ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்யுங்கள்.

எல்லாம் நெறிப்படும்.

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

“ஆறே
பார்க்காதவர்களை
அருவி
பார்க்காதவர்களை
கடல்
பார்க்காதவர்களை
எப்போதும்
பார்த்துவிடுகிறது
மழை.”

இந்தச் சாதாரண வரிகளை வாசிக்கின்ற போது,

உங்களில் தோன்றும் மனச்சித்திரத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

தாரிக் அஸீஸ்
23.04.2021

வாசியுங்கள்.

நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்

Instagram Post - 1

நிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.

வாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.

எப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.

பதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.

பரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.

நான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் கொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.

எனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.

இன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.

என் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.

எழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.

என் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.

தொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.

தாரிக் அஸீஸ்

உன்னால் முடியுமா?

நாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியாக,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”,  “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர்.

கடைசியாக உங்களிடம் யாராவது, “உன்னால் இது முடியும்” என ஊக்குவித்த தருணங்களை நினைவுகூற முடிகிறதா?

எம்மைச் சூழவுள்ளவர்களால், எந்தளவிற்கு நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்?

நீங்கள் கடைசியாக, யாரையாவது ஊக்குவித்த தருணங்கள் நினைவில் இருக்கிறதா? “உன்னால் முடியும்”, “உன்னை முழுமையாக நம்பு” என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்களா?

இதுதான் சரியான தருணம், உங்களைச் சூழவுள்ளவர்களை ஊக்கப்படுத்த. அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆர்வங்களுக்கு ஆயுள் கொடுப்பதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டியிருக்கிறது.

உங்கள் மாணவர்களிடம் “உங்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதையுங்கள். நண்பனிடம், அவன் பல காலமாக செய்ய வேண்டுமென நினைத்துள்ள வணிக நிலை வெற்றி பெறும் என அவனை ஊக்கப்படுத்துங்கள்.

நீங்கள் ஊக்கப்படுத்துவதனால், ஒருவருடைய வாழ்க்கை அழகிய சோலையாக பரிவர்த்தனை செய்யப்படலாம். இதுதான் தருணம். உடனே சென்று, ஊக்குவிப்புப் படலத்தை விரைவுபடுத்துங்கள். நாளை எல்லோருக்கும் விடியட்டும்.

தாரிக் அஸீஸ்

நிறத்திற்கு வயது பத்து!

நான் எனதிந்த “நிறம்” வலைப்பதிவில் முதற் பதிவிட்டு, இன்றோடு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.

வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தொடங்கிய காலமது. எனது எண்ணங்களுக்கு முகவரி கொடுக்க வேண்டும். முகவரியை உலகறியச் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு வெகுவாகப் பொருந்திய ஊடகமாக வலைப்பதிவு தெரிந்தது.

எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

அதனை நான் தெரிவு செய்தேன்.

தொடர்ச்சியாக பத்து வருடங்கள் நிறத்தின் மூலமாக உங்களைச் சந்தித்தேன். பல்வேறு தேசங்களிலிருந்தும் குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக நிறம் பற்றி நீங்கள் சொல்லியனுப்பும் செய்திகள், மட்டிலா மகிழ்ச்சியை தரும்.

இன்னும் பல நேரங்களில் “நீங்களா அந்த நிறம்?” என நேரில் கண்டு அறிமுகமாபவர்கள், நிறம் பற்றிச் சொல்லும் அழகிய நிலைகள் ஆனந்தம் தரும்.

நிறத்தின் தொடக்கம் தொட்டு, பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் நான் உங்களோடு பேசியிருக்கிறேன். எண்ணங்களை எழுத்துக்களால் செதுக்கும் போது ஈற்றில் எழும் உணர்வு பற்றி சொல்லிவிட முடியாது. அனுபவிக்க வேண்டும். இந்த வசனத்தை நான் எழுதியதும் கூட அந்த அழகிய அனுபவம் அரும்பிய நிலையில் தான்.

கோடுகள், வளைவுகள் கோர்த்துச் செய்யப்படும் எழுத்துக்களின் கோலங்கள் பற்றிய எனது வேட்கை, மனத்திற்கு இதமாகியது. எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

எல்லாமே எழுத்தினால்தான் ஆளுகை செய்யப்படுகின்றது என்பதை சற்று ஆழமாக எமது சூழலை அவதானித்தால் அறிந்து கொள்ள முடியும். எழுதுவதை ஒரு தியானமாகவே நான் பார்க்கின்றேன்.

நிறம் எழுத்தினால், அழகிய எண்ணங்களுக்கு வண்ணம் சேர்க்கும். அது எல்லாமும் ஒன்றாகி வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்கும்.

நான் இங்கு வாசிக்க விரும்புவதை எழுதுகின்றேன். நான் விரும்பி வாசிக்கின்றவை பற்றியும் எழுதுகின்றேன். இப்படியும் எழுதலாம் என்றும் நான் பரீட்சித்துப் பார்க்கின்றேன். நிறம் என்பது அது தோன்றுகின்ற நிலையில் வெவ்வேறு பெயர்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நிறமும் அப்படித்தான்; வாழ்வின் அழகிய நிலைகளின் அற்புதங்கள் பற்றிய விடயங்களை ஒவ்வொரு நிறமாக இது சொல்லிக் கொண்டேயிருக்கும்.

எழுத்துக்கள் எப்போதும் இலகுவானதல்ல; வாழ்க்கை போல. கடினமாக உணர்ந்து வியர்வை சிந்தி வாழ்க்கையை வசப்படுத்தும் போது வருகின்ற அந்த அழகிய ஆறுதலையும் ஆனந்தத்தையும், எழுத்துக்கள் வசனங்களாகக் கோர்க்கப்பட்டு வாசனை தரும் போது உணர முடிகிறது.

இங்கு எல்லாமுமே சாத்தியம் தான். கொஞ்சம் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. முயற்சியை நமக்கு யாராலும் தர முடியாது போலவே, நாமும் அதனை எங்கும் வாங்கவும் முடியாது.

எமக்காக யாரும் முயற்சிக்க வேண்டுமாயினும் கூட அதற்கும் நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

பயணங்கள் முடிவதில்லை. பயணம் தொடரும். நிறத்தோடு தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

தாரிக் அஸீஸ் / உதய தாரகை

பத்தாவது வருடத்தில் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம்.

ஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.

niram-10

பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்ற காலமது. வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கவிதையொன்றையும் வைத்து அனுப்பியிருந்தேன். “பாடசாலை” என்ற தலைப்பில் நான் கவிதை என எழுதிய அந்த வரிகளை பத்திரிகையில் அச்சாகக் காண வேண்டுமென்ற ஆவல் அப்போது எனக்கு அலாதியாயிருந்தது.

நாளாந்தம் தினசரிப் பத்திரிகைகளை அப்பா வாங்கிக் கொண்டுவருவது வழக்கம். கடிதத்தை தபாலில் அனுப்பிய நாளிலிருந்து, சிறுவர் பகுதி வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளின் பத்திரிகையை அப்பா கொண்டு வருகின்ற போதே ஆவலுடன் வாங்கிப் படித்து விடத் துடிப்பேன்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு வருடம் பறந்தது. எனது ஆக்கம் பத்திரிகையில் வரவில்லை. ஆனாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் என் பார்வையை வைத்துக் காத்திருந்தேன். ஆனாலும், எனது ஆக்கம் வரவேயில்லை. மௌனம். கவலை.

ஒரு நாள், ஏதோவொரு பொருளை வாங்கச் சந்தைக்குச் செல்கின்ற வேளையில், என் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கற்கின்ற மாணவர் ஒருவர் என்னைக் கண்டு, “இன்டைய வீரகேசரியில உங்கட பெயர் வந்திருக்கு. பாக்கலியா?” என்றார். கேட்ட மாத்திரத்திலேயே சந்தையிலிருந்து வீடு நோக்கி விரைந்தேன். பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன்.

அட.. ஆச்சரியம்.. தபாலில் அனுப்பி இரண்டு வருடங்களின் பின் எனது ஆக்கம், வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமாயிருந்தது. அதனைக் கண்ட போது, என் மனத்தில் மகிழ்ச்சி, குதூகலம் என அனைத்து இன்பங்களும் பிரவாகமெடுத்தன. அப்போதிருந்த மனநிலையை விபரிக்க முடியாது, அனுபவிக்க வேண்டும்.

அன்று அப்படித் தொடங்கிய எனது எழுத்தின் பயணம், வெவ்வேறு பரிமாணங்களை வெவ்வேறு காலப்பகுதியில் எடுத்துக் கொண்டது. ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் கவிதை எழுதும் மாணவராக, பாடசாலையின் மாணவர் சஞ்சிகையின் ஆசிரியராக, தேசிய தகவல் தொழில்நுட்ப சஞ்சிகையின் இணை ஆசிரியராக, தேசிய ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளராக, தேசிய சிறுவர் சஞ்சிகையின் கட்டுரையாசிரியராக, “வெளிச்சம் வேண்டாம்” நூலின் ஆசிரியராக என நான் கொண்ட எழுத்தின் நிலை சார்ந்த பாத்திரங்கள் ஏராளம்.

அத்தோடே எனது இணைய நிலையிலான எழுத்துக்களும் தொடர்ந்து கொண்டு வந்தன. நிறத்தில் நான் எண்ணங்களை எழுதிச் சேமிக்கிறேன். அணுவிலிருந்து அகிலம் வரை அனைத்தும் பற்றிய புரிதல்களை புதுநுட்பமாய் தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சொல்லிப் பூரிப்படைகிறேன்.

நான் எழுத்துக்களின் காதலன். ஒவ்வொரு நாளும் நான் கைகளால், பல மொழிகளின் எழுத்துக்களையும் எழுதி அழகு பார்க்கிறேன். புதிய வகையில் எழுத்துக்களுக்கு வடிவம் சேர்க்கலாமா என ஆய்ந்து பார்க்கிறேன். எழுத்துக்கள், எப்படி தமது வடிவங்களைப் பெற்றுக் கொள்கின்றன என தேடிப் பார்க்கிறேன். எழுத்துக்களை வரைகிறேன். அவற்றின் கட்டமைப்புக்களை கவனமாக அவதானிக்கிறேன். எழுத்துக்கள் கொண்ட எழுத்துருக்களை நிரலாக்கம் செய்து உருவாக்கிறேன். எழுத்துக்களை நான் வாசிக்கிறேன். நீங்கள் நான் எழுத்துக்களைச் சுவாசிப்பதாக எடுத்துக்கொண்டாலும், எனக்கு இஷ்டமே. எனது எழுத்துக்களுடனான பயணத்தில் ஒரு பகுதியை இங்கு காணலாம். ஒவ்வொரு நாளும் நான் அங்கு பயணிப்பேன்.

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியது போல், எழுதுவதை ஒரு தியானமாகவே நான் காண்கின்றேன். தியானிப்பதால், நமது மனவானில் தெளிவு பிறக்கும் என்பது உலகறிந்த, யாருமே மறுக்காத உண்மை. ஆக, அடிக்கடி தியானித்திருந்தல் அலாதியான இன்பம் தருமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக, நிறத்தில் எண்ணங்களும் அந்த எண்ணங்களால் வசந்தமாக உருவெடுக்கின்ற மாற்றங்கள் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். எனது எழுத்துக்களை நேசிக்கின்ற உங்களிடமிருந்து நான் பெறுகின்ற மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள், கீச்சுக்கள், தகவல்கள், செய்திகள் என்பவற்றை மனதோடு நேசிக்கிறேன். முடிந்தளவில் எல்லா மின்னஞ்சல்களுக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன் என்று நம்புகிறேன்.

பத்தாவது வருடத்தில் நிறம் காலடியெடுத்து வைக்கின்ற நிலையில், எனது ஒன்பது வருட கால நிறத்தில் சொல்லிய எழுத்துக்களால் நான் கண்டு கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன்.

வலைப்பதிவு, வலைப்பூ, ப்ளாக் என பல பெயர்கள் ஒரு காலத்தில் யாவரும் பிரபலமாகப் பேசிய ஒரு விடயமாயிருந்தது. யாவரும் பேசுகின்ற விடயத்தை எல்லோரும் செய்வதற்கு முற்படுவதென்பது தொன்று தொட்டு வருகின்ற ஒரு பழக்கமாகும். ஆனால், நான் நிறத்தை அந்தப் பிரிவிற்கு அடக்க விரும்பவில்லை. நான் வாசிக்க விரும்புவதை எழுதுவதால், நிறம் எப்போது, தனக்கு நிறமொன்றைப் பூசிக் கொள்கிறது.

“இப்போது, வலைப்பூ இல்லை, சோசியல் மீடியாதான் எல்லாம்” என்று நீங்கள் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், அந்தக் கூற்றில் எந்த உண்மையும் கிடையாது. எல்லாமே தோற்ற மயக்கங்கள். வலைப்பூக்கள் சார்ந்த எழுத்துக்களுக்கு எப்போதுமே வாசகர்கள் இருக்கிறார்கள். இந்த அடிப்படையான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் பிறக்கும்.

நிறத்தை வாசிக்கின்ற வாசகர்களின் வியாபிப்பும் அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வைகளையும் அவர்களின் மின்னஞ்சல் வழியாக அவர்கள் எழுதியனுப்புகின்ற போது, நான் மகிழ்ச்சி கொள்வேன். தங்கள் நேரத்தைத் தந்து நிறத்தை வாசித்து, பின்னர் இன்னும் நேரமெடுத்து அது பற்றி எழுத எத்தனிக்கின்ற ஏற்பாட்டை நான் வியப்போடே பார்க்கிறேன்.

நிறத்தில் நான் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போது, நான் என் தோழனோடு பேசுவது போன்ற தொனியிலேயே எழுதுகிறேன். அதுவே எழுத்திற்கும் எனது எழுத்தின் குரலுக்கும் அசலான வடிவத்தைக் கொடுக்குமென நான் திடமாக நம்புகிறேன்.

நாம் நாமாக இருத்தலே இங்குள்ள மிகக் கடினமான செயல். எழுத்துக்கள் கொண்டு, எமது அசலான குரலுக்கு வானம் கொடுப்பது மிக முக்கிய பண்பாகவே நான் காண்கிறேன்.

தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் செய்வதினால் தோன்றுகின்ற நன்மைகள் பற்றி நான் நிறத்தில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் எழுதுகின்ற பழக்கத்தை கொண்டு வருகின்ற நிலையில், எமது எண்ணங்களை லாவகமாகவும் இயல்பாகவும் சொல்லக்கூடிய மொழிநடையொன்று எம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனைப் பற்றிக் கொண்டு, எமது எண்ணங்களை, உலகோடு அசலான குரலில் எடுத்தியம்பலாம்.

வலைப்பதிவு இடுகின்ற நிலையை கருத்துச் சொல்கின்ற ஏற்பாடாக நான் கருதவில்லை. டெமோகிரடிஸ் சொன்னது போலே, “இங்கு எல்லாமே அணுக்களும் வெற்றிடங்களும்தான். ஏனையவை யாவுமே கருத்துக்கள்”. ஆனால், நான் வலைப்பதிவு இடுகின்ற நிலையை, என்னைச் சூழவுள்ள உலகின் நிலைகளை நான் காண்கின்ற வகையில் உள்வாங்கி, எனது கோணத்தில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்ற ஏற்பாடாகவே காண்கின்றேன். நான் நிறத்தில் எழுதிப் பகிர்கின்ற விடயங்கள், நான் வாழ்கின்ற என்னை சூழக்காணப்படுகின்ற உலகின் பாலான என பார்வை. இது எனது கருத்தல்ல என்பதைக் கவனிக்க.

நான் காண்கின்ற உலகை என்னால் மட்டுமே காணமுடியும் என்பது போல் நீங்கள் காண்கின்ற உலகை உங்களால் மட்டுமே காணமுடியும் என்பது உண்மையாகும். ஆனால், நான் காண்கின்ற உலகம் பற்றிய என புரிதல்களை உலகோடு பகிர்கின்ற நிலையில், எனது பார்வையும் உலகின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்து புதிய பார்வையாகக்கூடத் தோற்றம் காணலாம்.

நிறம் என்பது எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் ஆர்வத்தின் நீட்சி. இந்தத் தேடல், தொலைந்ததை தேடுகின்ற தேடலா? அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா? என்பதை காலம் சொல்லும்.

தொடர்ந்தும் நிறத்தோடு இணைந்திருங்கள். நன்றி.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பத்து என்பது இருபதின் பாதியா?

மேற்கோள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாம் வாழ்கின்ற உலகின் ஏற்பாடுகள் எல்லாமே, வெறுமனே கருப்பு அல்லது வெள்ளை என்ற கட்டங்களைத் தாண்டி சங்கீரணமான நிலைகளைத் தன்னகம் கொண்டுள்ளன.

ஆனால், இந்தச் சங்கீரணமான ஏற்பாடுகளில் சரளமான நிலைகளை அடையாளங் கண்டு கொண்டு, அவற்றை புரிந்து கொள்வதிலேயே மன நிம்மதி தங்கியிருக்கிறது எனலாம்.

ஆறாம் தரத்தில் படிக்கின்ற ஒரு மாணவன், அவன் மூன்றாம் தரத்தில் படித்த நூல்கள் யாவற்றையும் இருதடவை படித்துக் கொண்டால், ஆறாம் ஆண்டிற்கான அத்தனையும் படித்துவிட்டான் என்று பொருளாகாது.

அதுபோன்றே, மூன்றாம் தரத்தில் கற்கின்ற மாணவன் ஒருவன், ஆறாம் தரப் பாட நூல்களின் அரைவாசியைக் கற்றுக் கொள்வதால் மூன்றாம் தரத்திற்கான மொத்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டான் என்று எடுத்துக் கொள்ளப்படாது.

இந்த அடிப்படையான நிலையின் அம்சங்களைத்தான் வாழ்வின் பல விடயங்களை எமக்கு தந்திருக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட விடயம் தோல்வியடைய, இன்னொரு நேரத்தில் இன்னொருவரால் செய்யப்படும் அதேவிடயம் வெற்றியுமடைகிறது. இந்த ஏற்பாடுகள் பற்றிய புரிதல் என்பது சங்கீரணமான சங்கதி.

ஆனாலும், இங்கு சங்கீரணங்கள் பற்றி முறைப்படுவதிலோ, சங்கீரணங்கள் என்று அத்தனை விடயங்களையும் ஒதுக்கி வைப்பதிலோ எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இங்கு தேவையானது, செயல். வாழ்க்கையின் சங்கீரணங்களை எளிமையாக்கின்ற செயல்.

கருவிகளின் வியாபிப்பு, மொழியின் பயன்பாடு என எல்லாமே, சங்கீரணமான வாழ்வின் அம்சங்களை எளிமையாக்கிக் கொள்ள மனிதன் எடுத்துள்ள ஏற்பாடுகள் தான். ஆக, இங்கு செயல் என்பது தான் ஏற்பாடு. அதுவும் ஆக்குகின்ற செயல்.

இங்கு புதியவைகள் உருவாக்கப்பட வேண்டும். சங்கீரணங்களை அகற்றிவிட்டு விடயங்கள் சரளமாக்கப்பட வேண்டும். அது விஞ்ஞானம் என்றாலும் விவசாயம் என்றாலும் சங்கீரணம் அகற்றப்பட்ட நிலையில், பலரையும் அது கவரக்கூடும், அதுவே, அனைவரும் போஷிக்கின்ற, வியாபிக்க வேண்டுமென்று அக்கறை கொள்கின்ற விடயங்களாக மாறிவிடும்.

இங்கு எல்லாமே, புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதில்லை. புத்தம் புதிதாக நீ ஒரு காகிதத்தை உருவாக்க, நீ ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். அழித்து கிழித்து ஆக்கம் தொடங்காது. அது சாத்தியமாகாது. பலதும் சேர்ந்து புதியதாய் மலர்கின்ற போது, எல்லாமே இங்கு சாத்தியமாகும்.

எல்லாமே சாத்தியமாகும் என்ற வெறும் நம்பிக்கை எதையும் கொண்டு தராது என்பது போன்றே, எல்லாம் சாத்தியமாகாது என்ற வெறும் நம்பிக்கையும் எதையும் கொண்டு தராது. நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற போது, இங்கு எல்லாமே புதிதாய் மலரும்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

நேரமில்லை என்ற நடப்பு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நேரம் பற்றிய விசாரிப்புகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கின்றன. இங்கு “எனக்கு நேரமில்லை” என்று சொல்வதே ஒரு நடப்பாக மாறிவிட்டுள்ள நிலை காணப்படுகின்றது.

உண்மையில் நேரமில்லை என்று சொல்வதன் மூலம், நாம் எதனை உணர்த்துகிறோம்?

ஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை என்கின்ற கணத்தில், அந்த விடயத்தைச் செய்வதற்கு இன்னொருவருக்கு நேரமிருக்கிறது. ஆக, இரண்டு பேருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரங்கள் தான் இருக்கின்றன.

அப்படியானால், இங்கு ஏதோவொரு வகையில் வழு இருக்கிறது. நேரமில்லை என்று சொல்வது என்பது ஒருவரின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்த விரும்பாத நிலையில், அதனை எடுத்தியம்பும் முறையாக “நேரமில்லை” பாவிக்கப்பட்டுவிடுகிறது.

ஆனால், நீங்கள் அந்த விடயத்தைச மேற்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் இங்கு முதன்மையானது. அதனை யாரும் குறிப்பிடுவதாய் சான்றுகள் இல்லை.

Landscape

Landscape

நேரம் என்பது அரிதான ஒரு விடயம் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், எடுத்ததெற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரு நடப்பாகச் சொல்லி அதனை இம்சிப்பதும் பொருந்தாது என்றே தோன்றுகிறது.

உங்களுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் சந்தர்ப்பத்தில், அதற்கான நேரமும் கிடைத்துவிடுகிறது. இங்கு தெரிவுதான் நேரத்தைக் கொண்டு தருகிறது.

நேரமில்லை, பிஸியாக இருக்கிறேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, உங்கள் பலவீனத்தை உலகுக்கு வெளிக்காட்டுவதை யாவரும் தவிர்க்கலாம். இங்கு தெரிவுகள் தான் எல்லாவற்றினதும் அடிநாதமாய் அமைகின்றன. தெரிவுகளை அற்புதமாகச் மேற்கொள்கின்ற ஆற்றலை வளர்த்தலே, நேரத்தைக் கடிந்து கொள்கின்ற வாய்ப்பை இழிவளவாக்கும்.

சொல்ல மறந்து விட்டேன், நேரம் என்பதுகூட ஒரு எண்ணக்கருவே – அதனால் அதுவொரு தோற்ற மயக்கமாகவே காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன்.

  • தாரிக் அஸீஸ்

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

உத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 1 செக்கனும் தேவைப்படும்.) [?]

படைப்பாக்கம் பற்றிய புரிதல் என்பதும் அதன் தளத்தில் எம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் வேறுபட்ட இரு விடயங்கள்.

இங்கு — அதைச் செய்வேன், அல்லது அதை இப்படி அவன் செய்திருக்கலாம், அல்லது அவர்கள் ஏன் இப்படி இதைச் செய்யவில்லை, அல்லது அவளுக்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதா? என்றவாறான மொழியாடல்களுக்குப் பஞ்சமில்லை.

ஆனால், உண்மையில், செயல் என்பது வேறு. பேச்சு என்பது வேறு. இந்த இரண்டும் பற்றிய விடயங்களை நாம் வெவ்வேறு தளங்களிலிருந்தே அறிய முனைய வேண்டும்.

படைப்பாக்கம் பற்றிய புரிதல் உண்டாக வேண்டுமென்றால், அது தொடர்பாக புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் அதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு வாசிப்பு என்பது முக்கியமானதுதான். ஆனால், வெறும் வாசிப்பு பயனில்லாதது.

படைப்பாக்கம் என்பதே ஒரு வினை. அதுபற்றி அறிந்து கொண்டு, எதையும் படைக்காமல் எங்கே வினையிருக்கிறது? விளைவிருக்கிறது?

கற்பனைக் கட்டுரைகள் — நான் வைத்தியனானால்.. நான் பறவையானால்.. என்று தொடங்கி, எழுதுகின்ற வித்தையை பாலர் வகுப்பு பிள்ளைகளும்தான் சொல்லிப் பழகுகின்றார். ஆக, பேச்சு என்பது இங்கு மலிவானது. அது தொடர்பான வினைதான் இங்கு விலை அதிகமாய் இருக்கிறது.

ஒரு விடயத்தை என்னால் செய்ய முடியும் என நம்பிக்கை கொள்வது ஒரு வகை. அந்த விடயத்தை செய்து, அந்த நம்பிக்கைக்கு ஆயுள் கொடுப்பது இன்னொரு வகை. இதில் பிந்திய வகையில் தான் நம்பிக்கை, தனக்கு அர்த்தம் பூசிக் கொள்கிறது.

tumblr_npoinkmkuo1sfie3io1_1280

ஒரு விடயத்தைச் செய்யலாம் என்ற நம்பிக்கைக் கொண்டு, அது பற்றி அறிந்து செய்யத் தொடங்குகின்ற நிலையில், பிரயோக ரீதியான பல இடையூறுகள் தோன்றலாம். அவற்றை எல்லாம் சமாளித்துச் சரி செய்து அந்த விடயத்தை செய்து முடிக்கின்ற போதே, படைப்பாக்கம் பற்றிய புரிதல் மேலோங்குகிறது.

இங்கு யாருக்கும் எல்லாமும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் ஏதாவதொன்று தெரியும். இந்த இயல்பான உண்மையை நாம் உணர்ந்து கொள்கின்ற நிலையில், படைப்பாக்கம் பற்றிய உத்வேகம் தானாகவே குடிகொண்டுவிடும்.

ஒரு விடயத்தை செய்வதன் மூலமே, அந்த விடயம் தொடர்பான தெளிவைப் பெற முடியும். எடுத்துக் காட்டாக, எழுதுவதை எடுத்துக் கொள்வோம். எழுதுவது பற்றி அறிய வேண்டுமா? தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா? தொடர்ந்து வரைய வேண்டும்.

நான் ‘தொடர்ந்து’ என்பதை இங்கே வலியுறுத்திச் சொல்கின்றேன். நாளாந்த பழக்க வழங்கங்களில் ஒன்றாக எமது படைப்பாக்க நிலைகள் அமைகின்ற போது, அந்தப் படைப்பாக்கத்தின் பாலான தேர்ச்சி பெறுதலின் தெளிவை நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.

கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியிலிருந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு, ஒவ்வொரு எழுத்தழகியல் எண்ண வரைபை உருவாக்கி, வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டேன். இன்று அதன் 84 ஆம் நாள்.

இந்தத் தொடர் படைப்பாக்கப் பயிற்சியின் மூலமாக வரைதல் பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு தொடர்ச்சியாகக் கிட்டுகின்றது. அதன் நுணுங்கள் பற்றிய தேர்ச்சியும் எனக்குள் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக வரைய வேண்டும் என்கின்ற ஒழுக்கமும் துணையாகி வருகின்றது.

ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இந்தப் படைப்பாக்க நிலையில் என்னை உட்படுத்துகின்ற போது, உத்வேகம் என்பது தானாகவே ஒட்டிக் கொள்கிறது. இதுவோர் அழகிய அனுபவம்.

உத்வேகத்தின் தேவையும் பெறுகையும் நீங்கள் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக செய்வதில் காட்டும் ஒழுக்கத்திலேயே கூடிவருகிறது.

இங்கு படைப்பாக்கம் என்பது போற்றப்பட வேண்டும். எப்படிப் படைப்பாக்கத்தைப் போற்றுவது? என்கின்ற கேள்வி தொக்கி நிற்கிறது. படைத்தலின் மூலம் படைப்பாக்கம் உண்டாகிறது. புகழ்ச்சி கொள்கிறது. பெருமை அடைகிறது. போற்றப்படுகிறது. படைப்பதே, படைப்பாக்கத்தைப் போற்றுகின்ற ஒரேவழி.

இனி உத்வேகம் தேடி அலைவது, அல்லது எதைப் படைப்பது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நாம் குறைக்கலாம், அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். இங்கு எல்லோரிடடும் எல்லாமும் பற்றிய கருத்து இருக்கிறது. ஆனால், எத்தனை பேரிடம் கருத்துக்களை வாங்குகின்ற படைப்பிருக்கிறது?

கருத்துச் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நுகர்வோர். அவர்களோடு நீங்களும் சேர்ந்து கருத்துக்களைச் சொல்லப் போனால், கடைசியில் வெறும் கருத்துக்கள் தான் எஞ்சியிருக்கும். காரியம் எதுவும் நடந்திருக்காது.

வெறும் கருத்துக்களை விடுத்து, கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாம். படைக்கலாம். படைத்ததைப் பகிரலாம். அதுவோரு எழுத்தாகவிருக்கலாம், சித்திரமாகவிருக்கலாம், கடிதமாவிருக்கலாம். இங்கு கருத்துக்களின் சேர்க்கையின் மூலம் தோன்றுகின்ற படைப்பாக்கத்தின் தேவையே இருக்கிறது.

நீங்கள் படைப்பதையா அல்லது நுகர்வதையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.

  • தாரிக் அஸீஸ்

எனது எழுத்தழகியல் வரைபுகளை இங்கே காணலாம்.
இன்ஸ்டகிராமில் என்னை இங்கே பின் தொடரலாம்.


இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –